அன்று அரையாண்டில் 6 கோடி கடனாளர்; இன்று ரூ2700 கோடி மதிப்புள்ள ஸ்னாக் நிறுவன உரிமையாளர்!

  By jaishree |21st Jul 2018
  சிற்றுண்டி வர்த்தகத்தில் சிறப்பான வருவாய் ஈட்டும் அமித், ரூ2,700 கோடி மதிப்புள்ள ஒரு ஸ்னாக்ஸ் நிறுவனத்தை எப்படி உருவாக்கினார்?  
  Clap Icon0 claps
  • +0
   Clap Icon
  Share on
  close
  Clap Icon0 claps
  • +0
   Clap Icon
  Share on
  close
  Share on
  close

  அதிக மூலதனத்துடன் சந்தையில் இறங்கி கொடிக்கட்டி பறக்கும் அந்நிய சிற்றுண்டி ஜாம்பவான்கள், உள்நாட்டு சிற்றுண்டி வர்த்தகத்தை கபளீகரம் செய்துக் கொண்டிருக்கும் வேளையிலும், 15 லட்ச முதலீட்டில் மத்திய பிரதேசத்தில் தொடங்கப்பட்ட ‘யெல்லோ டைமண்ட்’ ஸ்நாக்ஸ் நிறுவனம், இன்று ரூ 2,700 கோடி மதிப்புள்ள வர்த்தக சாம்ராஜ்யமாக வளர்ந்து நிற்கிறது. இந்த அசாதாரண வளர்ச்சிக்குப் பின் நிற்பது வெகு சாதாரண மனிதர் அமித் குமாத், யெல்லோ டைமண்ட்டின் சிஇஓ.

  1992ம் ஆண்டு. மத்தியபிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த அமித் குமாத், அமெரிக்காவில் அறிவியலில் முதுகலைப் பட்டம் படித்து முடித்துவிட்டு, தாய் நாட்டில் தான் பணிபுரிய வேண்டும் என்னும் நோக்கில் நாடு திரும்பினார். ஆனால், துரதிருஷ்டவசமாய் அவருக்கு எந்த கம்பெனியும் கதவு திறக்கவில்லை. 

  தொடர் விடாமுயற்சிக்கு பலன் கிடைக்காத விரக்தியில், தந்தையின் பிசினசை கையில் எடுத்துள்ளார். இந்தூரின் பரபரப்பான அங்காடித் தெருவில், மொத்த துணி வியாபாரம் செய்து வந்தார் அமித்தின் அப்பா. அப்பாவுக்கு துணையாகவும், தொழிலை விரிவுப்படுத்தவும் களத்தில் இறங்கினார் அமித். அவர் எதிர்பார்த்த வருவாயையும் தந்துக் கொண்டிருந்தது துணிக்கடை. அதன் லாபத்தை முதலீட்டாக்கி சாப் டிரையினிங் இன்ஸ்டிடியூட்டையும், ரசாயன கம்பெனியும் தொடங்கினார். 

  பட உதவி: Moneycontrol.com

  பட உதவி: Moneycontrol.com


  2001ம் ஆண்டு தொடங்கப்பட்ட ரசாயன நிறுவனத்தின் வியாபாரங்களைக் கையாள பிரத்யேக இணையத்தளத்தையும் தொடங்கி நிர்வகித்துள்ளார். ஆனால், ரசாயான நிறுவனத்தை தொடங்கிய ஓராண்டுக்குள் ரூ 6 கோடி கடனில் மூழ்கி உள்ளார். அடுத்தடுத்தும் கடன் சுமை பெருக, கம்பெனியை மூட வேண்டிய கையறுநிலைக்கு தள்ளப்பட்டு, நிறுவனத்தை மூடினார். அமித், அவரிடமிருந்த சேமிப்பை மட்டும் இழக்கவில்லை, இந்தூரில் இருந்த சகவணிகர்களின் மரியாதையும் இழந்தார். ஆனால், அதற்காக துவண்டு போபவரில்லை அமித், கடன்காரர்களிடம் கடனை திருப்பி செலுத்தி உள்ளார்.

  “கம்பெனியை இழுத்து மூடிய பிறகு, இன்று ஒரு முழுநாள் என்ன செய்ய போறோம்னு கூட தெரியாமல் விழி பிதுங்கி அலைந்திருக்கேன். வெளியில் செல்லும் போது, ஒன்றுக்கு இரண்டு தடவை பஸ்ல போறதா? நடந்தே போயிரலாமானு கூட யோசித்திருக்கேன்...''

  என்று கூறும் அமித், இத்தனை இடற்பாடுகளும் நடந்து முடிந்த ஓராண்டில், அடுத்த தொழிலுக்கு மனதினுள் அடிக்கல் நட்டுவிட்டார். குழந்தைகளின் ஆல் டைம் பேவரைட்டும், ஐபிஎல் ஆகினாலும், ஐந்தரை மணி சீரியலாகினும் கைகள் தேடும் நொறுக்குத் தீனியை தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவத் திட்டமிட்டார். 

  ஐடியா ரெடி ஆனால், முதலீடு..? ஆம், முதலீடு கேள்விக் குறியாகவே இருந்தது. அச்சமயத்தில், அமித்தின் அண்ணன் அபூர்வா குமாத் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து கொண்டிருந்த அமித்தின் குடும்ப நண்பரான அரவிந்த் மேஹதாவும் நிறுவனத்தின் பங்குதாரர்களாக களமிறங்க, மூவேந்தர்களும் ஸ்னாக்ஸ் வியாபாரத்தை இனிதே தொடக்கினர். 

  அமித்தின் குடும்பமும் ரூ15 லட்சத்தை முதலீட்டை வழங்க முன்வந்தது வித் ஒன் கண்டிஷன். ஒருவேளை, எடுக்கும் முயற்சி தோல்வி அடைந்தால் முழுப்பணத்தையும் திருப்பி கொடுப்பதாக வாக்குறுதி அளிக்க வேண்டும் என்பதே அது. 2002ம் ஆண்டு லக்னோவில் ‘பிரதாப் ஸ்னாக்ஸ்’ என்ற பெயரில் ‘சீஸ் உருண்டை’களை தயாரித்து அதை இந்தூர் மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில் விற்பனையைத் தொடக்கினர். 

  தொடக்கத்தில் சொந்த தயாரிப்புக் கூடம் அமைக்காமல், உள்ளூரில் உணவுப் பதப்படுத்துதல் மற்றும் தயாரிப்பு ஆலை வைத்திருந்தவர்களிடம் 20,000 பெட்டி சீஸ் உருண்டைகளை உற்பத்தி செய்து தர ஆர்டர் கொடுத்துள்ளனர். உணவு தயாரிப்பு ஆலை அமைப்பதற்கான போதிய மிஷின்களும், இடவசதியும் இல்லாதது உற்பத்திக்கூடம் அமைக்காததற்கான காரணமாக இருந்தாலும், வலுவான வினியோக கட்டமைப்பை உருவாக்குவதிலே அவர்கள் கவனமாக இருந்துள்ளனர். 

  “மும்பையில் ஒரு விநியோகிப்பாளரை முதன் முதலில் சந்தித்தபோது, அவர் பிராண்டின் நம்பகத்தன்மையை குறித்து தயக்கம் தெரிவித்தார். இறுதியாய், 50 பெட்டிகளை மட்டும் வாங்கிக் கொண்டு, ஒரே மாதத்தில் பாக்கெட்டுகள் விற்றுவிட்டால் அவர் பிரதாப் ஸ்னாக்குடன் சேர்ந்து பயணிப்பதாக வாக்குறுதி அளித்தார். அதிர்ஷ்டம் என்று சொல்வதா? சந்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது என்று சொல்வதா? என்று தெரியவில்லை, எல்லா பெட்டிகளும் விற்று தீர்ந்துவிட்டன,” 

  என்று நினைவுக்கூறும் அமித் அவருடைய முதல் விநியோகஸ்தர், இன்று ‘பிரதாப் ஸ்னாக்சின்’ வருவாயில் 10 சதவீதத்தை (ரூ 70 கோடி) அவரது வருவாயாக ஈட்டு வருகிறார்.

  image


  நிறுவனத்தை தொடங்கிய முதல் ஆண்டில் ரூ 22 லட்சமாய் இருந்த வருவாய் அடுத்த ஆண்டே, ரூ 1 கோடியாக அதிகரித்தது. மூன்றாவது ஆண்டிலே ரூ 7 கோடியை தொட்டு, ‘பிரதாப் ஸ்னாக்ஸ்’ உயரப் பறக்க ஆயத்தமானது

  சீஸ் உருண்டைகளுடன், இந்தூரில் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் யுனிட்டையும் தொடங்கி உற்பத்தி செய்யத் தொடங்கியது. நாள்தோறும் ஆயிரக்கணக்கில் உற்பத்தி செய்யப்பட்ட ‘பிரதாப் ஸ்னாக்ஸ்’ சிப்ஸ்கள், சந்தையில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த பிரிட்டோ லேசுக்கு போட்டியாளராக மாறியது. அது மட்டுமின்றி, 2006ம் ஆண்டில் பெப்ஸி கோ இந்தியா நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்ட புகழ்பெற்ற சிற்றுண்டியான குர்குரேவிற்குப் போட்டியாக ‘சுல்புலே’ என்ற தின்பண்டத்தையும் அறிமுகப்படுத்தினர்.

  பிரதாப் ஸ்னாக்சின் பிரதான கஸ்டமர்களான குட்டி சுட்டீஸ்களை கவர்வதற்காகவே, சிப்ஸ் மற்றும் சீஸ் உருண்டை பாக்கெட்டுக்குள்ளே விதவிதமாய் விளையாட்டுப் பொருள்களை சேர்த்து, பிசினசை பிக் அப் செய்துள்ளனர். அதுவரை பிரதாப் ஸ்னாக்ஸ் என்ற பெயரில் செயல்பட்டுவந்த நிறுவனம், 2011ம் ஆண்டு ’யெல்லோ டைமண்ட்’ (Yellow Diamond) என்று பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. 

  வெறும் மூவரால் தொடங்கப்பட்ட ‘யெல்லோ டைமண்டில்’ இன்று நேரடியாக 750 ஊழியர்களும், கான்ட்ரக்ட் ரீதியில் மறைமுகமாக 3000 ஊழியர்களும் பணிபுரிகின்றனர். தவிர, யெல்லோ டைமண்டின் பிராண்ட் தூதுவராக சல்மான்கான் இருக்கிறார்.

  யெல்லோ டைமண்ட் நிறுவனத்தின் வெற்றியைப் பார்த்த உலகளவில் புகழ்பெற்ற வியாபார நிதி நிறுவனமான செகோயா கேப்பிடல் 2009ம் ஆண்டு முதலீடுகளுக்காக அவர்களை அணுகியது. இருந்தாலும், குமாத் சகோதரர்கள் இந்த 30 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யும் நிறுவனத்திற்குச் ஓகே சொல்வதற்கு முன் கிட்டத்தட்ட 18 மாதங்கள் தீவிரமாக சிந்தித்துள்ளனர். பின் சம்மதம் சொல்லவே, கிடைத்த முதலீட்டைக் கொண்டு சிப்ஸ் தயாரிக்கும் ஆலையை அமைத்துள்ளனர். 

  யெல்லோ டைமண்ட் நிறுவனர்கள்: அர்விந்த் மெஹ்தா, அப்பூர்வ குமத் மற்றும் அமித் குமத்

  யெல்லோ டைமண்ட் நிறுவனர்கள்: அர்விந்த் மெஹ்தா, அப்பூர்வ குமத் மற்றும் அமித் குமத்


  இப்போது வியாபாரத்தில் சீஸ் வளையங்கள் 42 சதவீதமும், சிப்ஸ் 26 சதவீதமும் லாபத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. விரிவுப்படுத்தலுக்கான வேலையிலும் இறங்கியது யெல்லோ டைமண்ட். ஆம், சீஸ் உருண்டை, உருளைக் கிழங்கு சிப்ஸ் உற்பத்திக்கு பின் அவர்கள் டிக் அடித்த அடுத்த ஸ்நாக்ஸ் சாக்லேட் குக்கீஸ். கோதுமை மற்றும் மக்காச்சோள மாவு கலந்து பிசைக்கப்பட்டிருந்த மாவுகள், சமையல் இயந்திரத்தின் உதவியுடன் குட்டி குட்டி வட்ட வடிவ பிஸ்கட்களாக மாற்றப்படுகிறது. பிஸ்கட்டுகள் சுடப்பட்டு, அவற்றில் ஜாம் 68 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் ஊற்றப்படுகின்றன. பின், பிஸ்கட்டுகள் குளிர் வைக்கப்பட்டு, அதன்மீது சாக்லேட் லிக்யூட் ஊற்றப்பட்டு பிஸ்கட்கள் இறுதி நிலை அடைகின்றன. இதுவே யெல்லோ டைமண்டின் சாக்லேட் பிஸ்கட் ரெசிபி. கூல் ரெசிபி என்றாலும், கூலாக்கினாலும் சூடான சாக்லேட் உடனடியாக கெட்டியாவதில்லை என்பதால், பிளாஸ்டிக் கவர்களிலே ஒட்டிக் கொண்டுள்ளது. அடுத்தச் சில வாரங்களில் சந்தையில் சாக்லேட் பிஸ்கட்டுகளை அறிமுகப்படுத்த திட்டமிடப் பட்டதால் இத்தாலியில் இருந்து உணவு தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்பிரச்சினையைத் தீர்க்க உதவியுள்ளனர். 

  இன்று, யெல்லோ டைமண்டின் தின்பண்டங்கள் கனடா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு வியாபாரத்துக்காக பறந்து செல்கின்றன. இந்த நிறுவனம் கடந்தாண்டுச் செப்டம்பர் மாதம் பிஎஸ்ஈ -இல் பட்டியலிடப்பட்டு இந்திய பங்கு பரிமாற்றத்தில் ரூ. 2700 கோடி மதிப்பில் உயர்ந்துள்ளது.

  ஒரு நிறுவனமானது குறிப்பிட்ட பிராந்தியத்தில் தன்னை நிலைநாட்டிய பிறகே, நாடு முழுவதும் விரிவுப்படுத்துதலை இலக்காக கொள்ளவேண்டும், அதையே உணவு சார்ந்த தொழிலில் இறங்குபவர்களுக்கான முதல் அறிவுரையாகவும் வழங்குகிறார். ஆம், அவர் கூற்றே மெய் என்பதற்கு அவரே சான்று. 

  தகவல்கள் உதவி: MoneyControl.com