பேப்பர் பேனா, மூங்கில் டூத்பிரஷ் என சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை அறிமுகம் செய்துள்ள சென்னை பெண்கள்!
’எவர்வார்ட்ஸ் இண்டியா’ எனும் நிறுவனம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ப்ளாஸ்டிக்கால் ஆன 40 பொருட்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருளை தயாரிக்கிறது.
நம் அன்றாட வாழ்க்கையில் ப்ளாஸ்டிக் நீங்கா இடம் பிடித்துவிட்டது. காலை எழுந்ததும் முதலில் பயன்படுத்தும் டூத்பிரஷ் முதல் பேனாக்கள், பேக் என அனைத்தும் ப்ளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டவை. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மட்டுமின்றி அரசாங்கத்திற்கும் கொள்கை உருவாக்குபவர்களுக்கும் மிகப்பெரிய பிரச்சனையாகவே உள்ளது. ஏனெனில் ப்ளாஸ்டிக் மக்கும் தன்மை கொண்டதல்ல என்பதால் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது.
மக்கும்தன்மை கொண்ட பொருட்களுக்கு நாம் மாறுவதே இதற்கான தீர்வாகும். ஆனால் அத்தகைய பொருட்கள் ப்ளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட பொருட்களைக் காட்டிலும் அதிக விலை கொண்டதாக இருப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.
இதற்கு தீர்வுகாணும் நோக்கத்துடன் வீணா பாலகிருஷ்ணன், சுதர்சனா பாய் இருவரும் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் ’எவர்வார்ட்ஸ் இண்டியா’ (Everwards India) துவங்கினார்கள்.
இருவரும் ஃபேஷன் டெக்னாலஜி படித்துள்ளதால் இந்தத் துறையில் தொழிற்சாலைகளில் உருவாகும் மக்காத கழிவுகளின் அளவு குறித்து நன்கறிவார்கள். இதுவே எவர்வார்ட்ஸ் இண்டியா துவங்க உந்துதலளித்து என ’நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ உடனான உரையாடலில் வீணா தெரிவித்துள்ளார்.
உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்தவேண்டும், உள்ளூர் பொருளாதாரத்தை இணைத்துக்கொண்டு கார்பன் அடிச்சுவடுகளை குறைக்கவேண்டும் என்பது எப்போதும் எங்கள் விருப்பமாக இருந்து வந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த பொருட்கள் தற்போது மீண்டும் அறிமுகமாவது சமீபத்திய போக்காக உள்ளது. எங்களது நிறுவனம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினைச் சேர்ந்தவர்களுக்கும் கைவினைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்குகிறோம்.
எவர்வார்ட்ஸ் க்ராஃபைட் மற்றும் செய்தித்தாளைக் கொண்டு பென்சில் தயாரிக்கிறது. இதன் விலை 49 ரூபாய். மூங்கிலைக் கொண்டு டூத்பிரஷ் தயாரிக்கின்றனர். அதன் பிரிசில்ஸ் மூங்கில் இழைகளால் ஆனது. எவர்வார்ட்ஸ் 40 பொருட்களைத் தயாரிக்கிறது. இவை அனைத்தும் அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்களுக்கான சிறந்த மாற்றாகும். ஏனெனில் இவை சுற்றுச்சூழலுக்கு உகந்தது. இவற்றின் விலை 40 ரூபாய் முதல் 799 ரூபாய் வரை ஆகும்.
தயாரிப்புகளின் தரத்தை உறுதிசெய்ய வீணாவும் சுதர்சனாவும் தாங்களே பொருட்களை சோதனை செய்து பார்க்கின்றனர். குளியலறையில் பயன்படுத்தும் பொருட்களான ஸ்கிரப், குளியல் ப்ரஷ்கள், பாட்டில் சுத்தம் செய்யும் பொருள் என பல்வேறு பொருட்களை எவர்வார்ட்ஸ் தயாரிக்கிறது.
தரமற்றதாக வகைப்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் பஞ்சினைக் கொண்டு நாப்கின்கள் மற்றும் பவுச்கள் தயாரிக்கின்றனர். இயற்கையான எண்ணெயில் தயாரிக்கப்படும் வலி நிவாரணிகள், குளியல் உப்பு போன்றவை இவர்களது மற்ற தயாரிப்புகள் என நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.
மேலும் எவர்வார்ட்ஸ் பிபிஏ (BPA) இல்லாத மருத்துவ தரத்திலான சிலிக்கானால் ஆன மாதவிடாய் கப்களை தயாரிக்கிறது. இதன் விலை 590 ரூபாய். பிபிஏ பல்வேறு ப்ளாஸ்டிக் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறது.
என்டிடிவி உடனான நேர்காணலில் வீணா குறிப்பிடுகையில்,
மலிவு விலையிலான சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் இருப்பினும் அவற்றை பயன்படுத்தமுடிவதில்லை. உதாரணத்திற்கு இன்றைய தலைமுறையினரை டூத்பிரஷ் பயன்படுத்துவதற்கு பதிலாக வேப்பங்குச்சியை பயன்படுத்த அறிவுறுத்தினால் அவர்கள் கேட்பதில்லை. எனவே ப்ளாஸ்டிக்கிற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று அவசியமாகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் எவர்வார்ட்ஸ்.
பயன்படுத்தப்பட்ட காபிப் பொடியைப் பயன்படுத்தி இவர்கள் காபி ஸ்கிரப் தயாரிக்கின்றனர். பயன்பாடின்றி தூக்கியெறியப்படும் துணியைக் கொண்டு பைகள் மற்றும் இதர தேவையான பொருட்களைத் தயாரிக்கின்றனர். அத்துடன் கொட்டாங்குச்சியைக் கொண்டு டீகப், கட்லெரி, சோப் பெட்டி போன்றவற்றையும் தயாரிக்கின்றனர்.
”நாங்கள் பொருட்களை மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தி கார்பன் அடிச்சுவட்டை குறைக்கிறோம். தனிநபர் பராமரிப்பு பொருட்கள் அனைத்தையும் நாங்கள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது கண்ணாடி பெட்டிகளில் பேக் செய்வதால் அவற்றை வீட்டில் மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தலாம்,” என்று வீணா தெரிவித்தார்.
இவர்கள் இருவரும் ’கழிவுகளற்ற வாழ்க்கை அனுபவம்’ என்பதை மையமாகக் கொண்டு ஒருவார கால பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்கின்றனர்.
கட்டுரை : THINK CHANGE INDIA