'வாட்ஸ்-அப்’ மூலம் புடவைகள் விற்று லட்சங்களில் வருவாய் ஈட்டும் சென்னை சண்முக பிரியா!

By YS TEAM TAMIL
November 16, 2018, Updated on : Thu Jun 25 2020 07:10:03 GMT+0000
'வாட்ஸ்-அப்’ மூலம் புடவைகள் விற்று லட்சங்களில் வருவாய் ஈட்டும் சென்னை சண்முக பிரியா!
ஒரு நாளைக்கு 50-80 புடவைகள், பண்டிகைக் காலங்களில் 100 புடவைகள் வரை விற்பனை. 2016-17ல் அவரது வருவாய் 2.4 கோடி ரூபாய் தெரியுமா...
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

’வாட்ஸ்-அப்’பை தினமும் திறந்தாலே, பொய் செய்திகள், காமெடி மீம்கள் வேண்டாத ஃபார்வார்டுகள் என்றே நாம் எண்ணுகின்ற அதே வேளையில் அந்த ஒரு தளமே ஒரு சிலரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிந்தால் மனதுக்கு ஆறுதலாகவும் இருக்கிறது. 

இருமுனை கத்தி என அழக்கப்படும் சமூக ஊடகத்தின் நல்ல கூர் பக்கத்தை இன்று நாம் பார்ப்போம்... 

சென்னையைச் சேர்ந்த சண்முக பிரியா தன் மொபைலில் வாட்ஸ்-அப்’பை பதிவிறக்கம் செய்தபோது நினைத்துக்கூட பாத்திருக்கமாட்டார் அது அவரை எந்த அளவிற்கு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லப்போகிறது என்று. ஆம் இன்று வாட்ஸ்-அப் மூலம் புடவை வியாபாரம் செய்து வீட்டில் இருந்தபடியே லட்சங்களில் வருவாய் ஈட்டியுள்ளார் இவர். வாட்ஸ்-அப் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வின் படி, 

சண்முக பிரியா மூன்று ஆண்டுகளில் வாட்ஸ்-அப் மூலம் $400,000, மதிப்பிலான புடவைகளை ஆன்லைனில் விற்றுள்ளார். தான் மட்டும் முன்னேறாமல், தினசரி வாழ்விற்கே தவித்து வந்த பல பெண்களை தொழில்முனைவர்கள் ஆக்கி முன்னேற்றியுள்ளார் அவர்.
image
image


சண்முக பிரியா ஒரு நாளைக்கு 50-80 புடவைகளை விற்கிறார். பண்டிகை காலங்களில் அது 100 புடவை அளவிற்கும் செல்கிறது. 2016-17ல் அவரது வருவாய் 2.4 கோடி ரூபாய்...

”கடந்த தீபாவளி பண்டிகைக் காலத்தில் ஒரு மாதத்தில் மட்டும் 22 லட்ச ரூபாய் விற்பனை நடந்தது. மற்ற மாதங்களில் 12 முதல் 15 லட்ச ரூபாய் வரை விற்பனை நடக்கும்,” என்கிறார் சண்முக பிரியா. 

மொத்த விற்பனையில் அவருக்கு 7%-10% லாபம் உள்ளது என்றும் தன்னிடம் வாங்கும் மறு விற்பனையாளர்களுக்கு மொத்தவிலையில் அவர்களுக்கு 10 சதவீதம் லாபம் வரும் வகையில் பார்த்துக் கொள்கிறார். 

2014ல் இந்த புடவை விற்பனையை ஒரு முயற்சியாக செய்யத்தொடங்கினார் சண்முக பிரியா. குடும்பம் மற்றும் நண்பர்கள் அடங்கிய ஒரு வாட்ஸ்-அப் க்ரூபில் சுமார் 20 புடவைகள் விற்கமுடிந்தது. இதுவே இப்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்து லட்சங்களில் வருவாய் ஈட்டும் தொழிலாக மாறியுள்ளது. 

பிரியா தற்போது தனது சொந்த புடவை உற்பத்தியையும் தொடங்கியுள்ளார். இவருக்கு இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, யூகே மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலும் வாடிக்கையாளர்கள் குவிந்து கிடக்கின்றனர். 

’யுனீக் த்ரெட்ஸ்’ Unique Threads என்று தனது நிறுவனத்துக்கு பெயரிட்டுள்ள பிரியா, இரண்டு நெசவாளர்களை நியமித்து தான் செய்யும் டிசைன்களுக்கு புடவைகளை உற்பத்தி செய்கிறார். 

“நான் இந்த சில ஆண்டுகளில் எந்த மாதிரியான புடவைகளுக்கு, என்ன கலர்களுக்கு மக்களிடையே மவுசு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டுள்ளேன். அதைவைத்து நானே டிசைன் செய்து புடவைகள் உற்பத்தி செய்கிறேன். என் இலக்கு எப்போதுமே நல்ல தரத்தில், நல்ல கலர்களில் புடவைகள் விற்பதே ஆகும்,” என்கிறார்.

நிதி சுதந்திரம் காலத்தின் கட்டாயம்

பிரியாவின் மாமியார் வீடு வீடாக சென்று புடவை வியாபாரம் செய்தவர். 2014ல் சண்முக பிரியாவின் மகன் மூன்று வயதாக இருந்தபோது அவரின் மாமியார் இறந்து போனார். அதனால் தன் மகனை பார்த்துக் கொள்ள ஆளின்றி தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டை பராமரிக்க தொடங்கினார். இருப்பினும் குடும்பத்துக்கு கூடுதல் வருமானம் வேண்டுமென நினைத்த பிரியா, ஒரு பை நிறைய புடவைகளை வாங்கி விற்க முயற்சித்தார். பன்னாட்டு நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டு பிரிவில் தலைமை பொறுப்பில் உள்ள அவரின் கணவரும் அவருக்கு துணையாக தொழிலில் உதவி புரிய தொடங்கினார். 

“ஆரம்பத்தில் சரியான வரவேற்பு இல்லை. ஒரு கையில் குழந்தை, மறு கையில் புடவை பை என்று எங்கும் செல்வேன். என் அம்மா வீட்டுக்கூட அப்படித்தான் போவேன். இப்படி ஏன் செய்யவேண்டும் என்று பலரும் கேட்பார்கள். ஆனால் என் வியாபாரம் சூடு பிடித்ததும் எல்லாருடைய மனநிலையும் மாறியது. இப்போ எல்லாரும் என்னிடம் வந்து தொழில் தொடங்க ஐடியா கேட்கின்றனர்,” என்று தன் அனுபவத்தை பகிர்ந்தார். 

சாரீஸ் ஆன் வாட்ஸ்-அப்

வாட்ஸ்-அப் பயன்பாடு அதிகரிக்க, பிரியா அதில் தானிருந்த குடும்பம் மற்றும் நண்பர்கள் க்ரூபில் புடவைகள் விற்பனை பற்றி பதிவிடலானார். வாய்வழி விளம்பரம் மூலம் பல பெண்கள் அவரிடம் புடவைகள் வாங்கத் தொடங்கினர். சிலர் அவரிடம் புடவைகள் வாங்கி, அதை மீண்டும் மற்றவர்களுக்கு ரீசேல் செய்தனர். 

அவரை அறியாமலே பிரியா பல பெண் மறுவிற்பனையாளர்களை உருவாக்கி இருந்தார். இன்று அவர் சுமார் 2000 மறு விற்பனையாளர்களை கொண்டுள்ளார் என்பது அவரின் அதீத வளர்ச்சியை பறைச்சாற்றும். 

“குடும்பம், நண்பர்கள் அடங்கிய க்ரூப்களில் பதிவிடத் தொடங்கினேன். என் புடவைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க, பலர் என்னை அணுகினர். அதனால் ’வாட்ஸ்-அப் சாரி செல்லர்ஸ்’ என்ற ஒரு ஃபேஸ்புக் பேஜ் தொடங்கினேன். இன்று அந்த பக்கத்தில் சுமார் 70 ஆயிரம் மறு விற்பனையாளர்கள் உள்ளனர்,” என்றார் பெருமிதத்துடன் பிரியா. 
தன் குழுவினர் உடன் சண்முக பிரியா
தன் குழுவினர் உடன் சண்முக பிரியா


அதோடு முடியவில்லை பிரியாவின் முயற்சிகள். இப்போது அவரிடம் 11 வாட்ஸ்-அப் க்ரூப்கள் உள்ளது மேலும் 1 டெலிகிராம் க்ரூபும் உள்ளது. இவை அனைத்திலும் புடவை விற்பனை தூள் பறக்கிறது. 

அதிக டிமாண்ட் நிலையான வளர்ச்சி

ஏதேச்சையாக தொடங்கிய தொழில் ராக்கெட் வேகத்தில் போக, தன் வீட்டின் முதல் மாடியை புடவைகள் வைக்கும் கிடங்காக மாற்றி அதற்கென வழி வைத்து மறு விற்பனையாளர்கள் வந்து போகும் படி ஏற்பாடு செய்துள்ளார். பொதுவாக தனி வாடிக்கையாளர்களுக்கு பிரியா புடவைகள் விற்பதில்லை எனினும் அக்கம்பக்கத்தார்க்கு மட்டும் நோ சொல்வது இல்லை என்கிறார் சிரித்துக் கொண்டே.

ஆர்டர்கள் புக் ஆனவுடன், சண்முக பிரியாவின் குழுவினர் வேலையில் இறங்கிவிடுவர். 

“நாங்கள் பல லாஜிஸ்டிக்ஸ் மற்றும் கூரியர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் வைத்துள்ளோம். இடத்துக்கு ஏற்றார் போல் அவர்களின் நம்பிக்கைத்தன்மையை பொறுத்து புடவைகள் அந்தந்த கூரியர் மூலம் குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பிவிடுகிறோம்,” என்றார்.

புடவைக்கு உண்டல்லவோ பயங்கர போட்டி...

கடந்த இரண்டு ஆண்டுகளில் வாட்ஸ்-அப், பேஸ்புக் மூலம் அதிக அளவில் வந்துள்ள மறு விற்பனையாளர்கள் மத்தியில் தொழில் புரிந்து லாபத்துடன் வெற்றி பெறுவது பயங்கர கஷ்டம். இருந்தாலும் பிரியா தன் வழியை தனி வழியாகக் கொண்டு தன் சிறப்பு அம்சமாக தரத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் மத்தியில் தனியிடத்தை பிடித்துள்ளார். புடவை பிடிக்கவில்லை என்றால் ரிடர்ன் பாலிசியும் வைத்துள்ளதால் அது அவருக்கு கூடுதல் பெனிஃபிட்.

இதை எல்லாத்தையும் தாண்டி தன்னால் பலநூறு மறுவிற்பனையாளர்களை குறிப்பாக பெண்களை தொழில்முனைவர்கள் ஆக்கியுள்ளார் என்ற திருப்தி அவருக்கு உள்ளது. அதனால் அவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வரும் வரையில் பேமண்டுக்கு காத்திருந்து தன்னால் முடிந்த நிதியுதவியை செய்கிறார் பிரியா.

”என்னிடம் புடவைகள் வாங்கும் சில விற்பனையாளர்களால் உடனடியாக பணம் செலுத்த முடியாமல் இருக்கும். அப்புடவைகள் விற்பனை செய்து அவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வரும்வரை நான் காத்திருப்பேன். இதனால் பலர் என்னைத் தேடியே மீண்டும் வருவார்கள். இது என்னால் முடிந்த உதவி என்கிறார்.” 

தொழிலை சிறப்பாக கட்டமைத்துள்ள பிரியா தன் குழுவினரை பாராட்டாமல் இருக்கமுடியாது என்றார். நான்கு ஆண்டுகளுக்கு முன் என்னுடன் பணிபுரிய தொடங்கிய எல்லாரும் என்னுடன் இருக்கின்றனர். பல பெண்களுக்கு உதவுவதை எண்ணி பெருமை கொள்கிறேன் என்றும் சொல்கிறார்.

இதையெல்லாம் தாண்டி சண்முக பிரியா கூறுவது,

“நான் தினமும் செயல்பாடுகளில் இல்லை என்றாலும் இந்த தொழில் நன்றாக நடக்கும். இதை நினைத்து எனக்கு மகிழ்ச்சி,” என்கிறார். 

தன் குடும்பத்துக்கு உதவி, சமூகத்தில் உள்ள பல அடிதட்டு பெண்களுக்கு இந்த தொழில் மூலம் நிதிச் சுதந்திரம், மேலும் வீட்டில் இருந்தபடியே குடும்பத்தையும் கவனித்து புடவைகளையும் விற்கும் பெண்களால் தொழில்-குடும்ப சமன்பாட்டையும் சரிவர செய்ய முடிவதில் தான் தனக்கு மனதிருப்தி என்று முடிக்கிறார் இந்த வாட்ஸ்-அப்’ல் தொழில் சாம்ராஜ்யம் அமைத்துள்ள சக்சஸ் பெண்மணி.

ஆங்கில கட்ட்ரையாளர்: தன்வி துபே | தமிழில்: இந்துஜா ரகுனாதன்