Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

சமூக ஊடகத்தை கண்மூடித்தனமாக நம்பாமல், தீவிர ஆய்வும், நம்பகமான தளங்கள் மூலம் தகவல்களை அறிந்து ஷேர் செய்யுங்கள்!

சமூக வலைதளங்களால் விழிப்புணர்வா? சீரழிவா? என்ற தலைப்பில் நடைப்பெற்ற விவாத நிகழ்ச்சியின் முடிவில் இந்த கருத்தினை அறிவுறுத்தினார் ரங்கராஜ் பாண்டே!

சமூக ஊடகத்தை கண்மூடித்தனமாக நம்பாமல்,  தீவிர ஆய்வும், நம்பகமான தளங்கள் மூலம் தகவல்களை அறிந்து ஷேர் செய்யுங்கள்!

Tuesday March 26, 2019 , 4 min Read

இன்றைய காலகட்டத்தில் விஸ்வரூப வளர்ச்சியை அடைந்துள்ள சமூக ஊடகங்களால் மக்களிடையே பல விஷயங்களில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை. ஆனால் அவற்றினை மக்களாகிய நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமா? அது உருவாக்கப்பட்டதன் உண்மையான பின்னணியில் இன்றும் வலம் வருகின்றதா?சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தோடு, எதிர்மறையான விஷயங்களுக்காக சமூக வலைதளங்கள் குற்றஞ்சாட்டப்படுவது எதனால்? என்பன போன்ற பல கேள்விகள் உருவாகியுள்ள அளவிற்கு அதன் பங்கு இன்று மேலோங்கி நிற்கிறது.

இதனை கருத்தில் கொண்டே சென்னையைச் சேர்ந்த நிறுவனமான ‘ப்ராண்ட் அவதார்’ மக்களிடையே சமூக வலைதளங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ‘இந்திய நெட்டிசன்ஸ் மூவ்மண்ட்’ என்று அமைப்பை தொடங்கி நிகழ்ச்சி ஒன்றை கடந்த வாரம் சென்னையில் நடத்தினர்.

சமூக வலைதளங்களால் விழிப்புணர்வா? சீரழிவா? என்ற தலைப்பில் நடைப்பெற்ற விவாத நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தியவர் தந்தி டிவி முன்னாள் ஆசிரியரும், புதிதாக களம் இறங்கும் சமூக ஊடகமான ’சாணக்யா’-ன் நிறுவனர் மற்றும் சிஇஒ ரங்கராஜ் பாண்டே.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், ஆன்லைன் மூலம் தொழில் புரியும் மற்றும் ஊடகங்களில் அனுபவமிக்க வல்லுனர்கள் பங்கேற்பாளர்கள் முன் உரையாற்றினர். ஸ்மைல் சேட்டை இணை நிறுவனர் ராம் குமார், SIMS மருத்துவமனை துணைத் தலைவர் Dr.ராஜு சிவசாமி மற்றும் யுவர்ஸ்டோரி தமிழ் ஆசிரியர் இந்துஜா ரகுனாதன், சமூக ஊடகங்களில் வர்த்தகங்களின் பின்னணி, மார்கெட்டிங் மற்றும் விளம்பரங்களுக்காக எப்படி பயன்படுத்தப் படுகின்றன எனவும், அதனால் சமூக தளங்களில் வரும் அனைத்தையும் மக்கள் கண்மூடித்தனமாக நம்புவது சரியல்ல என்று பேசினர். 

இதைத்தொடர்ந்து, ரங்கராஜ் பாண்டே தலைமையில் நடைப்பெற்ற விவாத மேடை வடிவிலான உரையாடல் நடைப்பெற்றது. அதில் சிறப்புப் பேச்சாளர்களாக; நடிகை கஸ்தூரி, Dr.அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ், சைபர் குற்றவியல் நிபுணர் மற்றும் சமூக ஊடக வல்லுனர் ப்ரைம்பாயிண்ட் ஸ்ரீனிவாசன், நேச்சுரல்ஸ் நிறுவனர் சிகே குமாரவேல், யூட்யூப் விமர்சகர் ஜாக்கி சேகர் கலந்து கொண்டு பேசினர்.

தொடக்க உரையாக பேசிய ரங்கராஜ் பாண்டே,

“நான் தொலைக்காட்சி சேனலில் பணிபுரிந்த போது ஆன்லைனின் ஊடுறுவை பெரிதாக நினைத்தது இல்லை. ஆனால் ஒரு ஆய்வின் மூலம் மக்கள் தொகையில் தொலைக்காட்சி பார்ப்பவர்களின் பங்கு மொத்தம் 10% மட்டுமே என்று தெரிந்ததும், அதில் செய்தி சேனலுக்கான பங்கு எவ்வளவு, ஒரு குறிப்பிட்ட சேனலுக்கான பார்வையாளர்கள் என்பது மிக்ககுறைவு என்பதை புரிந்து கொண்டேன். அதே போல்,

”இன்றைய சமுதாயம் டிவி நிகழ்ச்சிகளையும் முக்கியமாக செய்திகளை ஆன்லைனின் தங்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் பார்ப்பதையே விரும்புவதை தெரிந்து கொண்டேன். இந்த ஒரு காரணத்துக்காகவே நானும் தற்போது ‘சாணக்யா’ என்னும் என் புதிய ஆன்லைன் தளம் மூலம் மக்களிடம் செய்திகளை ஆன்லைன் வடிவில் எடுத்துச்செல்ல களம் இறங்கிவிட்டேன்,” என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய ப்ரைம்பாயிண்ட் ஸ்ரீனிவாசன், இணையம் வந்த தொடக்கக்காலத்தில் ப்ளாக் வாயிலாக மக்கள் பதிவுகள் செய்த போது இருந்த தரம் மற்றும் கட்டுப்பாடு தற்போது, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டிவிட்டர் பதிவுகளில் இல்லை என்றார். சமூக வலைதளங்களை பலர் தவறாக பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது என்றார்.

திரை விமர்சகர் மற்றும் யூட்யூபர் ஆன ஜாக்கி சேகர் பேசுகையில்,

“பாரம்பரிய ஊடகங்கள்; ஆதிக்க சாதியினர் மற்றும் மேல்தட்டு மக்களின் கையில் இருந்த காலம் போய், இன்று தன்னைப் போன்ற சாமானியன், ஒடுக்கப்பட்டவர்களின் குரலை ஒலிக்க, சமூக ஊடகமே சிறந்தத் தளமாக உருவாகியுள்ளது,” என்றார்.

அவரைத்தொடர்ந்து பேசிய சிகே குமாரவேல், சமூக வலைதளங்கள் மக்களிடையே ஒரு நல்ல இணைப்புப் பாலம் என்றும் தொழில்முனைவோர்களுக்கு ஒரு சிறந்த தளம் என்றார்.

”டிவி, செய்தித்தாள்களில் விளம்பரங்கள் செய்த காலம் போய், சமூகஊடகங்கள் வாயிலாகவே தற்போது மார்க்கெடிங் செய்து முன்னேற முடிவது சிறந்த அம்சம்,” என்றார்.

அடுத்து பேசிய நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்கள், பண்டைக்கால திண்ணைப் பேச்சின் நீட்சியே என்றார்.

“ஒவ்வொரு செய்தி சேனலும் ஒவ்வொரு விதமாக செய்திகளை வழங்குவதால் மக்களுக்கு உண்மை எதுவென்றே பலமுறை புரிவதில்லை. இந்த இடத்தில் தான் சமூக தளங்கள் வாயிலாக மக்களின் உண்மையான கருத்துக்கள், செய்திகளுக்கு பின்னணியில் உள்ள விஷயங்கள் தெரிய வருகின்றது,” என்றார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த ரங்கராஜ் பாண்டே, செய்தி ஊடகங்கள் எல்லாம் பொய்யாகி விடாது என்றும், சமூக ஊடகங்களில் முகம் தெரியாத பலர் பரப்பும் செய்திகளில் நம்பகத்தன்மை இல்லை என்றார். இதற்கு மேற்கோளாக பல உதாரணங்களை கூறினார்.

“கடந்த ஆண்டில் நியூட்ரினோ, ஸ்டெரிலைட் ஆலைகள் குறித்த சர்ச்சைகள் எழுந்தபோது நான் பல வல்லுனர்களிடம் பேசி, அரசு ஆவணங்களை ஆராய்ந்த போது, அதில் மாறுபட்ட தகவல்கள் இடம்பெற்றதை கண்டேன். முக்கியமாக கேன்சர் நோய் அதிகரிப்பு என்ற சமூக ஊடக செய்திகளில் உண்மை இல்லை என்றும், சென்னையே புற்றுநோய் அதிகமுள்ள நகரமாக இன்றும் உள்ளது என தமிழக அரசு சுகாதாரத்துறை அறிக்கை தெரிவிக்கிறது, என்றார்.”

எனவே எந்த ஒரு விஷயத்திலும் மக்கள் தீவிரமாக ஆராய்ந்து, வல்லுனர்களின் கருத்துக்களை படித்து ஒரு விஷயத்தில் முடிவுக்கு வரவேண்டியது அவசியம் என்றார்.

இறுதியாக தன் கருத்துக்களை பேசிய பொன்ராஜ், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சமூக ஊடகம் இத்தகைய முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது.

”ஆனால் அதனை எப்படி கையாளவேண்டும் என்பதை குடும்பத்தினரும், கல்விநிலையங்களும் குழந்தைகளுக்கு சரியாக போதிப்பதில்லை. இதுவே அவர்கள் தங்களை அறியாமல் பொதுவெளியில் கண்டபடி பேசிடவும், ப்ளூ வேல் போன்ற அபாயகரமான விளையாட்டுகளில் சிக்கி உயிரிழக்கவும் வழி செய்தது. மேலும் இதற்கு சரியான அரசியல் தீர்வும் கொள்கையும் தற்போது தேவை என்றார்.”

பேச்சாளர்கள் தங்கள் கருத்துக்களை பேசியவுடன் ஒருசில பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் பாண்டே.

இறுதியாக விவாதத்தை முடிக்கையில், “ஜல்லிக்கட்டு, நெடுவாசல், ஸ்டெரிலைட் என பலப்பிரச்சனைகள் பற்றி சமூக ஊடகத்தில் விவாதிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் புரட்சியும் வெடித்தது என்றாலும், இதுபோன்ற முக்கியப் பிரச்சனைகளின் போது வல்லுனர் அல்லாதவர்களெள்ளலாம் தங்கள் கருத்துக்களை பதிவிட்டது மக்களிடையே மேலும் குழப்பத்தையே விளைவித்தது.

எனவே மக்கள் சமூக ஊடகத்தில் தகவல்களை நம்புவதற்கு முன் தீவிரமாக ஆய்வு செய்து, நம்பகமான தளங்களில், உண்மை நிலவரத்தை தெரிந்து கொண்டு அவற்றை பதிவிடவோ, ஷேர் மற்றும் ஃபார்வார்டு செய்யவேண்டும், என்று முடித்தார்.