3 ஐடி நண்பர்கள் சென்னையில் தொடங்கிய 'Shakos'- ரூ.1 கோடி ஆண்டு வருவாய் பெறும் மில்க்ஷேக் ப்ராண்ட்!
45 லட்ச ரூபாய் முதலீட்டுடன் தொடங்கப்பட்ட 'Shakos' இந்த ஆண்டு இறுதிக்குள் 50 அவுட்லெட்களையும் அடுத்த 2 ஆண்டிற்குள் 200 அவுட்லெட்களையும் திறக்க திட்டமிட்டுள்ளது.
பெரும்பாலும் வெயில் வெளுத்துக்கட்டும் சென்னை போன்ற ஊரில் வசிக்கும் மக்கள் எப்போதும் தேடி அலைவது ஜில்லென்று குடிக்க ஜூஸ், இளநீர், மில்க் ஷேக்ஸ். அதனால் இவை ஆங்காங்கே கடைகளில் விற்பனை செய்வது தொழில் ரீதியாகவும் வருடம் முழுதும் லாபம் தரக்கூடியதே.
ஆனால் ஃப்ரூட் ஜூஸ், இளநீரை காட்டிலும் நம்மூரில் மில்க் ஷேக்குகள் சற்று விலை அதிகம் என்பதால், அதை சட்டென ஆர்டர் செய்து குடிக்க பலரும் தயங்குவார்கள்.
”மில்க்ஷேக்ஸ் அதிக விலைக்கு விற்பனையானது. அல்லது மில்க்ஷேக் விற்பனை செய்யப்படும் விலைக்கு ஏற்றவாறு தரமான தயாரிப்பு சந்தையில் கிடைப்பதில்லை. இந்த வாய்ப்பை கவனித்தோம். விலையையும் தரத்தையும் சமன்படுத்த விரும்பி ஒரு பிராண்டாக ஷேக்ஸ் தயாரிக்க முடிவெடுத்தோம்,” என்கிறார் Shakos நிறுவனர்களுள் ஒருவரான ராம் தினேஷ்.
25 வயதான ராம் தினேஷ், கிஷோர் தென்னரசு, தமிழ்செல்வன் ஆகிய மூன்று ஐடி துறை வல்லுநர்கள் ஒன்றிணைந்து தொடங்கியதே ’ஷாகோஸ்’ (Shakos). இவர்கள் விற்பனை மற்றும் மார்கெட்டிங், வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் என வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள். பிராண்ட் வளர்ச்சிக்கு ஒவ்வொருவரின் தனித்துவமான பின்னணியும் உதவியது. 45 லட்ச ரூபாய் முதலீட்டுடன் சென்னையில் இந்த முயற்சியை தொடங்கியுள்ளனர்.
’ஷாக்கோஸ்’ நிறுவனம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு சென்னையை உலகளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் பிராண்டுகள் எதுவும் செயல்படவில்லை. எனவே சென்னை உணவுச் சந்தையை முறையாக வடிவமைக்கப்படுவதில் இவர்கள் பங்களிக்க விரும்பினார்கள். இந்தச் சந்தை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே வளர்ச்சியடையத் துவங்கியது. ஆனாலும் ஆறு மாத கால தீவிர ஆய்விற்குப் பிறகே ஷேக்ஸ்களுக்கான சரியான ரெசிபியையும் செயல்பாடுகளையும் இவர்களால் தீர்மானிக்க முடிந்ததாக நிறுவனர்கள் கூறினர்.
இந்த ஸ்டார்ட் அப் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்டது. அண்ணா நகரில் அறிமுகப்படுத்தப்பட்டு பன்னிரண்டு மாதங்களுக்குள்ளாகவே சென்னை சந்தையில் Shakos; Milkshakes மற்றும் Waffles விற்பனையில் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. பிராண்ட் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது மாதத்தில் நுங்கம்பாக்கம் மற்றும் பெசண்ட் நகர் அவுட்லெட்கள் ஃப்ரான்சைஸ் எடுக்கப்பட்டது. மூன்று அவுட்லெட்கள் முழுவதும் சொமேட்டோ மற்றும் எல்பிபி-யில் 4.5+ ரேட்டிங் பெற்றுள்ளது. அனைத்து அவுட்லெட்களும் அதிகாலை 2 மணி வரை செயல்படுகிறது.
இந்த பிராண்ட் வளர்ச்சி இயற்கையாக வந்துள்ளது. தற்சமயம் எங்களின் ஆண்டு வருவாய் 1 கோடி ரூபாயாக இருக்கிறது. மேலும் சிறப்பாக செயல்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி ரூபாயை எட்ட திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு 50 அவுட்லெட்களையும் அடுத்த 2 ஆண்டிற்குள் 200 அவுட்லெட்களையும் திறக்கவேண்டும் என்பதை எங்களின் இலக்கு,” என்கிறார் ராம் தினேஷ்.
இந்த காலாண்டில் பெங்களூரு, கோவை, மும்பை ஆகிய நகரங்களில் மாஸ்டர் ஃப்ரான்சைஸ் முறையில் பார்ட்னர்ஷிப்பில் இணையும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் பகிர்ந்தனர் நிறுவனர்கள்.
மிகப்பெரிய அளவிலான முதலீடுகளுடன் செயல்படும் மிகப்பெரிய மில்க்ஷேக் பிராண்ட்களுடன் போட்டியிடுவதே இந்நிறுவனம் சந்திக்கும் முக்கியச் சவாலாகும். மேலும் பல்வேறு மில்க்ஷேக் பிராண்டுகள் சந்தையில் செயல்படுவதால் புதிதாக தேவைகள் ஏதும் உருவாகவில்லை. எளிமையான செயல்பாடுகள், சுவை, நியாயமான விலை போன்ற காரணிகளே இந்த பிராண்ட் சந்தையில் தொடர்ந்து நம்பிக்கையுடன் செயல்பட உதவுகிறது. Shakos அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு மலிவு விலையிலான வாஃபிள்களை அறிமுகப்படுத்தப்பட்டது. இது வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இந்த பிராண்டுடன் இணைந்திருக்க உதவியது.
அப்படி இவர்களின் ஷேக்குகளில் என்ன சிறப்பு எனக்கேட்டால்?
“Shakos ஷேக்குகள் திக்காக, தகுந்த பதத்தில் பல ஃப்ளேவர்களில் கிடைக்கிறது. கேரமல், சாக்கோஸ், நட்டெல்லா போன்ற சுவைகளில் 200 ரூபாய்க்குள் ஷாகோஸ் கிடைப்பதால் மக்களுக்கு எங்கள் ருசி மீது தனி பிரியம்,” என்கிறார் தினேஷ்.
இவர்கள் மேலும் விரிவடைந்து இந்தியா முழுவதும் செயல்பட திட்டமிட்டுள்ளனர். தற்போது க்ளௌட் கிச்சன் முறையே அதிகம் பின்பற்றப்படுவதால் குறைந்த முதலீட்டுடன் பல்வேறு நகரங்களில் க்ளௌட் கிச்சனை திறக்க திட்டமிட்டுள்ளனர்.
”எங்கள் நிறுவனம் சுயநிதியில் இயங்கி வருகிறது. தொடர்ந்து சுயநிதியிலேயே இயங்க விருப்பப் படுகிறோம். வாடிக்கையாளர்களே எங்களது மிகப்பெரிய முதலீட்டாளர்கள் அதனால் வெளி முதலீடுகளுக்கு முயற்சிக்கவில்லை,” என்கின்றனர் நிறுவனர்கள்.
2017-ம் ஆண்டு Fryos என்கிற ஒரு சிறிய அவுட்லெட்டை இவர்கள் முதலில் துவங்கினர். இதில் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப சேவையளிப்பதில் முக்கியக் கவனம் செலுத்தப்பட்டது. இவர்களது மெனுவில் மில்க்ஷேக்கும் இடம்பெற்றிருந்தது. இது மிகப்பெரிய அளவில் வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெற்றது. இதில் வாய்ப்பு இருப்பதை உணர்ந்து ’ஷாக்கோஸ்’ வாயிலாக சென்னை சந்தையில் அந்த வாய்ப்பினைக் கைப்பற்றினர்.
ஃபேஸ்புக் லின்க்: Shakos