அம்மாவின் 4 தங்க வளையலை ரூ.11,000 கோடி மதிப்பு பிசினஸ் ஆக்கிய வித்தகர்: லலிதா ஜுவல்லரி கிரண்குமார் ஜெயித்த கதை!
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவரான கிரண்குமார், 5ம் வகுப்போடு கல்விக்கு குட்பை சொல்லி விட்டு, அம்மாவின் 48 கிராம் தங்கவளையலை முதலீடாக வைத்து ஆரம்பித்த தொழில், இன்று தமிழகம் முழுவதும் 61 கிளைகளுடன், சுமார் 11,000 கோடி ரூபாய் மதிப்புள்ள லலிதா ஜூவல்லரி என்ற தொழில் சாம்ராஜ்ஜியமாக வளர்ந்துள்ளது.
லலிதா ஜூவல்லரி... இந்த வார்த்தையை எந்தளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமோ, அதே அளவுக்கு அதன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் (MD) எம்.கிரண்குமார் மக்கள் மத்தியில் பிரபலம்.
தங்கநகை என்றாலே பெண்கள் சம்பந்தப்பட்டது என அழகழகான பெண்களை மாடல்களை வைத்து மற்ற நகைக்கடைகள் விளம்பரம் செய்து கொண்டிருந்தபோது, தனி ஒரு ஆணாக, ஆபரணங்களே அணியாமல், பேசி மட்டுமே விளம்பரம் உருவாக்கி, வித்தியாசமான முறையில் தனது வியாபாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்த பெருமைக்குரியவர்தான் கிரண்குமார்.
தங்கநகைத் தொழில் குறித்த பின்புலம் எதுவுமே இல்லாத எளிய குடும்பத்தில் இருந்து வந்தபோதும், அனுபவங்கள் மூலம் கற்றுக் கொண்ட பாடங்களை வைத்து, தனது தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் என்ற பெருமையும் இவரைச் சாரும்.
மார்க்கெட்டில் மற்றவர்களால் கொடுக்க இயலாத அளவிற்கு குறைந்த விலையில் கொடுத்து, தனது நகைக்கடையின் சிறப்பை பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தியவர், என இவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
தற்போது லலிதா ஜூவல்லர்ஸ் தனது தொழில் பயணத்தில் ஐபிஓ மூலம் அடுத்த அடியை எடுத்து வைத்துள்ள நிலையில், கிரண்குமார் யார்? அவர் கடந்து வந்த தொழில் பாதை ஏற்ற இறக்கங்களுடன் எப்படி இருந்தது?, அதனை சமாளித்து எப்படி அவர் வெற்றி கொண்டார், தனது கடையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க அவர் மேற்கொண்ட உத்திகள் என்னென்ன?

லலிதா ஜூவல்லரி தலைவர் கிரண்குமார்
5ம் வகுப்போடு கல்விக்கு குட்பை
ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர்தான் கிரண்குமாரின் சொந்த ஊர். ஏழ்மையான குடும்பத்தில் 8வதாக பிறந்தவர். அவரது தந்தை நகைக் கடை ஒன்றில் அக்கவுண்ட்டண்டாக வேலை பார்த்தவர். தந்தை நகைக்கடையில் வேலை பார்த்ததால், சிறுவயதில் இருந்தே கிரண்குமாருக்கும் தங்க வியாபாரத்தில் ஆர்வம் உண்டானது.
குடும்ப சூழலால் அவரால் 5ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி செல்ல முடிந்தது. மேற்கொண்டு படிக்க இயலாத சூழலில், வருமானத்திற்காக தொழிலில் இறங்கினார் கிரண்குமார். தனது 12 வயதிலேயே துணிச்சலாக தங்க வியாபாரத்தில் கால் பதித்தார்.
அந்த காலகட்டத்தில், நெல்லூரில் இருந்து சென்னை, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களுக்கு தங்கம் நகைகளாக செய்து தரப்படுவதை அறிந்து கொண்டார். எனவே, தானும் அதேபோல், வியாபாரம் செய்வது என அவர் முடிவெடுத்தார்.
ஆனால், தங்கநகைத் தொழிலில் ஆர்வம் இருந்த அளவிற்கு கிரண்குமாருக்கு கையில் காசில்லை.
அம்மாவின் 4 வளையல்களே முதலீடு
பெரிய அளவில் முதலீடோ, பொருளாதார பின்புலமோ இல்லாத நிலையில், கிரண்குமார் தனது தொழிலுக்கு முதலீடாக தனது தாயாரின் நான்கு தங்க வளையலை மட்டுமே பெற்றுக் கொண்டார். 48 கிராம் எடை கொண்ட அந்த வளையல்களை தனக்குத் தெரிந்த நகை தயாரிக்கும் நபரிடம் கொடுத்து. 8 கிராம் எடையில் ஆறு ஜோடி தங்க காதணிகளாக செய்து கொண்டார்.
அந்த ஆறு ஜோடி காதணிகளோடு சென்னை வந்த அவர், அதனை நகை விற்பனை செய்யும் நிறுவனங்களிடம் விற்கத் தொடங்கினார். தொழிலில் பல சிக்கல்களும், பலத்த போட்டியும் இருந்தபோதிலும், தங்கத்தின் தரத்தில் சமரசம் செய்யாத தனது தொழில் உறுதியால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல நம்பிக்கையைப் பெற்றார். படிப்படியாக ஆர்டர்கள் அதிகரிக்கவே நெல்லூரில் இருந்து பிரதான மொத்த விலை தங்க நகை விற்பனையாளராக மாறினார்.
இப்படியாக கிரண்குமாருக்கு ஒரு வாடிக்கையாளராக அறிமுகமானவர்தான் கந்தசாமி பிள்ளை. அவர்தான் அப்போதைய லலிதா ஜூவல்லரியின் உரிமையாளர். 1999ம் ஆண்டு, கந்தசாமி கடும் நிதி நெருக்கடியில் சிக்கவே, லலிதா ஜூவல்லரியை விற்கும் முடிவிற்கு வந்தார். ஏற்கனவே மொத்த விலை தங்க நகை விற்பனையாளராக இருந்த கிரண் குமார், லலிதா ஜூவல்லரியை தானே வாங்குவது என முடிவு செய்தார்.

குறைந்த செய்கூலி, சேதாரம் அறிமுகம்
மொத்த விலை நகை வியாபாரி என்பதால், குறைந்த விலையில் நகைகளை வாங்கி லலிதா ஜூவல்லரியில் விற்பனை செய்யத் தொடங்கினார் கிரண்குமார். தனது லாபத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல், அதே சமயத்தில், நகை வாங்கும் மக்களும் குறைந்த விலையில் தங்கம் வாங்கும் வகையில், குறைந்த செய்கூலி, சேதாரத்தில் தங்கம் விற்பனை என்ற புதிய யுக்தியை சந்தையில் அறிமுகப் படுத்தினார்.
மற்ற கடைகளைவிட குறைந்த விலையில், அதேசமயம் நல்ல தரத்திலும் நகைகள் கிடைப்பதால், லலிதா ஜூவல்லரிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உருவானது. இந்த வணிக அணுகுமுறை, குறுகிய காலத்திலேயே லலிதா ஜூவல்லரியை சாமானிய மக்களிடம் அதிகம் கொண்டு சேர்த்தது. வியாபாரம் அதிகரித்ததால், நிதி நெருக்கடியில் இருந்த லலிதா ஜூவல்லர்ஸின் கடன்களை அவர் விரைவாக அடைத்தார்.
தனது கடையில் கிளைகளை மேலும் விரிவு படுத்துவதற்காக ஊடக விளம்பரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கிய கிரண்குமார், அதிலும் ஒரு புதிய யுக்தியை கொண்டு வந்து மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
தங்கநகைகள் என்றாலே பெரும்பாலும் அது பெண்கள் சம்பந்தப்பட்டது என்ற சிந்தனை சமூகத்தில் உள்ளது. அதனால்தான் பெரும்பாலான நகைக்கடை விளம்பரங்களில் விதவிதமான, அழகழகான நகைகளை அணிந்து வந்து பெண்கள் போஸ் கொடுப்பார்கள். திருமணம், காது குத்து, பூப்புனித நீராட்டு என இந்த விளம்பரங்களில் எல்லாம் பெண்களே அதிக நகைகள் அணிந்து வந்து தோன்றுவர்.
இந்த பிம்பத்தை தனது விளம்பரங்கள் மூலம் முறியடித்தார் கிரண்குமார். லலிதா ஜுவல்லரியின் விளம்பரங்களில் தானே தோன்றி தன் கடையைப் பற்றி பேசத்தொடங்கினார் கிரண்குமார். தாங்கள் விலை குறைந்த விலையில் தங்கம் விற்பதை மையமாக வைத்து, அவர் சாமனியர்களிடம் பேசுவது போன்று வந்த அந்த விளம்பரங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, லலிதா ஜுவல்லரிக்கு அதிக பிரசித்தத்தை கொடுத்தது. இன்று வரை கிரண்குமார் இந்த யுத்தியை பயன்படுத்தியே விளம்பரப்படுத்தி வருகிறார்.

பங்குசந்தையில் லலிதா ஜூவல்லரி- ஐபிஓ வெளியீடு
ஆடம்பரமோ, மக்களை பயமுறுத்துவது போன்ற பிரமாண்டங்களோ இல்லாமல், எளிமையாக தோன்றி, தனது நகைக் கடையின் சிறப்புகளை கிரண்குமார் எடுத்துச் சொன்ன விதம் மக்களுக்கு ரொம்பவே பிடித்துப் போனது. எளிய வார்த்தைகள் மூலம் தனது குறைந்த செய்கூலி, சேதார ஆஃபரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார் கிரண்குமார்.
இதன்மூலம் லலிதா ஜூவல்லர்ஸின் வியாபாரம் அதிகரித்ததோடு, முக்கிய நகரங்களில் பல புதிய கிளைகளும் உதயமாகின. தற்போது இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 11,000 கோடி ரூபாயை எட்டியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெறும் ஆறு ஜோடி கம்மலுடன் ஆரம்பிக்கப்பட்ட வணிகம், இன்று தென்னிந்தியா முழுவதும் சுமார் 61 கிளைகளுடன், தங்க நகை வியாபாரத்தில் ஆழமாக வேரூன்றி உள்ளது. அதோடு தமிழ்நாட்டிலேயே தங்களுக்கென பிரத்யேகமாக நகை உற்பத்தி ஆலையையும் கொண்டுள்ளது.
2025ம் நிதியாண்டில் 16,907.88 கோடி ரூபாயாக இருந்த லலிதா ஜூவல்லரியின் மொத்த வருமானம், 2026ம் நிதியாண்டில் ரூ. 25,039.80 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், லாபமும் 364.73 கோடி ரூபாயிலிருந்து, 1,009.82 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், லலிதா ஜூவல்லரி நிறுவனம் தனது தொழில் பயணத்தின் அடுத்த கட்டமாக பங்கு சந்தையிலும் களமிறங்கியுள்ளது. இந்நிறுவனம் தனது ஐபிஓ-வை வெளியிட்டுள்ளது. நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில், பங்குச்சந்தையில் லலிதா ஜுவல்லரி நிறுவனத்தின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் மத்தியிலும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

10 புதிய கிளைகள் திறக்க திட்டம்
லலிதா ஜூவல்லரி ஐபிஓவின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 1,700 கோடி ஆகும். இதில் 1,200 கோடி ரூபாய் புதிய பங்கு வெளியீடாகவும் (Fresh Issue), மீதமுள்ள 500 கோடி ரூபாய் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் எம். கிரண் குமார் ஜெயின் வழங்கும் பங்கு விற்பனையாகவும் (OFS) உள்ளது. பங்குகளுக்கான விலை வரம்பு ரூ.190 முதல் ரூ.201 வரை அமைந்துள்ளது. பங்கு வெளியீடு, ரூ.500 கோடிக்கான விற்பனை வாய்ப்பையும் கொண்டுள்ளது.
இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியானது, 10 புதிய கிளைகளை திறப்பதற்கும், அதற்கான இருப்பு மற்றும் கடை அமைப்பிற்கான செலவுகளுக்கும் பயன்படுத்த லலிதா ஜூவல்லர்ஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பங்கு வெளியீட்டிற்கு முன்னதாக, ஆங்கர் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.508 கோடி திரட்டியது குறிப்பிடத்தக்கது. இப்படியாக நகை வியாபாரத்தைப் போலவே பங்கு சந்தையிலும் லலிதா ஜூவல்லரிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
முறையான கல்வியோ, பொருளாதார பின்புலமோ இல்லாவிட்டாலும், சந்தையில் மக்களின் தேவையை துல்லியமாகப் புரிந்து கொண்டு, தனது வணிகத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தி வருகிறார் கிரண்குமார். அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, வித்தியாசமான சிந்தனை, தரத்தில் சமரசம் செய்து கொள்ளாதது, வாடிக்கையாளர்களின் நலனுக்கு முன்னுரிமை என கிரண்குமாரின் வெற்றிக்கான சூட்சுமங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
எது எப்படியோ சில தொழில்களை சிலரால், குறிப்பாக நல்ல பொருளாதார பின்புலம் இருந்தால் மட்டுமே செய்ய முடியும் என்ற பிம்பங்களை, தனது வெற்றியால் அடித்து நொறுக்கியிருக்கிறார் கிரண் குமார். மனதில் தெளிவும், நிதானமான அணுகுமுறையும், மாற்றி சிந்திக்கும் அறிவும் இருந்தால் எத்தொழிலிலும், யாராலும் ஜெயிக்க முடியும் என்பதற்கு கிரண்குமார் ஓர் வாழும் உதாரணம்.

