பொறியாளர்கள் சென்னையில் தொடங்கிய பிரியாணி கடை!
இன்ஜினியரிங் முடித்த மூன்று நண்பர்கள் தங்கள் சொந்த சேமிப்பில் இருந்து 2015- தொடங்கிய உணவகம் ‘மெட்ராசி பிரியாணி’-ன் வளர்ச்சிக் கதை!
இன்று பல பொறியாளர்கள் வேலைவாய்ப்பை எதிர்ப்பார்க்காமல் தொழில் தொடங்கி தொழில்முனைவர்களாக முன்னேறுகிறார்கள். அதே போன்று தான் திருநெல்வேலியை சேர்ந்த பொறியாளர் ஷங்கர் ’மெட்ராசி பிரியாணி’ என்னும் உணவகத்தை தொடங்கி ஒரு தொழில்முனைவராய் வளர்ந்துள்ளார்.
“படிப்பு முடிந்த உடன் குடும்பச் சூழலினால் என் உறவினரின் ஒரு சுற்றுலா நிறுவனத்தில் பணிப்புரிந்தேன். அங்கு தொழில் ரீதியாக என்னால் முடிந்தவரை கற்றுக்கொண்டேன்,”
என தன் தொழில் பயணத்தின் தொடக்கத்தை நம்முடன் பகிர்கிறார் ஷங்கர். அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம் ஷங்கருக்கு தொழில் தொடங்கும் ஆர்வத்தைத் தூண்டியது. அந்த ஆர்வத்தினால் உணவு விநியோக நிறுவனத்தை சொந்தமாக தொடங்க முடிவு செய்தார். ஆனால் அதற்கு மேற்கொண்ட ஆராச்சியில் பல சிக்கல்கள் உள்ளது என்பதை கவனித்தார்.
“உணவு விநியோகத்தில் உணவின் தரம் நம் கையில் இல்லை, அடுத்து உரிய நேரத்தில் உணவை சேர்க்க ஆட்கள் தேவை. அதனால் இந்த யோசனையை கைவிட்டேன்.”
உணவு விநியோகத்தில் உள்ள சிக்கல்களை எண்ணி சொந்தமாக உணவகம் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அதுவும் ஒரு பிராண்டாக உருவாக்க வேண்டும் என முடிவி செய்தார்.
“உணவகம் என்று முடிவு செய்த உடனே எனக்கு தோன்றியது பிரியாணி மட்டும் தான். ஏன் என்றால் பிரியாணியை எவரும் வேண்டாம் என்று சொன்னது இல்லை,”
என மெட்ராசி பிரியாணி தோற்றத்தை விளக்குகிறார்.
உணவகம் தொடங்கியதற்கு காரணம்:
திருநெல்வேலியில் வளர்ந்த ஷங்கருக்கு அங்கு பெயர் போன இருட்டு கடை அல்வா மற்றும் ருச்சி உணவகம் தான் உணவகம் வைக்கக் காரணம் என்கிறார்.
“திருநெல்வேலி என்றாலே இந்த இரு உணவு கடைகள் தான் அனைவருக்கும் நியாபகம் வரும். மக்கள் இந்த கடையில் கூட்டமாக வரிசையில் நின்று வாங்குவார்கள்.”
இதுவே மெட்ராசி பிரயாணி அமைக்க ஒரு பெரும் ஊந்துதலாய் இருந்தது என்கிறார். அது மட்டுமில்லாமல் திருநெல்வேலியில் ருச்சி உணவகம் 2கீமிக்கு ஒன்று இருக்கும், பரோட்டா உண்ண அதைத் தாண்டி வேறு எங்கும் செல்ல முடியாது. அது போல் மெட்ராசி பிரியாணி ஆக வேண்டும் என்கிறார்.
தொழில் பயணத்தின் சிரமங்கள்
மூன்று சகோதரர்கள் இணைந்து தங்கள் சொந்த சேமிப்பில் இருந்து இந்நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். தங்கள் குடும்பத்தின் முதல் தொழில் முனைவர்கள் என்பதால் தொடக்கத்தில் நிதி மற்றும் குடும்பச் சூழலால் பல சிரமங்களை சந்தித்ததாக தெரிவித்தார் ஷங்கர்.
“தொழில் தொடங்கி ஒரு மாதம் எந்த வித சிரமும் இன்றி முறையாக சென்றது. ஒரு வருடம் கழிந்த பின் மீண்டும் பணம் இல்லாமல் திண்டாடினோம்.”
ஒரு வருடம் நண்பர்கள் மற்றும் தங்கள் குடும்பம் அளித்த பண உதவியோடு உணவகம் நன்றாக நடந்தது. ஆனால் நிறுவனத்தில் இது எல்லாம் படிப்பினை என்கிறார். மேலும் தங்களை வழி நடத்த ஆலோசகர் எவரும் இல்லாதது பெரும் சிக்கலாக இருந்தது என்றார்.
ஆனால் தற்பொழுது சாய்கிங் மற்றும் ஸ்நாக்ஸ்எக்ஸ்பெர்ட் நிறுவனர்கள் மெட்ராசி பிரயாணிக்கு ஆலோசனை செய்கின்றனர்.
மெட்ராசி பிரியாணியின் வளர்ச்சி
முதலில் ஜோமாட்டோ, ஸ்விகி, புட் பாண்டா போன்ற உணவு விநியோகத்துடன் இணைந்து தங்கள் பிரியாணியை விநியோகம் செய்யத் தொடங்கினார்.
2015-ல் தொடங்கி முதல் மாதத்திலேயே ஒரு நாளுக்கு 40 பிரியாணிகளை விநியோகம் செய்தனர். இன்று இரண்டு வருடம் ஆன நிலையில் ஒரு நாளுக்கு 250-க்கு மேலான பிரியாணிகள் விற்கப்படுகிறது.
“மூன்று மாதத்திற்குள் ஒரே வாடிக்கையாளருக்கு 100 பிரயாணிகளை விற்றோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் விருப்பம் எங்களுக்கு தெரிய வந்தது,” என தங்கள் முதல் வெற்றியை விவரிக்கிறார்.
ஷங்கரின் முக்கிய நோக்கம் விலை பட்டியலில் உள்ள வித்தியாசத்தை நீக்குவதுதான். உணவகத்தில் உண்பதற்கும், பார்சல் வாங்குவதற்கும் உணவின் விலை வெவ்வேறாக இருக்கும். இதை மாற்ற வேண்டும் என அவர் எண்ணினார்.
“பார்சலுக்கு அதிக விலை வசூலிப்பது தவறு. உணவகத்தில் உண்டால் சூழல், சேவைக்கு என அதிகம் பணம் வசூலிக்கலாம். ஆனால் பார்சலுக்கு உணவுக்கான பணத்ததை மட்டுமே வாங்க வேண்டும்,” என்கிறார்.
மெட்ராசி பிரியாணியில் இதன்படி விலை நிர்ணையிக்கப்படுகிறது. குறைந்த விலையில் தரமான பொருட்களை தருவதே இவர்களின் நோக்கம். மூன்று பேரால் தொடங்கிய இந்நிறுவனம் இன்று 18 பேர் கொண்ட குழுவாக உயர்ந்துள்ளது.
“எங்கள் குழுவில் அனைவரும் பொறியாளர்களாக இருப்பதால் ’இன்ஜீனியர் பிரியாணி’ என டாக்லைன் வைத்துள்ளோம்.”
இந்த பொறியாளர்களின் உணவகம் பல இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. ஓஎம்ஆர் சாலையில் கூடிய விரைவில் வரவிருக்கிறது. பல ரீடைல் கடை திறப்பதே இவர்களின் லட்சியமாகும்.