இருமடங்கு வேகத்தில் பரவும் இரண்டாம் அலை கொரோனா தொற்றின் அறிகுறிகள் என்ன?
கொரோனா பெருந்தொற்று இருமடங்கு வேகத்தில் பரவி, இளம் வயதினரை அதிகம் தாக்குவதால், அடுத்த 3 வாரங்கள் நெருக்கடியானவை என்று மருத்துவர் வேல்குமார் எச்சரிக்கிறார்.
கடந்த ஆண்டு முதன்முதலில் இந்தியாவிற்குள் நுழைந்த கோவிட் 19 வைரஸ் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. அரசின் விதிமுறைகளைக் கடுமையாக பின்பற்றி பொதுமக்களும் ஒத்துழைப்பு தந்ததால் நோய் பரவலை கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது.
ஏதோ பருவநிலை நோய் போல கொரோனாவின் தாக்கம் குறைந்து விட்டது என்று எண்ணி அனைவரும் அதிக சுதந்திரமாக இருந்ததன் பலன் இப்போது இரு மடங்கு அச்சத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
மருத்துவ எமெர்ஜென்சி நிலையில் பெருந்தொற்று சென்றதற்கு யார் காரணம், இதற்கான தீர்வு தான் என்ன? இதில் இருந்து தப்பிக்கவும், தற்காத்துக்கொள்ளவும் என்ன செய்ய வேண்டும் என்ற பொதுமக்களின் சந்தேகங்களுக்கு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர் வேல்குமார் கோபாலிடம் பேட்டி கண்டது யுவர் ஸ்டோரி தமிழ் அதன் விவரங்கள் இதோ:
கொரோனா முதல் அலைக்கும் இரண்டாம் அலைக்கும் என்ன வித்தியாசம்?
முதல் அலையில் இருந்ததைவிட இரண்டாம் அலையில் நோய் பரவலானது அதிக அளவில் இருக்கிறது. ஒரு மாதத்தில் வந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தற்போது 1 வாரம் அல்லது 10 நாட்களுக்கு உள்ளாகவே பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
ஆக மொத்தம் நோய் பரவலானது இரு மடங்கு அதிகமாக உள்ளது, மேலும், இரண்டாம் அலையில் நோயின் தீவிரத் தன்மையும் சற்றே அதிகரித்துள்ளது.
எந்த வயதினரை அதிகம் பாதிக்கிறது கொரோனா இரண்டாம் அலை?
தற்போது பரவி வரும் கொரோனா நோயானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக 30 முதல் 45 வயதிலான இளைஞர்கள் அதிகம் பாதிப்படைவதை பார்க்க முடிகிறது, இவர்களில் பலருக்கு மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்பட்டு ஆக்சிஜன் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதும் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழல் கடந்த 2 வாரங்களில் மருத்துவத் துறையில் கண்ட அனுபவங்கள் மட்டுமே.
கொரோனாவின் அறிகுறிகளில் மாற்றம் இருக்கிறதா?
கொரோனா நோய்க்கான அறிகுறிகளில் எந்த மாற்றமும் இல்லை பிரதானமானதாக இருமல், உடல்வலி, காய்ச்சல், தொண்டை வலி, வாசனை மற்றும் சுவையின்மை. குறிப்பிட்டுச் சொல்லும்படியான அறிகுறிகள் என்றால், சோர்வு, காய்ச்சலுடன், வாசனை மற்றும் சுவையின்மை இருந்தாலே அதை கோவிட் வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறியாகக் கருதலாம். மேலும் வயிற்றுப் பாதையில் ஏற்படும் பாதிப்புகளான குமட்டல், வாந்தி எடுத்தல், வயிற்றுப்போக்கு, சிலருக்கு சரும தடிப்புகள் ஏற்படக் கூடும்.
நோய் பாதிப்பின் தீவிரத்தன்மை எப்படி உறுதி செய்யப்படுகிறது?
கடந்த முறை கொரோனாவின் தீவிரத்தன்மையை 7 நாட்களுக்குப் பிறகே சிடி ஸ்கேன் முறையில் பரிசோதித்து கண்டறிய முடிந்தது. ஆனால் தற்போது கோவிட் உறுதியான 3 அல்லது 4வது நாளிலேயே பலருக்கு சிடி ஸ்கேனில் வைரஸின் தீவிரத்தன்மையை காண முடிகிறது. மேலும்,
நோய் பாதிக்கப்பட்ட 3 நாட்களுக்குள்ளாகவே அவர்களுக்கு ஆக்சிஜன் செலுத்த வேண்டிய அவசியம் கூட தற்போது ஏற்படுகிறது. இந்த அலையில் இது ஒரு அபாய ஒலி, எனினும் இறப்பு விகிதம் அதிக அளவில் இல்லை கடந்த முறை போலவே தொடர்கிறது என்பதே சற்று ஆறுதலான விஷயம் என்கிறார் டாக்டர் வேல்குமார் கோபால்.
கோவிட் பரிசோதனை யாரெல்லாம் செய்து கொள்ள வேண்டும்?
கூட்டங்கள், திருவிழாக்கள் அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று வந்த 5 நாட்களுக்குள் உடல் சோர்வு, காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருந்தால் நிச்சயமாக அவர்கள் அருகிலுள்ள சுகாதார நிலையங்களுக்கு சென்று ஸ்வாப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஸ்வாப் பரிசோதனையின் முடிவு நெகடிவ் என்றே வந்தாலும் கூட அவர்களாகவே அவர்களை கண்காணித்து 3 நாட்களுக்குள் அறிகுறிகள் சரியாகவில்லை என்றால் கட்டாயம் சிடி பரிசோதனையும், ஸ்வாப் பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும்.
14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்வதன் அவசியம் என்ன?
ஒரு நபருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதும் சிடி ஸ்கேன் மூலம் வைரஸின் தீவிரத்தன்மை என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப அவர்களுக்கு கோவிட் விதிமுறைகளுக்கு உட்பட்டு சிகிச்சைகள் தரப்படும். தொற்று உறுதியானாலும் எந்த பாதிப்பும் இல்லை என்று அலட்சியமாக விட்டு விடாமல் தொடர்ந்து 14 நாட்கள் அவர்கள் தங்களைத் தாங்களே கண்காணித்து வர வேண்டும். அவர்களின் ஆக்சிஜன் அளவில் மாறுபாடு இருக்கிறதா என்பதை கவனத்துடன் பார்க்க வேண்டும்.
தொற்று உறுதியான நபரிடம் இருந்து 10 நாட்கள் வரை மற்றவர்களுக்கு வைரஸ் தீவிரமாகப் பரவும் வாய்ப்பு உள்ளது, இதன் காரணமாகவே 14 நாட்கள் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாலும் அவர்கள் குறைந்தபட்சம் ஒரு வார காலமாவது தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.
நோய் பரவலின் விகிதம் இரட்டிப்பாகி வருவதால் அடுத்த 3 வாரங்கள் மிகவும் நெருக்கடியான கால கட்டம் என்றும் அரசின் விதிமுறைகளையும் கொரோனா தற்காப்பு நடவடிக்கைகளான SMS சமூக இடைவெளி (social distancing) முகக்கவசம் (Mask) மற்றும் சுத்தம் (sanitization) கடைபிடிக்காவிட்டால் மருத்துவமனை படுக்கைகள், மருத்துவர்கள், சுகாதார உதவியாளர்கள் தட்டுப்பாடு என மருத்துவ எமர்ஜென்சியை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறார் மருத்துவர் வேல்குமார் கோபால்.