50+ ஸ்டோர்கள்; ரூ.2 கோடி டர்ன்ஓவர்: இந்தியா முழுதும் கால்பதிக்கிம் பேஷன் ஆக்சசரீஸ் சென்னை நிறுவனம்!

இந்தியாவிலேயே முதல்முறையாக பேஷன் ஆக்சசரீஸில் விர்ச்சுவல் முறையை அறிமுகப்படுத்தி, பேஷன் டெக் ஆக்சசரீஸ் ஸ்டார்ட் அப் என்ற தகுதியைப் பெற்றுள்ளது ஹூஃபா பேஷன் ஆக்சசரீஸ். மிகக் குறுகிய காலத்தில் அபரிமிதமாக வளர்ச்சியைப் பெற்றுள்ள ஹூஃபா உருவான கதை சுவாரஸ்யமானது என்கிறார் அதன் நிர்வாக இயக்குநர் ரவிபாபு.
0 CLAPS
0

'ஆள்பாதி ஆடை பாதி' என்பார்கள். பெண்களுக்கு அந்த ஆடைகளுக்கு தகுந்த அணிகலன்களைத் தேடிப் பிடித்து அணிவது என்பது எப்போதுமே பிடித்தமான சலிப்பைத் தராத விசயம். ஆனால், அது கொஞ்சம் சவாலானதும் கூட. மற்றவர்கள் அணியாத தனித்துவமான அணிகலன்களைத் தேர்ந்தெடுத்து அணிய வேண்டும் என்பதுதான் பெரும்பாலான பெண்களின் ஆசையாக இருக்கும்.

சமீபகாலமாக ஆண்களுக்கும் இதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதனாலேயே இந்தியா மட்டுமின்றி, உலகளவில் 'பேஷன் ஆக்சசரீஸ்’க்கு என தனி மார்க்கெட் சத்தமில்லாமல் வளர்ந்து வருகிறது.

அப்படிப்பட்ட நிறுவனங்களில் ஒன்றுதான் சென்னையை பிறப்பிடமாகக் கொண்டு, பேன் இந்தியா நிறுவனமாக செயல்பட்டு வரும் 'ஹூஃபா ஆக்சசரீஸ் லான்ஞ்ச்' (HOOFA Accessories Lounge)

“எந்த ஒரு தொழிலும் நிகழ்காலத்தை மட்டுமல்ல, அதன் எதிர்காலத்தையும் மனக்கண்ணில் பார்த்து செயல்படுபவர்களால் மட்டுமே அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்ல முடியும். பாரம்பரிய தொழிலாக இருந்தாலும், காலத்திற்கேற்ப அதில் தொழில்நுட்பத்தை புகுத்தினால் மட்டுமே வெற்றியை வசப்படுத்த முடியும். இந்த வெற்றிக்கான சூத்திரத்தை சரியாகப் பயன்படுத்தியதால்தான், குறுகிய காலகட்டத்தில் பேஷன் ஆக்சசிரீஸில் தனக்கென ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர் வட்டத்தைப் பெற்று, இந்தியாவின் முதல் பேஷன் டெக் ஆக்சசரீஸ் ஸ்டார்ட் அப் ஆக ஹூஃபா ஆக்சசரீஸ் உள்ளது,” என்கிறார் அதன் நிறுவனர் ரவிபாபு.

தொடக்கம்

2016ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த ரவிபாபுவும், அவரது மனைவி கனிதாவும் சேர்ந்து ஆரம்பித்ததுதான் ’ஹூஃபா பேஷன் ஆக்சசரீஸ்’. எம்.பி.ஏ. பட்டதாரியான ரவிபாபு, படித்து முடித்ததும் தனது தந்தையின் ஷிப்பிங் டிரேடிங் தொழிலைக் கவனித்து வந்துள்ளார். ஷிப்பிங் கம்பெனியை கவனித்து வந்த அவர், பேஷன் ஆக்சசரீஸ் தொழிலுக்கு வந்த கதை சுவாரஸ்யமானது.

தனது தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு சென்று வந்த அவர், அங்கு பிரபலமான சில அலங்கார அணிகலன்களை தன் மனைவிக்கென ஆசையாக வாங்கி வந்துள்ளார். அப்போது அவருக்கு தெரிந்திருக்கவில்லை, அந்தச் சிறிய பொருட்கள்தான் பின்னாளில் தனக்கு மாபெரும் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தித் தரப் போகிறதென்று.

கணவர் ரவி வாங்கிக் கொடுத்த அணிகலன்களை, மகனின் பள்ளி உள்ளிட்ட இடங்களுக்கு அணிந்து சென்றுள்ளார் கனிதா. அப்போது அவற்றைப் பார்த்து, அவரது தோழிகள் டிசைன் அழகாக உள்ளது எங்களுக்கும் இதுபோல் வாங்கித்தர இயலுமா எனக் கேட்டுள்ளனர். நட்பு அடிப்படையில் முதலில் அவற்றை வாங்கிக் கொடுத்துள்ளார் ரவி.

ஆனால், அடுத்தடுத்து மீண்டும் அதே மாதிரி பொருட்களை வாங்கித்தரும்படி அவர்கள் கேட்கவே, அப்போதுதான் இதையே ஒரு தொழிலாக மாற்றினால் எப்படி இருக்கும் என ரவியும், கனிதாவும் யோசித்துள்ளனர்.

உடனடியாக களத்தில் இறங்கிய அவர்கள், ஏற்கனவே அவர்களது ஷிப்பிங் கம்பெனி தொடர்பாக கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், பல நாடுகளுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள அணிகலன் தயாரிப்பவர்களிடம் நேரடியாகp பேசியுள்ளனர்.

“மற்றவர்களைப் போலவே ஆரம்பத்தில் எங்களுக்கும் தொழிலில் நிறைய சறுக்கல்கள் இருந்தது. நாங்களே நேரடியாகச் சென்று தேர்வு செய்து பொருட்களை வாங்கி வந்தாலும், எந்தெந்த டிசைன்கள் அதிகளவில் விற்பனை ஆகிறது என்பதைத் தெரிந்து கொள்ள கொஞ்ச காலம் பிடித்தது.

"பலதரப்பட்ட மக்களின் ரசனைகளையும் பூர்த்தி செய்வது போன்ற பொருட்கள் வாங்க வேண்டும் என்பதால், நிறைய ஆர் அண்ட் டி செய்ய வேண்டி இருந்தது. ஆனால் அப்போதும் சரி, இப்போதும் சரி எங்களால் ஆன கடின உழைப்பைக் கொடுத்தோம்.. கொடுத்துக் கொண்டும் இருக்கிறோம். அதன் பலனாகத்தான் இன்று ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக எங்களது ஹூஃபா வளர்ந்திருக்கிறது,” என்கிறார் ரவி.

Hoofa Accessories-ல் என்னென்ன ஸ்பெஷல்?

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து பேஷன் ஜூவல்லரிகளையும் ஹூஃபாவில் வாங்கலாம். ஏ கிளாஸ், பி கிளாஸ் மட்டுமின்றி சி கிளாஸ் மக்களும் வாங்கும் வகையில் பொருட்களின் விலையை நிர்ணயித்திருக்கிறோம். குழந்தைகள் தங்களது பாக்கெட் மணியைக் கொண்டுக்கூட எங்களிடம் பொருட்களை வாங்க முடியும்.

“விலை குறைவாக இருக்கிறதென்பதால், தரமும் அப்படித்தான் இருக்கும் என்று அர்த்தமில்லை. தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல், எங்களின் லாபத்தைக் குறைத்துக் கொண்டு விற்பனை செய்கிறோம். இதுதான் குறுகிய காலத்தில் எங்களின் இந்த அபார வளர்ச்சிக்கான தொழில் ரகசியம்,” என்றே கூறலாம்.

இதே துறையில் இருக்கும் இன்னும் சிலர் இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யும் அணிகலன்களைக்கூட நாங்கள் வெறும் 200 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். அவர்கள் பத்து வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறும் லாபத்தை நாங்கள் 100 வாடிக்கையாளர்கள் மூலம் பெறுகிறோம். அவ்வளவுதான் வித்தியாசம். இதுவும் ஒருவகை வியாபாரத் தந்திரம்தான்.

எங்களிடம் வாங்கும் 100 பேரும் மீண்டும் எங்களிடமே பொருட்களை வாங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ஏனென்றால் அந்தளவுக்கு தரமான பொருட்களைப் பார்த்து, பார்த்து வாங்குகிறோம், என்கிறார் ரவிபாபு.

ஹூஃபா-வின் அடுத்தக்கட்டம்

தங்களது பிசினஸின் அடுத்த கட்டமாக, ஆன்லைனிலும் சரி, ஸ்டோரிலும் சரி விர்ச்சுவலாக ஆபரணங்களை அணிந்து பார்க்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஹூஃபா. இதன்மூலம் இந்தியாவிலேயே பேஷன் ஆக்சஸ்சரிஸ் தொழிலில் இந்த வசதியை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் என்ற பெருமையையும் ஹூஃபா பெற்றுள்ளது. இதற்கான பேட்டன்டையும் பப்ளிஷ் செய்துள்ளது ஹூஃபா.

பேஷன் ஆக்சஸ்சரிஸ்க்கு எதிர்காலத்தில் பெரிய மார்க்கெட் உள்ளது. 50 பிளஸ் அவுட்லெட்கள் உள்ள போதும், இப்போதும் நாங்கள் பூட்ஸ்ட்ராப் கம்பெனியாக, சொந்த முதலீட்டில்தான் இயங்கி வருகிறோம். எங்கள் குழுவில் 12 பேர் உள்ளனர். எப்போதுமே 50% தள்ளுபடி தருகிறோம். மார்ஜினை கம்மி செய்து தருவதால், எங்களால் ஆண்டுதோறும் பிளாட் 50% தள்ளுபடி தர முடிகிறது.

”முதல் இரண்டு வருடம் அனுபவத்தை தவிர பணம் எதையும் சம்பாதிக்கவில்லை. ஆனால், சோர்ந்து போகாமல் தொடர்ந்து இந்தத் துறையில் ஆர் அண்டி டி செய்து கொண்டே இருந்தோம். இப்போது எங்களது வளர்ச்சியைப் பார்த்து பெரிய நிறுவனங்களே எங்களைத் தேடி வந்து ஒப்பந்தம் செய்து வருகின்றனர். ஆண்டிற்கு 2 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்கிறோம்,” என பெருமையுடன் கூறுகிறார் ரவிபாபு.

ஸ்டார்ட் அப் நிறுவனமாக, க்ரசண்ட் இன்னோவேசன் அண்ட் இங்குபேஷன் செண்டரிலும் இன்குபேட் ஆகியுள்ளது ஹூஃபா. இதனால் பேஷன் டெக் ஆக்சசரீஸ் ஸ்டார்ட் அப் என்ற தகுதியையும் ஹூஃபா பெற்றுள்ளது.

சென்னையின் முக்கிய ஷாப்பிங் மால்கள் மட்டுமின்றி, ஹெல்த் அண்ட் க்ளோ, ஸ்பார், நாயுடு ஹால், ஸ்மார்ட் பஜார் என முன்னணி கடைகள் பலவற்றில் பாப் அப் ஸ்டோர்களாக ஹூஃபா இயங்கி வருகிறது. இன்னும் பல கார்ப்பரேட் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஹூஃபா, தங்களது பிரான்சைஸிகளையும் தர ஆரம்பித்துள்ளது. விரைவில் மும்பை உள்ளிட்ட முன்னணி இந்திய நகரங்களில் 400+ அவுட்லெட்கள் மற்றும் வெளிநாட்டிலும் கிளைகள் தொடங்க வேலைகள் நடந்து வருவதாக ரவி கூறுகிறார்.

“எங்கள் கடையில் ஒரே மாதிரியான ஆபரணங்கள் பெரும்பாலும் இருக்காது. நூறு கம்மல் இருக்கிறதென்றால், அவை அனைத்தும் நிச்சயம் வெவ்வேறு டிசைன்களில்தான் இருக்கும். ஹூஃபாவின் இணை நிர்வாகியான என் மனைவிக்கு பேஷன் ஜூவல்லரியில் ஆர்வம் அதிகம். எங்கள் ஹூஃபாவிற்குத் தேவையான பொருட்களை அவர்தான் ரசனையோடு பார்த்துப் பார்த்து வாங்குகிறார்,” என்கிறார்.

பெண்களுக்கான ஆபரணங்கள் மட்டுமின்றி, பொட்டு, ஹேண்ட் பேக், பர்ஸ், குழந்தைகளுக்கான பேக்குகள், கண்ணாடிகள், ஆண்களுக்கான அலங்காரப் பொருட்கள் என அனைத்தும் ஹூஃபாவில் உள்ளது. குறைவான இடத்தில் நிறைய கலெக்‌ஷன்கள் இருப்பதே தங்களது சிறப்பம்சம், என்கிறார் ரவி.

எதிர்காலத்தில் வெளிநாட்டில் இருந்து இயந்திரங்களை வரவழைத்து, சொந்தமாக யூனிட் ஆரம்பித்து, வெளிநாட்டுத் தரத்தில் இன்னும் குறைவான நிலையில் நல்ல அலங்கார பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் திட்டத்தையும் ஹூஃபா வைத்துள்ளது.

Latest

Updates from around the world