தமிழக உள்ளாட்சித் தேர்தல்: தலைவர்கள் ஆன மாணவிகள், அசத்தல் பாட்டிகள், திருநங்கை!
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கல்லூரி மாணவிகள், 70+ வயதிலான பாட்டிகள், திருநங்கை என தேர்தல் களத்தில் வெற்றிகளைக் கண்டு தலைவராகி அசத்தியுள்ளனர்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரத்து 975 பதவிகிளுக்கு தேர்தலானது நடந்தது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்காக தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் வாக்குப்பதிவானது நடைபெற்றது. சராசரியாக 2 கட்ட தேர்தலிலும் 77% வாக்குகள் பதிவாகின.
91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு 3 லட்சத்து 2 ஆயிரம் வேட்பு மனுக்கள் பெறப்பட்டதில் 48 ஆயிரத்து 891 பேர் மனுக்களைத் திரும்பப் பெற்றனர். மேலும் 18 ஆயிரத்து 570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இவர்களில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 898 பேரும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு 35,611 பேரும் போட்டியிட்டனர்.
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 22 ஆயிரத்து 776 பேரும், மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 2,605 வேட்பாளர்களும் களம் கண்டனர். உள்ளாட்சித் தேர்தல் என்ற கடலில் ஊறிப்போன அரசியல் கட்சிகளின் திமிங்கலங்களுக்கு மத்தியில் பெண்களும் போட்டியிட்டு வெற்றி கண்டு தனி முத்திரை பதித்துள்ளனர்.
அரசியல் பின்புலம் கொண்டவர்கள் மட்டுமே அரசியலுக்கு வர முடியும். அரசியல் என்றால் வேண்டவே வேண்டாம் என்று பெண்கள் ஒதுங்கியே இருப்பதாக சொல்வதெல்லாம் இந்த நூற்றாண்டிலும் தொடரத் தான் செய்கிறது. இதில் அத்தி பூத்தார்போல சில எதிர்பாராத அதிரடிகளும் நடக்கும் அப்படியான சம்பவம் தான் 2019 உள்ளாட்சித் தேர்தலிலும் நடந்திருக்கிறது.
கல்லூரி மாணவிகள் முதல் 80 வயது பாட்டி வரை தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்டது கே.என்.தொட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கான தலைவர் பதவிக்கு 21 வயது கல்லூரி மாணவி சந்தியா ராணி போட்டியிட்டார்.
”பிபிஏ இறுதியாண்டு படிக்கும் சந்தியா முதல் தேர்தலிலேயே வெற்றி கண்டுள்ளார். வயது வித்தியாசமின்றி தனக்கு வாக்களித்த 4 கிராம மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ள சந்தியா, தன்னை நம்பி வாக்களித்த மக்களின் தேவைகளை என்னால் முடிந்த அளவிற்கு பூர்த்தி செய்வேன்,” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சந்தியா ராணியின் தந்தை ஜெயசாரதி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், கே.என். தொட்டி ஊராட்சி, பெண்கள் தொகுதியாக அறிவிக்கப்பட்டதால் சந்தியாராணி அந்தப் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை 108 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஊராட்சி மன்றத் தலைவராகி இருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது சுபிதா திருத்துறைப்ழுண்டி யூனியனுக்கு உட்பட்ட பூசலங்குடி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். பள்ளிப்பருவத்தில் இருந்தே மாணவ அமைப்பில் சேர்ந்து சமூகப் பணியாற்றி வருகிறார் சுபிதா.
மார்க்சிஸ்ம்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவ அமைப்பான AISF யிலும் உறுப்பினராக இருக்கிறார். 499 வாக்குகள் பெற்று பஞ்சாயத்துத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் 2 ஊராட்சிகளை இளம் பெண்கள் தலைவர்களாக வழிநடத்த இருக்கின்றனர்.
சுபிதா, சந்தியா ராணி மட்டுமல்ல இந்தத் தேர்தலில் இன்னொரு ஆச்சரியமும் இருக்கிறது. முதல் முறையாக திருநங்கை ஒருவர் உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் 2வது வார்டு கவுன்சிலருக்கான தேர்தலில் போட்டியிட்ட 35 வயது திருநங்கை ரியா 2,701 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட ரியா, மக்கள் பிரச்னைகளைப் போக்க தான் தொடர்ந்து பாடுபடப் போவதாகவும், முழு நேர அரசியல்வாதியாக இருந்து மக்களுக்கு உதவுவேன் என்றும் கூறியுள்ளார்.
20’s, 30’s மட்டுமல்ல இந்த தேர்தலில் 70+ பாட்டிகளும் வெற்றி பெற்றுள்ளனர். திருப்ழுர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் ஊராட்சிக்கான தலைவர் பதவிக்கு 82 வயது விசாலாட்சி போட்டியிட்டார். முன்னாள் அமைச்சரின் துரை ராமசாமியின் மனைவியான இவர் 3,069 வாக்குகள் பெற்று தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றார்.
மேலூர் ஊராட்சி ஒன்றியம் அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 79 வயதான வீரம்மாள் போட்டியிட்டார். இவர் தம்மை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 195 வாக்குகள் அதிகம் பெற்று ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்று தேர்தல் அதிகாரியிடம் இருந்து வெற்றிச் சான்றிதழைப் பெற்றார்.
இவரைப் போலவே ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட அ.தரைக்குடி ஊராட்சி மன்றத்தின் தலைவராக 73 வயது மூதாட்டி தங்கவேலு போட்டியிட்டார். தள்ளாத வயதிலும் தீவிர வாக்கு சேகரிப்பு செய்து வெற்றிக்கனியையும் பறித்திருக்கிறார் இவர்.
சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அப்படி இடஒதுக்கீடு தந்தாலும் தைரியமாக பெண்கள் அரசியல் களம் காண வேண்டும் என்பதற்கு சான்றாக இருக்கின்றனர் உள்ளாட்சித் தேர்தலில் வயது வித்தியாசமின்றி வெற்றி பெற்றுள்ள பெண்கள்.