பிளாஸ்டிக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பென்சில், டூத்பிரஷ் தயாரிக்கும் தம்பதி!
2016-ம் ஆண்டு அக்ஷதா, அவரது கணவர் ராகுல் பகாட் இருவரும் இணைந்து நிறுவிய டோபோலஜி (Dopology) நிறுவனம் தொடங்கி மக்கக்கூடிய பேப்பர் பென்சில்கள், விதை பேப்பர்கள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைத் தயாரிக்கின்றனர்.
ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு ஆயுட்காலம் உண்டு. ஆனால் பிளாஸ்டிக்கிற்கு மட்டும் ஆயுட்காலம் இல்லை. பிளாஸ்டிக் முழுமையாக சிதைந்து போக சுமார் 500 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 300 மில்லியன் டன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்கிறது.
பசபிக் பெருங்கடலின் கடல் பரப்பில் மிகவும் ஆழமான மரியானா ட்ரென்ச் பகுதியில் சமீபத்தில் பிளாஸ்டிக் பை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மாசு தொடர்ந்து அதிகரித்து வந்தால் 2050-ம் ஆண்டில் கடல் பகுதிகளில் மீன்களைக் காட்டிலும் அதிகளவில் பிளாஸ்டிக் காணப்படும் என பிளாஸ்டிக் மாசு குறித்து உலகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்ட உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.
இந்த அச்சுறுத்தலை சமாளித்து பிளாஸ்டிக் இல்லாத நிலையான எதிர்காலத்தை உருவாக்க பெங்களூருவைச் சேர்ந்த அக்ஷதா பத்ரண்ணா, அவரது கணவர் ராகுல் பகாட் இருவரும் 2016-ம் ஆண்டு ’டோபோலஜி’ (Dopology) என்கிற நிறுவனத்தை நிறுவினார்கள்.
மூங்கில் டூத்பிரஷ், விதை பேப்பர்கள், செய்தித்தாள் கொண்டு தயாரிக்கப்படும் பென்சில்கள் என இந்நிறுவனம் பயனுள்ள, விலை மலிவான, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைத் தயாரிக்கிறது. அக்ஷதா கூறும்போது,
“இந்தியாவில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் அவர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று விரும்பினோம்,” என தெரிவித்ததாக ’டெக்கான் ஹெரால்ட்’ தெரிவிக்கிறது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் அனைவரும் வாங்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தம்பதி மலிவு விலையிலான தீர்வுகளை முன்வைத்தனர். உதாரணத்திற்கு இவ்விருவரும் பழைய செய்தித்தாள்களைக் கொண்டு பென்சில்களை உருவாக்குகின்றனர். விலையை மேலும் குறைப்பதற்காக ஜெய்ப்பூரில் இருந்த உற்பத்தியாளர்களிடமிருந்து பென்சிலை வாங்குவதற்கு பதிலாக ராகுல் தனது சொந்த ஊரான தார்வட் பகுதியில் உற்பத்தி ஆலையை அமைத்தார்.
அக்ஷதா இது குறித்து Edex Live உடன் உரையாடுகையில்,
“சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைத் தயாரிக்கவேண்டும் என்பது மட்டுமல்லாது ஹுப்ளி மற்றும் தார்வாட் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் விரும்பினோம். எங்களது 2B பேப்பர் பென்சில் ஒன்றின் விலை 9 ரூபாய். ஆனால் இனி வரும் நாட்களில் இதன் விலையை 5 அல்லது 7 ரூபாயாக குறைக்க உள்ளோம். அத்துடன் நாங்கள் கலர் பென்சில்களையும் தயாரிக்கிறோம். 10 கலர் பென்சில்களின் விலை 120 ரூபாய். இவை நீடித்து உழைக்கக்கூடியதாகும்,” என்றார்.
பென்சில் தயாரிப்பிற்காகவே மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 15 மில்லியன் பென்சில்களைத் தயாரிக்க ஆறு மில்லியன் மரங்கள் தேவைப்படுகின்றன என்கிறார் அக்ஷதா.
இவர்கள் மூங்கிலால் தயாரிக்கப்பட்ட பிரஷ்களை வியட்னாமில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் இவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் விற்பனை செய்தனர். அக்ஷதா இது குறித்து கூறும்போது,
”என்னுடைய சகோதரர் விஞ்ஞானி. சுற்றுச்சூழலை பாதுகாக்க மூங்கிலால் தயாரிக்கப்பட்ட பிரஷ்களை அவரது கிளையண்ட்களுக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொண்டோம். ஆனால் மூங்கில் பிரஷ்கள் சந்தையில் 210 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. மக்கள் இவ்வளவு அதிக தொகையை செலவிட விரும்பவில்லை. எனவே நாங்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பிரஷ்ஷை வெறும் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யத் தொடங்கினோம். அனைத்தும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலையை குறைப்பதற்காக இந்த பிரஷ்களை சீனாவில் இருந்து வாங்குகிறோம்,” என்றார்.
எனினும் பிளாஸ்டிக் பொருட்களையே சார்ந்து பழக்கப்பட்ட மக்களை மாற்றுப் பொருளை முயற்சி செய்ய சம்மதிக்கவைப்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. இருவரும் கிட்டத்தட்ட ஒவ்வொரு விற்பனையாளரையும் சந்தித்து பேக்கிங் செய்ய மறுசுழற்சிக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்த ஊக்குவிக்க முயற்சித்தனர்.
தற்போது இவர்களது பிரத்யேக பேக்கிங் தேவைக்காக மற்ற நிறுவனங்களுடன் பணிபுரியத் தொடங்கியுள்ளனர்.
இவர்கள் ஒவ்வொரு முறை பொருட்களை அனுப்பும்போதும் அந்த பார்சலில் விதை பேப்பரை வைக்கின்றனர். மக்கும்தன்மை கொண்ட இந்த பேப்பரில் விதை இணைக்கப்பட்டுள்ளது. சாமந்தி, மல்லிகை போன்றவற்றின் விதைகள் இந்த விதை பேப்பரில் இருக்கும். வாடிக்கையாளர்கள் பேப்பரைப் பயன்படுத்திய பிறகு இதை நட்டு வைக்கலாம்.
தற்சமயம் இந்த தம்பதியால் 500 முதல் 1,000 விதை பேப்பர்களுக்கான ஆர்டர்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடிகிறது. டோபோலஜி நிறுவனம் விதை பேப்பர் பேக்கேஜிங் செய்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த சோப் மற்றும் அழகுப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்காக பிரைஸ் டேக் தயாரித்துள்ளனர்.
கட்டுரை: THINK CHANGE INDIA