கலெக்டர் அலுவலகத்தில் கஃபே: மாற்றுத் திறனாளிகளுக்குத் தோள் கொடுத்த ஆட்சியர்!
ஸ்பான்சர்கள் மூலம் 30 லட்சம் நிதி திரட்டி, ஆட்சியர் அலுவலகத்தில் உணவகம் தொடங்கி 15 மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய தொழில் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அந்த கலெக்டர் யார் தெரியுமா?
பொதுவாக மக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அரசு அதிகாரிகளிடம் அளிப்பார்கள். அரசு அதிகாரிகள் அவற்றை அரசின் பரிசீலனைக்கு அனுப்பி தீர்வு காண முயற்சிப்பார்கள். சில மனுக்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். சில மனுக்களுக்கு தாமதமாக தீர்வு கிடைக்கும். சில மனுக்கள் கிடப்பில் போடப்படும். இதுதானே நாட்டு நடப்பு.
ஆனால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஓர் படி மேலே போய் அனைவரும் அனைத்துக்கும் அரசையே எதிர்பார்த்தால் எப்படி, நாமே ஏதாவது செய்ய வேண்டும் என திட்டமிட்டு, தன்னிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்த 15 மாற்றுத் திறன் உடையோரைத் தேர்வு செய்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்து, ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே இடம் ஓதுக்கி, Dream Kitchen Cafe able என்ற ஓர் உணவகத்தை அமைத்துக் கொடுத்து அவர்களின் வாழ்வில் ஓளியேற்றி வைத்ததோடு, மற்ற அரசு அதிகாரிகளுக்கு முன்னுதாரணமாகவும் மாறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி. இவரிடம் அரசுப் பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறன் உடையோர் தொடர்ந்து மனுக்கள் அளித்து வந்தனர். இவற்றை ஆய்வு செய்த ஆட்சியர், இவர்கள் அனைவரின் பிரச்னைகளுக்கும் தீர்வு காண திட்டமிட்டு,
இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ஸ்பான்சர் பெற்று ரூ.29.47 லட்சம் மதிப்பில் அழகிய பூங்காவுடன் கூடிய Dream Kitchen Cafe able என்ற உணவகத்தினையும், டீ, காபி ஷாப்பையும் உருவாக்கி, கடந்த ஜுலை 8ம் தேதி திறந்து வைத்தார்.
இதில் முக்கிய அம்சமே இங்கு பணிபுரியும் அனைவருமே மாற்றுத்திறன் உடையோர். மாவட்ட ஆட்சியரிடம் அரசுப் பணி உள்ளிட்ட பல்வேறு நல உதவிகள் கோரி மனு அளித்தவர்கள்.
இந்நிகழ்வு குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறன் உடையோரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பல்வேறு பயிற்சிகள் மற்றும் கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன. இலவச பேருந்து அட்டை, உதவி உபகரணங்கள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஓர் பகுதியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் Dream Kitchen Cafe able என்ற உணவகம் மற்றும் பேக்கரி பல்வேறு நிறுவன சமுக பொறுப்பு நிதியின் மூலம் உருவாக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்துக்குத் தேவையான கட்டுமானப் பணிகள் மற்றும் பூங்கா அமைக்க ராம்கோ நிறுவனத்தின் மூலம் ரூ.6 லட்சமும், உணவகம், கழிப்பறை, கிச்சன் கட்டுமானம், பேக்கரி அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு சவுத் கங்கா புராஜெக்ட் நிறுவனம் மூலம் ரூ.15 லட்சமும், IOCL நிறுவனம் மூலம் ரூ.8.47 லட்சமும் வழங்கப்பட்டு, உணவகத்துக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் கணினி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் வழங்கப்பட்டது.
இந்த உணவகத்தில் நெகிழிகளைப் பயன்படுத்தாமல் பாக்குமட்டை உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை மட்டுமே பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் 15 மாற்றுத் திறன் உடையோர் பணிபுரிந்து வருகின்றனர். இதன்மூலம் மாற்றுதிறன் உடையோரின் வாழ்வாதாரம் உயரும்.
எனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் அலுவலர்கள், பொதுமக்கள் இந்த உணவகத்தைப் பயன்படுத்தி மாற்றுத்திறன் உடையோருக்கு உதவ வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்த உணவகத்தில் பணிபுரியும் கே. கண்ணன் என்பவர் நம்மிடம் தெரிவித்ததாவது, “எனக்கு இரண்டரை வயதில் ஏற்பட்ட போலியோ பாதிப்பால் ஓரு கால் ஊனமடைந்தது. இந்நிலையில் எனக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த எனக்கு ஊதியம் போதவில்லை. எனவே ஆட்சியரிடம் அரசு வேலை கோரி மனு அளித்தேன்.”
இந்நிலையில், திடீரென ஓரு நாள் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. என்னைப் போலவே பல்வேறு உதவிகள் கோரி மனு அளித்திருந்த 15 மாற்றுத் திறன் உடையோரைத் தேர்வு செய்து ஓர் சுயஉதவிக் குழுவாக்கினர்.
“எங்களுக்கு சுயதொழிலாக ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே உணவகம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதனை நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டோம். இதையடுத்து எங்களுக்கு 3 மாதங்களுக்கு கேட்டரிங், பேக்கிங் மற்றும் ஹோட்டல் மேனேஞ்மென்ட் பயிற்சி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜுலை மாதம் உணவகம் திறக்கப்பட்டதும் நாங்கள் எங்கள் உணவகத்தை தொடர்ந்து நடத்தத் தொடங்கினோம்,” என்கிறார்.
இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இதில் 3 மாற்றுத் திறன் உடைய பெண்களும் பங்கேற்றுள்ளனர். இவர்கள் குழுவில் 3 பேரால் சுத்தமாக நடக்க இயலாது. 3 பெண்களுக்கு லேசான ஊனம்,ஒருவருக்கு காது கேட்காது என ஓவ்வொருவரும் ஓரு வகையில் மாற்றுத்திறன் உடையவர்களாக உள்ளனர். டீ மற்றும் சமையல் மாஸ்டர் மட்டும் வேலைக்கு வைத்துள்ளனர். மற்ற பணிகள் அனைத்தயும் இவர்களே பங்கிட்டு செய்கின்றனர்.
3 பேர் காய்கனி வெட்டுகின்றனர். 3 பேர் உணவு பரிமாறுகின்றனர். 1 நபர் கேஷியராக பணிபுரிகிறார். எஞ்சிய நபர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சென்று அதிகாரிகளுக்கு டீ, வடை, பப்ஸ் போன்றவற்றை விற்பனை செய்கின்றனர்.
தினமும் சுமார் 10 ஆயிரம் ரூபாய்க்கு வருவாய் வந்தாலும், இன்னும் இவர்கள் தங்களுக்கு எவ்வாறு ஊதியத்தை பிரித்துக் கொள்வது என முடிவெடுக்கவில்லை. தங்களது அன்றாடச் செலவுகளுக்கு மட்டுமே பணம் எடுத்துக் கொள்கின்றனர்.
புதிய தொழிலில் ஈடுபட்டுள்ளதால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது ஆனால் போகப்போக சரியாகிவிடும் என நம்பிக்கைத் தெரிவிக்கிறார் கண்ணன். வார நாள்களில் பிஸியாக இருக்கும் இவர்களின் உணவகத்தில், சனிக்கிழமை மட்டும் கொஞ்சம் சுமராகத்தான் விற்பனையாகுமாம்.
தூத்துக்குடி மாவட்ட மக்கள், ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குச் செல்லும் போது இவர்களின் உணவகத்தைப் பயன்படுத்தி, இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவவேண்டும். அப்போதுதான் மாற்றுத் திறன் உடையவர்கள் இதுபோன்ற புதிய முயற்சிகளில் ஈடுபட்டு தாங்களாலும் சாதிக்க முடியும் என்பதை இந்த உலகத்துக்கு நிரூபிக்க இயலும்.