ரூ.116 கோடியில் சென்னையில் அமைகிறது Fintech City - நிதிநுட்ப ஸ்டார்ட்-அப்’களுக்கு பயன்கள் என்ன?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை நந்தம்பாக்கத்தில், 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதிநுட்ப நகரம் (FinTech City) அமைப்பதற்கும், 254 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் (FinTech Tower) கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை நந்தம்பாக்கத்தில், 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதிநுட்ப நகரம் (FinTech City) அமைப்பதற்கும், 254 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் (FinTech Tower) கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.
நந்தம்பாக்கத்தில் நிதிநுட்ப நகரம் மற்றும் நிதிநுட்ப கோபுரம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிதிநுட்ப நகரம் (Fintech City)
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் சென்னை, நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தால் சென்னை, நந்தம்பாக்கத்தில் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 56 ஏக்கர் நிலப்பரப்பில், நிதிநுட்ப நகரம் (FinTech City) அமைப்பதற்கும். அங்கு முதற்கட்டமாக 254 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.6 லட்சம் சதுர அடி கட்டட பரப்பளவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் (FinTech Tower) என்ற அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்படக்கூடிய அதிவேக வளர்ச்சியை கருத்தில் கொண்டு கடந்த 2000-ஆம் ஆண்டு சென்னை ராஜீவ் காந்தி சாலையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொலைநோக்குப் பார்வையோடு டைடல் பார்க் (TIDEL Park) அமைக்கப்பட்டது. இதன்மூலம் அந்த சாலை மட்டுமன்றி, அப்பகுதி முழுவதும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமையப்பெற்று, தற்போது தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடையாளமாக விளங்கி வருகின்றது.
அதேபோன்று, டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், நிதிநுட்ப துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நிதிநுட்ப துறையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்க வேண்டும் திமுக அரசு திட்டமிட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக 2021-2022 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட அறிக்கையில், சென்னை நந்தம்பாக்கத்தில் நிதிநுட்ப நகரம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தால் சென்னை, ஆலந்தூர் வட்டம், நந்தம்பாக்கத்தில் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில். 56 ஏக்கர் நிலப்பரப்பில் நிதிநுட்ப நகரம் அமைக்கப்படவுள்ளது.
நிதிநுட்ப நகரத்தின் சிறப்பம்சங்கள்:
சென்னையில் உருவாகும் நிதிநுட்ப நகரத்தில் உலகத்தரம் வாய்ந்த அதிநவீன வங்கி மற்றும் காப்பீட்டு உட்கட்டமைப்பு நிறுவனங்கள் அமைத்திட வசதி செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
- நிதிநுட்ப நகரம் நிதித்துறை சார்ந்த உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கிளைகளை அமைப்பதற்கு ஏதுவாக சாலைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், திடக்கழிவு மேலாண்மை, மழைநீர் வடிகால் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும்.
- பணிபுரிபவர்களுக்கு அந்நகரத்திலேயே குடியிருப்பு வசதி ஏற்படுத்தப்படுவதுடன், வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், பூங்காக்கள் மற்றும் உணவகங்கள் போன்ற அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும்.
- இந்நகரம் அமைவதன் மூலம் 12,000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன், சுமார் 80,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை ஏற்படுத்தப்பட உள்ளது.
- இங்கு 5.6 இலட்சம் சதுரஅடி பரப்பளவு கொண்ட ஒரு நிதிநுட்ப கோபுரம் (FinTech Tower) ஒன்றை அமைக்கவுள்ளோம். இதன்மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, ஏறக்குறைய 7 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரிப்பு:
அடிக்கல் நாட்டும் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் அதிகரிக்கத் தொடங்கிய மின்னணுமயமாக்கப்பட்ட வங்கிச் சேவைகளின் பயன்பாடு, தற்போது பன்மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வளர்ச்சியை நன்கு பயன்படுத்திக்கொண்டு நாமும் வளர்ந்திடவேண்டியது அவசியம் என்பதை அரசின் கடமையாக கருதுவதாகக் குறிப்பிட்டார்.
தற்போது அதிவேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், மின்னணுவியல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில் நிறுவனங்களும் தமிழ்நாட்டில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளன. பாரம்பரியமாக செயல்பட்டு வரும் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதிநிறுவன சேவைகள் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கும் நிதிநுட்பத்துறையும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வளர்ச்சி காணும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
தமிழ்நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தான் வெளிநாட்டு நிறுவனங்கள் நமது மாநிலத்தில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
”படித்த திறன்மிகு இளைஞர்களின் சக்தி இங்கு கொட்டிக் கிடக்கிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. இதனை நாம் தக்க வைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த கட்டத்திற்கும் எடுத்துச் செல்லவேண்டும். நாளை வரப்போகும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, நமது இளைஞர்களின் திறன்களை வளர்த்து, முன்னேறுவதில் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம்.”
2025-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை நிதிநுட்ப நிறுவனங்களின் உலகளாவிய மையமாக மாற்றக்கூடிய வகையில் தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை 2021 என்ற சிறப்புக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.