சமூக தொழில் முனைவு குறித்த ஒரு பார்வை!
நீங்கள் ஒரு தொழில் முனைவோராக விரும்பி, உங்கள் தொழில் முனைவு திட்டத்தை செயல்படுத்துவதாக இருந்தால், சமூக தொழில் முனைவே உங்களுக்கு அதிகம் பயனளிக்கும்
சுயமாக தொழில் துவங்கி அதனை நடத்திச் செல்வது என்ற எண்ணம் தற்போதைய காலகட்டத்தில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. இருப்பினும், வெறும் ஒரு தொழில் முனைவோராக இருப்பதை காட்டிலும் ஒரு சமூக தொழில் முனைவோராக இருப்பது உற்சாகத்தை தரக்கூடியது. ஒரு லாபகரமான சமூக தொழில் நிறுவனம், தனது முதலீட்டாளருக்கு லாபத்தை திரும்ப கொடுப்பதுடன், அந்த சமூகத்திற்கு அல்லது சுற்றுச்சூழலுக்கு மதிப்பினை உருவாக்கும் நோக்கத்துடனும் செயல்படுகிறது.
நீங்கள் ஒரு தொழில் முனைவோராக விரும்பி, உங்கள் தொழில் முனைவு திட்டத்தை செயல்படுத்துவதாக இருந்தால், சமூக தொழில் முனைவே உங்களுக்கு அதிகம் பயனளிக்கும். அதற்கு 7 காரணங்களும் உள்ளன.
ஒரு என்ஜினீயராக, மற்ற தொழில் முனைவுகளை விட, தொழில்நுட்ப தொழில் முனைவிலேயே எனக்கு நெருக்கம் அதிகம். எனவே, இயல்பாகவே எனது ஒப்பீடு தொழில்நுட்ப தொழில்முனைவை சார்ந்தே இருக்கும். ஆனால், நீங்கள் பிற தொழில் முனைவுகளுடன் நான் கூறுவனவற்றை பொருத்திப் பார்க்க முடியும்.
1. பற்றுறுதி
தொழில்முனைவானது எப்போதுமே பற்றுறுதியின் அடிப்படையிலேயே செயல்படுத்தப்படுகிறது. தொழில்முனைவு குறித்து ஸ்டீவ் ஜாபிடம் ஒருமுறை கேட்ட போது,
“நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதில் நல்ல பற்றுறுதியுடன் இருப்பதாக மக்கள் சொல்கிறார்கள். அது உண்மை தான். அதற்குக் காரணம் என்னவெனில், உங்களால் செய்ய முடியாத அளவு கடினமாக இருக்கும் ஒன்றை செய்யும் போது, அதில் பற்றுறுதி இல்லையெனில் அதனை செய்யாமல் கைவிட்டுவிடுவீர்கள்.
அதுமட்டுமல்லாது, செய்யவேண்டிய அந்த செயல் மிகவும் கடினமாகவும், நீண்ட காலம் பிடிக்கக் கூடியதாகவும் இருந்தால் கூட, அந்த வேலையில் பற்றில்லை என்றால் அந்த வேலையை செய்யாமல் கைவிட்டுவிடுவார்.
நீங்கள், வெற்றி பெற்ற ஒருவரையும், தோல்வியடைந்த ஒருவரையும் பார்த்தால், கடினமான அந்த பணியை வெற்றி பெற்றவர் தொல்வியடைந்தவரை விட அதிகம், பற்றுறுதியுடன் அந்த செயலை செய்திருப்பார். எனவே நீங்கள் ஒரு செயலை செய்ய விரும்பினால், அதை ஈடுபாட்டுடனும் பற்றுறுதியுடனும் செய்ய வேண்டும்.”
சமூக சார்ந்த செயல்களுக்கு, பற்றுறுதியுடன் இருப்பது மிகவும் எளிது. இதனால் இன்னும் வெற்றிகரமான தொழில் முனைவோராக மாற முடியும்.
2. படைப்பாற்றலுக்கும் புதுமைக்கும் வாய்ப்புகள் தாராளம்
பெரும்பாலான துறைகளில், பல மக்கள் தங்களிடம் இருக்கும் சிந்தனைகளோடு மட்டும் நின்றுவிடாமல் அவற்றை நடைமுறைபடுத்துவதில் தீவிரமாக உள்ளனர். புதிய தொழில்நுட்பம் அல்லது அரிதான சந்தை பொருட்கள் தவிர மற்ற அனைத்திற்கும் தற்காலத்தில் செயலிகளோ அல்லது இணையதளங்களோ வந்துவிட்டன. தொழில் முனைவர்களெல்லாம் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெறவே விரும்புகிறார்கள். அதேசமயம் தீர்வுகள் தேவைப்படக்கூடிய, ஏற்கனவே வரையறுக்கப்பட்ட பிரச்சினைகள் எண்ணற்ற உள்ளன. இந்த பிரச்சினைகள் நல்ல முறையில் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான சந்தையை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. ஆனால், இதில் கடினமானது என்னவெனில், உங்கள் படைப்பாற்றலையும், புதுமையையும் நடைமுறைபடுத்தும் போது அது எதிர்பார்க்கும் அளவு வேலை செய்ய வேண்டும் என்பதே.
3. நிதி மற்றும் பிற உதவிகள்
சமூக தொழில் முனைவர்களுக்கு, நிதி மற்றும் நிதியல்லாத உதவிகளுக்கான வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. உண்மையில் முறையான சமூக தொழில் நிறுவனங்களுக்கு, நிதியுதவி மற்றும் பிற உதவிகளை செய்ய பல நிறுவனங்களும் எப்போதுமே தயாராகவே உள்ளன. ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான சமூக தொழில் நிறுவனங்களே நிலைத்த வணிக மாதிரிகளை கொண்டு வேலை செய்யத்தக்க நிலையில் உள்ளன. நான் பார்த்த அளவில், பணம் தேவைப்படும் சாத்தியமான திட்டங்களை விட பணம் தான் அதிக அளவில் கிடைக்கத்தக்க நிலையில் உள்ளது.
4. நம்முடன் வேலை செய்வதை நேசிக்கும் மக்கள்
எனது அனுபவத்தில், ஒப்பந்ததாரர்களும், சேவைதாரர்களும் நம்முடன் வேலை செய்வதையே விரும்புகிறார்கள்.பொதுவாக, அவர்களது மற்ற வாடிக்கையாளர்களை விட அதிக அளவில் முயற்சியையும், அதிக கவனத்தையும், நமக்காக கொடுக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஏதாவது காரணத்தைக் கொண்டு மற்றவருக்கு உதவவே விரும்புகிறார்கள். தங்கள் வேலையின் வழியாக பிறருக்கு உதவுவதை மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.
5. வித்தியாசமான கலாச்சாரங்கள்
பன்முகத்தன்மையை விரும்பும் ஒருவனாக, நான் இணைந்து வேலை செய்யும் மக்களின் பன்முகத்தன்மையை ஒரு தொழில் முனைவராக மிகவும் விரும்புகிறேன். வழக்கமான அடிப்படையில், நான் பேஷன் துறையில் உள்ள டாப் எக்சிகியூட்டிவ்களையும், பல மில்லியன் டாலர்கள் மதிப்பில் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் முதலாளியையும், கிராம பிரதேசங்களில் வேலை செய்யும் சமூக சேவகர்கள், மூத்த அரசு அதிகாரிகள் என பலரையும் சந்திக்கிறேன்.
ஒரு படித்த, நடுத்தர வர்க்க மனிதனாக, ஒரு அமெரிக்க கார்ப்பரேட்டில் வேலை செய்யும் போது கூட நான் வாழ்க்கையில் உள்ள குமிழியை புரிந்து கொள்ளவில்லை. இதனை நான் எனக்கு சொந்தமான சமூக தொழிலை துவங்கிய பின்னரே புரிந்து கொண்டேன். திடீரென, நான் குறைந்த அதிர்ஷ்டம் உள்ள, என்னைவிட வாழ்க்கையில் அதிகம் போராடும் மக்களுடன் தொடர்பு கொள்ளத் துவங்கினேன். இது, உலகம் குறித்த எனது பார்வையை விரிவுபடுத்தியதுடன், நான் தொடர்பு கொண்ட மக்களிடமிருந்து பலவற்றை கற்று கொண்டேன்.
சமூக தொழில் முனைவில் ஒரு சிறந்த பயன் என்னவெனில், நீங்கள் சமூகத்தின் பல படிநிலைகளிலுமிருந்தும் வரும் மக்களை தொடர்பு கொண்டு, அவர்களது பன்முகத்தன்மையுடன் நீங்கள் வேலை செய்ய முடியும்.
6. சக தொழில் முனைவோர் மத்தியில் பன்முகத்தன்மை
ஒரு தொழில்முனைவராக, நீங்கள் சக தொழில் முனைவர்களுடன் தொடர்பு கொள்ள கூடியது தவிர்க்க முடியாதது. அவர்களில் சிலர் உங்களுக்கு நண்பராகவோ அல்லது உங்களுடன் இணைந்து வேலை செய்ய வேண்டிய நிலையோ ஏற்படலாம். தொழில்நுட்ப தொழில் முனைவர்களை ஒப்பிடும் போது, சமூக தொழில் முனைவர்கள் வேறுபட்ட குழுவாக உள்ளனர். பலதரப்பட்ட பொருளாதார மற்றும் கல்வி பின்னணிகளிலிருந்து வரும் இத்தகைய தொழில்முனைவோரிடம் பாலின வேறுபாடு மிக குறைவாக இருக்கும்.
7. நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதில் திருப்தி கொள்ளல்
ஒவ்வொரு நாள் காலையிலும், நீங்கள் எழும்பும்போது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நீங்கள் ஏற்படுத்தப்போகும் மாற்றத்தை குறித்து நினைத்து பாருங்கள். அது மிகவும் உற்சாகமளிப்பதாக இருக்க கூடும்.
நீங்கள் ஒரு சமூக தொழில் முனைவை மேற்கொள்ளும்போது, கோடீஸ்வரனாக மாறாமலிருக்கக் கூடும். ஆனால் வழக்கமான ஒரு தொழில் முனைவைக்காட்டிலும் சமூக முனைவு அதிக அளவில் மனநிறைவை தருவதுடன், நீங்கள் திருப்தியுடன் வாழ்வதற்கு ஏற்ற பணத்தையும் தருகிறது. வழக்கமான தொழில் முனைவர்கள் கூட கடைசியில் கோடிஸ்வரர்கள் ஆகிவிட முடிவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
ஆக்கம்: ப்ரீத்தம் ராஜா | தமிழில்: நந்தகுமாரன்
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்:
சமூக மாற்றம் ஏற்படுத்தும் தொழில்முனைவு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வில்க்ரோ!
'இளைஞர்கள் விவசாயம் செய்வதை ஊக்குவிப்போம்': ‘கமல் கிசான்’ நிறுவனர் தேவி மூர்த்தி