மலையாள திரையுலகின் இருண்ட பக்கங்கள்: நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்!
நடிகைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், பெண் கலைஞர்களுக்கான மனிதாபிமானமற்ற நிலைமைகள் மற்றும் பணியிடத்தில் நடக்கும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் பற்றிய சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இந்த அறிக்கையில் வெளியாகியுள்ளன.
மலையாளத் திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்தும் நீதிபதி கே ஹேமா கமிட்டி அறிக்கையை கேரள அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.
திங்களன்று வெளியிடப்பட்ட நீதியரசர் ஹேமா கமிட்டி அறிக்கை, மலையாளத் திரையுலகில் பரவலான பாலியல் துன்புறுத்தல், மனிதாபிமானமற்ற பணி நிலைமைகள் மற்றும் ஒரு "மாஃபியா" செயல்பாடுகள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தல்கள், பெண் கலைஞர்களுக்கான மனிதாபிமானமற்ற நிலைமைகள் மற்றும் பணியிடத்தில் நடக்கும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் பற்றிய சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இந்த அறிக்கையில் வெளியாகியுள்ளன.
நடிகர் திலீப் பாலியல் சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து, மலையாள சினிமா உலகில் நிகழும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாலின சமத்துவமின்மை தொடர்பாக ஆய்வு செய்ய கடந்த 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அந்தக் குழு கடந்த 2019 டிசம்பரில் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் 233 பக்க அறிக்கையை, ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் சமர்ப்பித்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த அறிக்கையை அரசு வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை ஹேமா கமிட்டி அறிக்கையை கேரள அரசு வெளியிட்டுள்ளது.
ஹேமா கமிட்டி அறிக்கை கூறும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்:
- மலையாள திரையுலகில் வாய்ப்புகளைப் பெற பெண்கள் பாலியல் ரீதியாக (casting couch) சுரண்டப்படுகிறார்கள் என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
- திரையுலகில் வாய்ப்புகளைப் பெற பல முறை பாலியல் ரீதியான சுரண்டல்கள் நடைபெறுவதாகவும், மாஃபியா உள்ளிட்ட நிழல் செயல்பாடுகளினால் ஆபத்து நிறைந்ததகாவும் இருப்பதாக இந்த அறிக்கையில் அதிர்ச்சிகள் பல வெளியாகியுள்ளன.
- பல நடிகர்கள் திரைப்பட வாய்ப்புக்காக சமரசம் செய்து கொள்ளுமாறு பெண்களை வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சமரசம் செய்து கொள்பவர்களை சமரசம் செய்து கொள்பவர்கள் என்று முத்திரைக் குத்தி அடையாளப்படுத்தும் ஆபத்தான போக்கும் இருந்து வருகிறது.
மலையாள சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. மற்ற தொழில்களை போல இல்லாமல் பாலியல் சுரண்டல் இங்கே வாய்ப்புகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர், மருத்துவர், பொறியியல் போன்ற துறைகளில் பெண்கள் இத்தகையை சூழலுக்கு தள்ளப்படுவதில்லை. திறமை மட்டுமே அங்கு முதலிடம் வகிக்கிறது. ஆனால், சினிமாவில் மட்டும் பாலியல் சுரண்டல் முதன்மையானதாக இருப்பது வெட்ட வெளிச்சம் என்றும் பாதிக்கப்படுவோர் காவல்துறையினரிடம் புகார் அளிக்கத் தயங்குவது சைபர் தாக்குதல்கள் குறித்த பயம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அதிகாரம் படைத்தவர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு மாஃபியா போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். அவர்களை எதிர்க்க முடியாது என முன்னணி நடிகை ஒருவர் தெரிவித்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- படப்பிடிப்புக்கு பெண்கள் சென்றால் அவர்கள் தங்கும் விடுதிகளின் அறைக்கதவுகளை குடிபோதையில் தட்டி துன்புறுத்தல் செய்வதும் நடந்து வருகிறது என்றும் இதனால் பெண்கள் பெற்றோர் அல்லது பாதுகாப்புக்காக குடும்ப உறுப்பினர்களுடன் செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பாலியல் அத்துமீறல் குறித்த விவாகாரங்களை வெளியே சொன்னால் அவருக்கு அதோடு சரி! வாய்ப்பே வழங்கப்படமாட்டாமல் திரையுலகிலிருந்து ஒழிக்கப்படுவதும் நடந்து வருகிறது. எனவே, வாய்ப்புக்காக மவுனம் காக்கின்றனர் என்று ஹேமா கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக ’அம்மா’ என்னும் மலையாள நடிகர் சங்கம் உள்ளிட்ட திரைப்பட சங்கங்கள் உரிய கவனம் எடுத்து பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலர் தாங்கள் சினிமாவுக்குள் நுழைந்ததற்கான ஸ்கிரீன் ஷாட்கள் சில வீடியோ காட்சிகள் மற்றும் ஆடியோக்கள் ஆகியவற்றையும் நீதிபதி ஹேமா கமிட்டியிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர். தொழில்துறையில் உள்ள சில நபர்கள் தங்களை உடலுறவு கொள்ளும்படி வற்புறுத்துகிறார்கள். சினிமாவில் இந்த நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று பல பெண்கள் ஹேமா கமிட்டி முன் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் கமிட்டியின் முன்பு சம்பந்தப்பட்ட பெண்கள், செட்டில் கழிப்பறை வசதியோ அல்லது உடை மாற்றும் அறையோ இல்லை என்றும் வெளிப்புறப்படப்பிடிப்பு என்றால் திறந்த வெளியில் பாடுபட்டு மறைத்துக் கொண்டுதான் உடல் கழிப்புகளை அகற்ற முடிகிறது என்று கூறியுள்ளனர். சிறுநீர் கழிக்க கழிப்பறை இல்லாததாலேயே செட்டில் தண்ணீர் குடிக்காமலே இருந்ததாகவும் சில பெண்கள் கமிட்டியிடம் தெரிவித்துள்ளனர். காரவன்கள் போன்ற வசதிகள் பெரிய ஹீரோ, ஹீரோயின்களுக்கு மட்டுமே உள்ளது.
"சினிமாவில் பெண்களின் பிரச்சனைகளை கையாள்வதற்கு, சட்டத்தின்படி ஒரு சுதந்திர தனிக்குழு அரசாங்கத்தால் அமைக்கப்பட வேண்டும் என்று கூறுவதற்கு எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. அப்போதுதான் பெண்கள் மலையாளத் திரையுலகின் தீமைகளில் இருந்து விடுதலை பெற முடியும்,” என்று ஹேமா கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
இந்தக் கமிட்டி அறிக்கையில் எந்த ஒரு நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் பெயர்களையும் வெளியிடாததே. அதற்குக் காரணமாக அறிக்கை கூறுவது என்னவெனில்,
”இது ஆண்கள், பெண்கள் மற்றும் திரைத் தொழில்துறையின் நலன்களையும் பாதுகாக்க செய்யப்படுகிறது. எங்களின் செயல்பாடு சினிமாவில் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளை ஆய்வு செய்வது மட்டுமே, யாரையும் பெயரிடவோ, அவமானப்படுத்தவோ, குற்றவாளிகளை வெளிக்கொணரவோ அல்ல,” என்கிறது.