டிவிட்டர் சி.இ.ஓ. பயன்படுத்தும் தேடியந்திரம் எது தெரியுமா?

டிவிட்டர் சி.இ.ஓ ஜேக் டோர்சி கூகுள் தேடியந்திரத்தை பயன்படுத்துவதில்லை தெரியுமா? அப்போ அவர் பயன்படுத்துவது என்ன?

2nd Dec 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

இணையத்தில் தேடல் என்று வரும் போது உடனே நினைவுக்கு வருவது கூகுள் தான். பெரும்பாலனோர் கூகுளையே பயன்படுத்துவதால் அது முன்னணி தேடியந்திரமாக விளங்குகிறது. ஆனால், கூகுள் தவிர வேறு பல தேடியந்திரங்களும் இருக்கின்றன. இவற்றில் ஒன்று தான் ’டக்டக்கோ’ ‘DuckDuckGo'.


மாற்று தேடியந்திரமாக பிரபலமாக இருக்கும் இந்த தேடியந்திரத்தையே தான் பயன்படுத்தி வருவதாக அண்மையில் டிவிட்டர் சி.இ.ஓ. ஜேக் டோர்சி கூறியிருந்தார்.

Jack
DuckDuckGo’-வை நான் விரும்புகிறேன். கொஞ்சம் காலமாக எனது டிபால்ட் தேடியந்திரமாக இருக்கிறது. இதன் செயலி இன்னும் சிறப்பாக இருக்கிறது’ என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

உடனே, இதற்கு ’டக்டக்கோ’ தரப்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்க பெருமிதமாக இருக்கிறது ஜேக். வாத்து பக்கம் உங்களை பெற்றிருப்பது மகிழ்ச்சி’ என டக்டக்கோ தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.


டக்டக்கோ மட்டும் அல்ல, டோர்சியின் கருத்திற்கு மேலும் பலர் பதில் அளித்து தங்கள் கருத்தை பதிவு செய்தனர். இந்த குறும்பதிவு ஆயிரம் முறைக்கு மேல் ரிடிவீட் செய்யப்பட்டு, 6 ஆயிரம் முறைக்கு மேல் லைக் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.


பலரும் டக்டக்கோவின் சிறப்புகளைத் தெரிவித்திருந்த நிலையில், என்ன இருந்தாலும் கூகுளுக்கு நிகராக வர முடியாது என்றும் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

டிவிட்டரில் இது ஒரு விவாதமாகவே உருவாகி, மீடியாவின் கவனத்தை ஈர்த்த நிலையில், டக்டக்கோ பற்றி மேலும் அறிய ஆர்வம் கொண்டவர்களுக்காக இந்த தேடியந்திரம் பற்றி ஒரு அறிமுகம்:

கூகுளுக்கு மாற்று

‘DuckDuckGo'-வை உங்களில் பலர் கேள்விபட்டிருக்காவிட்டாலும், இது ஒன்றும் புதிய தேடியந்திரம் அல்ல: கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தேடியந்திரம் இது. கேப்ரியல் வெயின்பர்க் (Gabriel Weinberg ) என்பவரால் கடந்த 2008ம் ஆண்டு இது அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு, மெல்ல வளர்ந்து இணைய உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறது.

கூகுள் அளவுக்கு பெரியது என்றோ, பிரபலமானது என்றோ சொல்ல முடியாவிட்டாலும், கூகுளுக்கு மாற்றாக கருதக்கூடிய அளவுக்கு டக்டக்கோ தன்னை நிலை நிறுத்திக்கொண்டிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், பயனாளிகளின் பிரைவசியை பாதுகாப்பதை டக்டக்கோ தனது குறிக்கோளாகக் கொண்டிருப்பது தான்.

கூகுள் நிகரில்லாத தேடல் சேவையை வழங்குவதாக பாராட்டப்பட்டாலும், அதன் காரணமாகவே பெரும்பாலானோரால் பயன்படுத்தப்பட்டாலும், கூகுள் மீது பிரைவசி தொடர்பாக தீவிர விமர்சனமும் இருக்கிறது. இணையத்தில் பயனாளிகளை கூகுள் விடாமல் பின் தொடர்ந்து அவர்கள் தொடர்பான தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறது என்பது தான் அந்த விமர்சனம்.

பிரைவசி பாதுகாப்பு

தேடுபவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற தேடல் முடிவுகளை வழங்கவே பயனாளிகளின் தரவுகள் சேகரிக்கப்படுவதாக கூகுள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், விளம்பர வருவாய்க்காகவே இந்தத் தகவல் சேகரிப்பு என்பது தான் நிதர்சனம். பயனாளிகள் தேடும் விஷயங்களுக்கு பொருத்தமான விளம்பரங்களை இடம்பெற வைப்பதற்காகவே, கூகுள் அவர்களின் இணைய சுவட்டை பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


விளம்பர வலை விரிக்க தகவல் திரட்டுவது தவிர்க்க இயலாதது என்பதால், கூகுளை பயன்படுத்தும் போது அதன் பின் தொடர்தலில் இருந்து தப்பிக்க வழி இல்லை. இணைய மொழியில் இது டிராக்கிங் என சொல்லப்படுகிறது.


இந்த பின்னணியில் தான், பிரைவசி நோக்கில் கூகுளுக்கு மாற்றாக டக்டக்கோ தேடியந்திரம் அறிமுகமானது. கூகுளைப்போல உங்களை பின் தொடர்வதில்லை என்றும் வாக்குறுதி அளித்து கவர்ந்திழுத்தது. சிறந்தத் தேடலை வழங்க, பயனாளிகளின் இணைய சுவடுகளை கண்காணிக்க வேண்டிய அவசியமில்லை, அதை நாங்கள் செய்வதும் இல்லை என டக்டக்கோ கம்பீரமாக கூறிக்கொண்டது.

கூகுளில் டிராக் செய்யப்படுவது மட்டும் பிரச்சனை அல்ல: அது முடிவுகளை வடிகட்டவும் செய்கிறது. அதாவது, பயனாளிகளின் கடந்த கால தேடல் வரலாறு அடிப்படையில், அது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட தேடல் முடிவுகளை அளிக்கிறது.

ஆக, கூகுளில் தேடும் போது எல்லோருக்கும் ஒரே விதமான தேடல் முடிவுகள் தோன்றுவதில்லை. அவர்கள் ரசனை மற்றும் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப தேடல் முடிவுகள் கூகுளால் அளிக்கப்படுகிறது. இது, வடிகட்டல் குமிழ் (filter bubble) என சொல்லப்படுகிறது.

சுதந்திரமான தேடல்

டக்டக்கோ இவ்வாறு தேடல் முடிவுகளை வடிகட்டித்தருவதில்லை என்றும் உறுதி அளிக்கிறது. எல்லோருக்கும் ஒரே விதமான தேடல் முடிவுகளையே அளிப்பதாகவும் தெரிவிக்கிறது. இந்தத் தனித்தன்மையான அம்சங்கள் மூலம், பிரைவசி ஆர்வம் கொண்டவர்களை டக்டக்கோவால் தன் பக்கம் ஈர்க்க முடிந்தது.


இதனிடையே கூகுள் போன்ற நிறுவனங்கள் பயனாளிகளை டிராக் செய்வது தொடர்பான சர்ச்சைகளால், தரவுகள் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து அதன் பயனாக டக்டக்கோவும் படிப்படியாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில், டிவிட்டரின் ஜேக் டோர்சியும் டக்டக்கோவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

டக்டக்கோ இணையதளம் மூலம் தேடல் சேவையை வழங்குவதோடு, ஸ்மார்ட்போன்களுக்காக பிரத்யேகமான செயலியையும் கொண்டுள்ளது. இந்தச் செயலி வடிவத்தையும் ஜேக் டோர்சி குறிப்பிட்டு பாராட்டியிருக்கிறார்.

தேடல் எப்படி?

கூகுள் போல, இணையவாசிகளின் ஒவ்வொரு அடிச்சுவட்டையும் பின் தொடர்வதில்லை, தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதில்லை என சொல்வதன் காரணமாக, டக்டக்கோ கவனத்தை ஈர்க்கலாம். ஆனால், கூகுளோடு ஒப்பிடும் போது அதன் தேடல் சேவை எப்படி எனும் கேள்வி எழலாம்.


டக்டக்கோ, கூகுள் போல பெரிய தேடியந்திரம் அல்ல. டக்டக்கோ எளிமையான தேடல் சேவையை அளிக்கிறது. டக்டக்கோ பிரைவசியை தனது முக்கிய அம்சமாக கருதுவதால், அது பிற தேடியந்திரத் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டே தனது தேடல் முடிவுகளை அளிக்கிறது. கூகுள் போல முழுவீச்சிலான தேடல் அட்டவணை அதனிடம் கிடையாது என்றாலும், அது சிறிய அளவில் தனக்கான சொந்தத் தேடல் தொகுப்பையும் கொண்டிருக்கிறது.

சொற்பமான வசதியை வைத்துக்கொண்டு, தூய்மையான தேடல் முடிவுகளை டக்டக்கோ வழங்குகிறது. அதாவது, விளம்பர நோக்கிலான தகவல்கள் இல்லாமல், தேடலுக்கு பொருத்தமான முடிவுகளை அது பிரதானமாக முன்வைக்கிறது.

உடனடி பதில்கள்

தேடல் முடிவுகளை பட்டியலிடுவது தவிர, உடனடி பதில்கள் எனும் வசதியையும் டக்டக்கோ அளிக்கிறது. தேடப்படும் வார்த்தைகளுக்கு ஏற்ப மிகவும் பொருத்தமான தகவல்களைத் திரட்டி, உடனடி பதிலாக தனியே முன்வைக்கிறது.


மேலும், பல புதுமையான தேடல் வசதிகளையும் அளிக்கிறது. இதன் ஐபேங் (iBang) எனும் வசதி மூலம் குறிப்பிட்ட இணையதளங்களில் மட்டும் தேடலாம். கூகுளில் இல்லாத வசதிகள் இவை எனக் குறிப்பிடப்படுகின்றன.


விளம்பர வருவாயை நம்பியிருந்தாலும், அதற்காக பயனாளிகளை பின் தொடர வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் பிரைவசியை மீறாமலே, விளம்பர வருவாய் ஈட்டுவது சாத்தியமே என்பது டக்டக்கோவின் நம்பிக்கையாக இருக்கிறது.


இணையத்தில் பிரைவசி கவலை அதிகரித்திருக்கும் நிலையில், டக்டக்கோ போன்ற மாற்று தேடியந்திரங்கள் அவசியம் என இணைய வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


டக்டக்கோ எப்படி இருக்கிறது என்பதை நீங்களே பயன்படுத்திப்பாருங்கள்: https://duckduckgo.com/

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding and Startup Course. Learn from India's top investors and entrepreneurs. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற

Our Partner Events

Hustle across India