ஃபேஸ்புக் லைவ் மூலம் பெண்கள் சம்பாதிக்க வழிகாட்டிய ‘ஃபேஷன் வித் கீர்த்தி’
வாட்சப்பில் பிசினஸ் செய்கிறார்களா? நகைக்கடைக்கோ, துணிக்கடைக்கோ செல்ல உள்ளீர்களா? அப்போ, அதுக்கு முன்னாடி இதை படிங்க.
ஃபேஸ்புக்கில் நீங்கள் ஒருமுறையேனும் இவரது பக்கத்தை நிச்சயம் கண்டிருப்பீர்கள். ஒரு புடவையையோ, நகையையோ எப்போதும் லைவ்வில் காட்டி வர்ணிக்கும் அவர் தான், இன்றைய பையர்ஸ்களின் 'ஷாப்பிங் குரு'.
ஆம், 'கண்ணில் கண்டதையெல்லாம் வாங்கிவிடுவேன்' என்போர் முதல் 'எந்தப் பொருளையும் தீரஅலசி ஆராய்ந்த பின்னரே வாங்குவேன்' என்று கூறுவோர் வரை அனைத்து விதமான பையர்ஸ்களின் 'ஷாப்பிங் குரு'வாக இருப்பதுடன், கொரோனா காலத்தில் உருவாகிய 'லாக்டவுன் தொழில்முனைவர்' தொடங்கி, பிசினஸ் மேக்னட்கள் வரை ப்ரோமோஷனுக்காக வலைவீசி தேடும் சோஷியல் மீடியா மார்கெட்டிங் கிங்காகவும் இருக்கிறார் கீர்த்தி ஜெயகாந்த்.
ஃபேஸ்புக்கில் அவரது 'ஃபேஷன் வித் கீர்த்தி' ’Fashion with Kirthi' பக்கம் படு பிரபலம். ஒருமுறை லைக் செய்து வைத்துவிட்டால் போதும், ரகம்ரகமான ஃபேஷன் தொடர்பான பொருட்களையும், புதுபுது கடைகளையும் அறிமுகப்படுத்தி வைத்து ஆன்லைன் ஷாப்பிங் கைடாக வழிநடத்துவார். அந்த பக்கத்தின் அட்மின் கம் ஆல் இன் ஆல் தான் கீர்த்தி.
ஓராண்டுக்கு முன் நுாறு, இருநுாறு பேரால் பார்க்கப்பட்ட இவரது லைவ் புரோகிராம், இன்று பல்லாயிரம் மக்கள் விரும்பி பார்க்கும் லைவ் சேனலாகிவிட்டது. அதுவும், நாளொன்றுக்கு 8 லைவ்கள் வரை பக்கத்தில் ஏதேனும் ஒரு ப்ரோமோஷன் புரோகிராம் ஓடிக் கொண்டே இருக்கும். பிறபெண்களின் ஆன்லைன் பிசினஸிற்கு உதவுவதுடன், அவர் சம்பாதிப்பதற்கான தளமாக ஃபேஸ்புக்கை அணுகி, அவர் தடம்பற்றி நடக்கும் பல பெண்களை உருவாக்கியுள்ளார்.
கீர்த்தி யார்?
பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சி. டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் சையின்ஸ் படித்தார். படித்து முடித்தவுடன், திருமணமாகியுள்ளது. மணவாழ்வினை சேலத்தில் துவங்கினார். பிறந்த வீட்டில் செல்லப் பொண்ணு. புகுந்த வீடு கூட்டு குடும்பமாகினும், செல்லத்திற்கு பஞ்சமில்லை.
ஏனெனில், மீடியா பணிக்கான ஆடிஷனுக்கு மாமியார் தான் அழைத்துச் சென்றுள்ளார். மீடியா பயணம் எங்கிருந்து தொடங்கியது? என்பதை நம்மிடம் பகிரத் தொடங்கினார் அவர்...
என் பொண்ணு பப்ளியா அழகாக இருப்பா. குழந்தையிலயே மாடலிங் பண்ண வச்சோம். விளம்பரங்களில் நடிச்சா. லோக்கல் சேனலில் காம்பியரிங்கும் பண்ண ஆரம்பிச்சா. லைவ்வில் குட்டீஸ்களுடன் அழகா பேசுறது பாத்து அவளுக்கு 'குட்டி காம்பியர்'னு பெயரே வந்திருச்சு.
“அந்த சமயத்தில், அவளை நான் தான் கூட்டி போயிட்டு வருவேன். அப்படி போனப்ப, எனக்கும் காம்பியரிங் பண்ண சான்ஸ் கிடைச்சது. எனக்கு காம்பியரிங் பண்ண ரொம்ப ஆசை இருந்தானால, தட்டாமல் செய்யத் தொடங்கினேன். 50க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்தேன். எங்க வீட்லயும் எந்த தடையும் போடலை.”
எங்க மாமியார் தான், என்னை வாய்ஸ் டெஸ்டிங்கே கூட்டிட்டு போனாங்க. அந்த விதத்தில் அவங்களுக்கு நான் நன்றி சொல்லணும். அப்போ, துணிக்கடை, ஜவுளிக்கடை, நகைக்கடை சென்று புரோகிராம் செய்து வந்தோம்.
20 வருஷத்துல ஆயிரக்கணக்கான கடைகள், லட்சக்கணக்கான பொருள்களுக்கு நிகழ்ச்சிகள் பண்ணிருக்கேன். சோ, இந்த பணி எனக்கு புதிதல்ல. 20 வருட அனுபவம் நிறைந்தது. அங்கு ஆரம்பித்தது, இன்று 'பேஷன் வித் கீர்த்தி'யாக தொடர்கிறது," என்று கூறிய கீர்த்தியின் தமிழ் உச்சரிப்பே தனி அழகு.
20 ஆண்டுகளுக்கும் மேலாக பேஷன் உலகில் பயணித்துக் கொண்டிருக்கும் அவருக்கு சிறு இடைவெளியை ஏற்படுத்தியது கொரோனா. லாக்டவுன் காலத்தில் கடைகள் அனைத்தும் மூடியதில், கீர்த்தியின் பணி குறைந்தது. லாக்டவுன் நாட்கள் பெரும்பாலான மக்களை டவுணும் ஆக்கியது, பலரது திறமைகளையும் வெளிகொணர்ந்தது.
கொரோனா காலத்தில் தொழில்முனைவர்கள் ஆகியவர்களும் எக்கச்சக்கம். அது போன்றே கீர்த்திக்கும் நிகழ்ந்தது. லாக்டவுன் நாட்களில் தளர்வாக உணர்ந்த அவர், வாக்கிங் மற்றும் யோகா வீடியோக்களை ஃபேஸ்புக்கில் அப்லோடி பிறருக்கு ஊக்கம் அளித்தார். அச்சமயத்தில் அவருடைய மகளுக்கு உதித்த யோசனையே 'பேஷன் வித் கீர்த்தி'.
"லாக்டவுன் நாட்களில் கடைகள் எல்லாம் மூடியதால எனக்கு வேலை இல்லாமல் இருந்தது. அப்போ என் பொண்ணு தான் ஃபேஸ்புக்கில் ஒரு பக்கம் துவங்கி, அதில் தொழில் செய்கிற நிறைய பேரை சப்போர்ட் பண்ணனும்னு சொன்னா. இப்ப வரைக்கும் என்னை வழிநடத்துறது என் பொண்ணு பத்மா தான். ஏற்கனவே, மீடியாவில் இதே பணி செய்து கொண்டு இருந்ததால, பேஜ் ஓபன் பண்ண ஒரே வாரத்தில் நிறைய பிசினஸ் பண்றவங்க கான்டெக்ட் பண்ணாங்க.
சேனலில் வொர்க் பண்ணும்போது பிராண்டட் ஷோரூமிலிருந்து, தமிழகத்தின் முன்னணி கடைகள் வரை ஷாப்பிங் புரோகிராம் பண்ணிட்டேன். அதனால், பேஷன் வித் கீர்த்தியில் கடின உழைப்புடன் வளர்ச்சிக்காக காத்திட்டு இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கணும்னு நினைச்சேன். மக்களும் அதற்கு நல்ல வரவேற்பு கொடுத்தாங்க. ஃபேஸ்புக் பக்கம் தொடங்கிய 4 மாதத்தில் 1,00,000 ஃபாலோவர்ஸ் வந்திட்டாங்க. இப்போ 8 மாதம் ஆகிருச்சு. 2 லட்சம் பேர் வந்திட்டாங்க, மாதம் எனக்கும் 1 லட்சம் ரூபாய் அளவிற்கு வருமானம் வருது,” என்றார்.
சமீபத்தில், சேலத்தில் பேஷன் ’வித் கீர்த்தி’க்காக ஒரு ஆபிசும் திறந்துள்ளோம். தயாரிப்பாளர்கள், ரீசேல்லர்ஸ், ஹோல்சேல்லர்ஸ் அவங்களோட ப்ராடெக்ட்டை எனக்கு அனுப்பிவைப்பாங்க. அதன் தரத்தினை பார்த்துவிட்டு, லைவ்வில் பேசுவேன்.
ஒரு ப்ராடெக்ட்டை கையில் வாங்கினோன அதற்கு பின்னுள்ள உழைப்பு தான் தெரியும். அதனால், சும்மா பேசணும்னு பில்டப் பண்ணிலாம் பேசமாட்டேன் உணர்ந்து அந்த பொருளின் நேர்த்தியில் வியந்து தான் அடிதுாள், அழகு என்ற வார்த்தையெல்லாம் சொல்வேன். இப்போ, குழந்தைகள் மத்தியில் 'அடிதுாள் ஆன்ட்டி'யாக தான் தெரிகிறேன்.
நிறைய குழந்தைகள் பார்த்துட்டு 'லவ்யூ கீர்த்திமா'னு சொல்வாங்க. ரொம்ப சந்தோஷமாக இருக்கும். கர்நாடகா மற்றும் கேரளாவில் தான் எனக்கு அதிகப்படியான ஃபேன்சே இருக்காங்க.
பாம்பே, கர்நாடகா, ஆந்திரா என இந்தியா முழுவதுமுள்ள வணிகர்கள் அவர்களது ப்ராடெக்ட்டின் விளம்பரத்துக்காக எனக்கு அனுப்பி வைக்கிறாங்க. 4,000 ரீசேல்லர்ஸ் வைத்து பெரிய அளவில் பிசினஸ் பண்ணும் ப்ரமோஷனுக்கு என்னைத் தேடிவந்தது, எனக்கே ஆச்சரியமாகிவிட்டது.
லைவ்வில் ஒருத்தருடைய ப்ராடெக்ட்டை விளம்பரப்படுத்துவதற்கு முன்னதாக, அவர்களை பற்றியும், அவர்களது ப்ராடெக்ட்டை பற்றியும் முதலில் தெரிந்து கொள்வேன். அவர்களது பொருளில் தரம் இருந்தால் மட்டுமே அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பேன். 20 வருடங்கள் இதேத் துறையில் பணிபுரிவதால், அனுபவத்தின் வாயிலாக ஒரு டிரஸ் எடுத்துகிட்டா, அதன் மெட்டீரியல் எவ்வளவு தரமானதாக இருக்குனு பார்த்தோன கணித்துவிடுவேன். ஏன்னா,
நியூசிலாந்து, ஆஸ்திரேலியானு உலகம் முழுவதும் உள்ள மக்கள் நான் விளம்பரப்படுத்துவதாலே அது நன்றாக இருக்கும்னு கண்ணமூடிட்டு வாங்குவதாக சொல்கிறார்கள். அந்தளவுக்கு என்னை நம்புறாங்க. அப்படியிருக்கையில், மக்களிடம் தரமானதைக் கொண்டு சேர்க்கனும் என்பதில் கவனமாக தேர்ந்தெடுப்பேன்,” என்கிறார் பொறுப்புடன்.
அதே போல, லைவ் ப்ரோகிராம் என்பதால் என்ன பொருள், என்ன விலை, என்ன கடைனு எல்லாம் கரெக்ட்டாக சொல்லனும். அதே சமயம், நம்மள மதித்து லைவ்வில் கனெக்ட் ஆகிறவர்களுக்கு பதில் கொடுக்கணும். இடையில் நிறைய பேட் கமெண்ட்சும் வரும். அன்வான்டட் மெசேஜ் வரும். அதையெல்லாம் பொருட்படுத்தவே கூடாது.
ஃபேஸ்புக் வித் கீர்த்தி லைவ்வில் ஒரு டிரஸ்ஸோ, நகையோ போட்டு ப்ரமோட் பண்ணா, அந்த பொருளுக்கு 20 முதல் 50 ஆர்டர்கள் வருகிறதுனு சொல்வார்கள். எத்தனையோ பெண்களின் முடங்கிய தொழில் பேஷன் வித் கீர்த்தியால் உயிர் பெற்றுள்ளது. சமீபத்தில் ஒரு பொண்ணு, 'தொழிலே இல்ல... வாழ்க்கைய நடத்துறக்கு வழியும் இல்ல. குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாம்னு கூட நினைச்சோம். உங்களால் தான் வாழ்க்கையே மீண்டும் கிடைத்துள்ளது'னு சொன்னாங்க. என்னமாதிரியான வார்த்தை இது. நாள் முழுவதும்கூட இதுக்காக உழைக்கலாம்.
நாளொன்றுக்கு 6 லைவ் பண்ணுவேன். அதுபோக, வாரம் ஒரு முறை கடைகளுக்கே சென்று லைவ் புரோகிராம் பண்றேன். காலையில் 11 மணி டூ 5 மணி வரை தான் வொர்க் எல்லாமே. 5 மணிக்கு மேல குடும்பம் தான் எல்லாம்.
ஆன்லைன் பிசினஸ் தான் இனி எதிர்காலம். இன்றைய காலக்கட்டத்தில் தொழில் புரிபவர்களுக்கு பெஸ்ட் மார்கெட்டிங் தளம்னா அது சோஷியல் மீடியா தான். கஸ்டமர்களை உருவாக்கிக் கொடுப்பத்தில் ஃபேஸ்புக் பங்கு பெரியது. அந்தவிதத்தில் தான் ஃபேஸ்புக்கிற்கு நன்றி சொல்லணும்.
”சமூக வலைதளங்கள் மூலம் பிசினஸ் செய்பவர்கள் வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் தருவது அவசியம். குட் அண்ட் பேட் இரண்டுமே இருக்கும், அதை எதிர்கொள்ள தயாராகயிருக்கனும். அடுத்த மகளிர் தினத்துக்குள் நிறைய பெண்களை வெளிகொண்டு வரணும்னு தான் என் ஆசை. இந்தத் துறையின்மூலம், என்னால் பல பேருக்கு உதவ முடியுது, என்னால சம்பாதிக்க முடியுது. அதையெல்லாம்விட, எனக்கு நிறைய உறவுகளை ஏற்படுத்தியுள்ளது," என்று கூறிமுடித்தார் கீர்த்தி.
ஃபேஷன் வித் கீர்த்தி பேஸ்புக் பக்கம் : https://www.facebook.com/KrithiJayakanth/