ரூ.240 கோடி நிதி திரட்டி யூனிகார்ன் அந்தஸ்தை அடைந்த சென்னை நிதி சேவை நிறுவனம்!
சென்னையைச் சேர்ந்த நிதி சேவை நிறுவனம் வெரிடாஸ் பைனான்ஸ், ரூ.240 கோடி நிதி சுற்றை பெற்றதை அடுத்து யூனிகார்ன் அந்தஸ்தை அடைந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த நிதி சேவை நிறுவனம் Veritas Finance, ரூ.240 கோடி நிதி சுற்றை அடுத்து யூனிகார்ன் அந்தஸ்து பெற்றுள்ளது. இந்த சுற்றில், அவெடஸ் இ.எல்.எப், லோக் கேபிடல், இவால்வென்ஸ் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.
புதிய முதலீட்டை அடுத்து வெரிடாஸ் சந்தை மதிப்பீடு, ரூ.8,500 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், யூனிகார்ன் அந்தஸ்து பெற்றுள்ளது.
“கிராமப்புற இந்தியாவில் குறு நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் வர்த்தகத்தை உருவாக்கும் எங்கள் திறனுக்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த மைல்கல் அமைகிறது. எங்கள் சந்தை மதிப்பீடு ரூ.8,500 கோடியை கடந்துள்ளது முக்கியம் என்றாலும், நாங்கள் ஏற்படுத்தி வரும் தாக்கமே பெருமை அளிக்கிறது,” என்று நிர்வாக இயக்குனர் மற்றும் சி.இ.ஓ அருள்மணி கூறியுள்ளார்.
வெரிடாஸ் 7,500க்கும் மேலான ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனமாக வளர்ந்துள்ளது. மொத்த வருவாய் ரூ.1000 கோடி கொண்டுள்ள இந்நிறுவனம், 400 கிளைகள் மற்றும் 2 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
2024 நிதியாண்டில் நிறுவனம் ரூ.1,124 கோடி மொத்த வருமானம் ஈட்டியுள்ளது. வரிக்கு பிந்தைய லாபம் ரூ.245 கோடி. ரூ.3,695 கோடி கடன் வழங்கியுள்ளது.
வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி திரட்டும் நோக்கத்தோடு அடுத்த 12 மாதங்களில் பங்கு வெளியீட்டிற்கு நிறுவனம் தயாராகி வருவதாக அருள்மணி கூறியுள்ளார். பங்கு வெளியீட்டு ரூ.1,500 முதல் ரூ.2,000 கோடி அளவில் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெரிடாஸ் நிறுவனம் தற்போது, எம்.எஸ்.எம்.இ கடன், வீட்டுக்கடன், வாகன கடன் வழங்கி வருகிறது. நிறுவனம் ஈட்டுறுதி இல்லாத கடன் பிரிவில் செயல் மூலதன கடன் வழங்கி வருகிறது. அதிக வட்டியில் கடன் பெறும் நிலையை இது மாற்றுகிறது. கடனை வார தவணையாகயும் இங்கே செலுத்தலாம்.
மேலும், சிறு நகர மற்றும் கிராம வர்த்தகங்களுக்கு எம்.எஸ்.எம்.இ கடன் வழங்கப்படுகிறது. சராசரி கடன் அளவு பணவீக்கம் காரணமாக, ரூ.4.5 லட்சமாக அதிகரித்துள்ளது. இதே போல வாகன கடனிலும் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
தகவல் உதவி– பிஸ்னஸ் லைன்
Edited by Induja Raghunathan