பார்லே நிறுவனத்தில் 10 ஆயிரம் பேர் பணி இழக்கும் அபாயம்...

விற்பனை தேக்க நிலைக் காரணமாக இந்த பணியிழப்பு இருப்பதாக தெரிகிறது.

பார்லே நிறுவனத்தில் 10 ஆயிரம் பேர் பணி இழக்கும் அபாயம்...

Friday August 23, 2019,

2 min Read

பிஸ்கெட் விற்பனையில் நிலவும் மந்தநிலை காரணமாக, 10,000 ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாட்டின் பெரிய பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனமான பார்லே தெரிவித்துள்ளது. பொருளாதார தேக்க நிலை மற்றும் ஜி.எஸ்.டி. வரி உயர்வு குறைந்தவிலை பிரிவில் பிஸ்கெட் விற்பனையை பெருமளவு பாதித்துள்ளதாக பார்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.


நாட்டில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆட்டோமொபைல் துறையில் வாகனங்கள் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதாக அண்மையில் செய்தி வெளியானது.

பார்லே

இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனமான பார்லே விற்பனை மந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10,000 உழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.


1929ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் பார்லே நிறுவனம், 10,000 கோடிக்கு மேல் விற்பனையை கொண்டுள்ளது. பார்லே-ஜி, மேரி, மோனகோ ஆகிய பிராண்ட் பிஸ்கெட்களை நிறுவனம் தயாரித்து வருகிறது. நிறுவனம் 10 உற்பத்தி ஆலைகளில் கொண்டிருப்பதோடு, 125 ஒப்பந்த ஆலைகளையும் கொண்டுள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேல் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.


பார்லே நிறுவனத்தின் பெரும்பாலான விற்பனை கிராமப்புறங்களில் இருந்து வருகிறது. குறைந்த விலை பிரிவில் அதிக பிஸ்கெட்களை நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், பொருளாதார மந்த நிலை மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு காரணமாக நிறுவன பிஸ்கெட் விற்பனையில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேக்கெட் ரு.5 க்கு விற்பனை செய்யப்படும், கிலோவுக்கு ரூ.100 க்கும் குறைவாக விலை கொண்ட, பிஸ்கெட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் என அரசை கோரி வருகிறோம். ஆனால் அரசு எந்த ஊக்கமும் அளிக்காவிட்டால், விற்பனை மந்த நிலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், 8,000 முதல் 10,000 ஊழியர்களை வேலையிழக்கச் செய்யும் நிலைக்கு தள்ளப்படுவோம்,” என பார்லே பிராடக்ட்ஸ் கேட்டகரி தலைவர் மயங்க் ஷா தெரிவித்துள்ளார்.

குறைந்த விலை பிஸ்கெட்கள் இதற்கு முன் 12 சதவீத வரி விதிப்புக்கு உள்ளானது. ஆனால் ஜி.எஸ்.டிக்கு பிறகு 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக பிஸ்கெட்களின் விலை உயர்த்தும் நிலை ஏற்பட்டு, விற்பனையை பாதித்துள்ளது. மேலும், 5 ரூபாய் பாக்கெட்டில் பிஸ்கெட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.


கிராமப்புற நுகர்வோர் இதன் காரணமாக பிஸ்கெட் வாங்குவதை குறைத்துள்ளதாக கருதப்படுகிறது. பிஸ்கெட்களின் விலை உயர்த்தப்பட்டது விற்பனையை பாதித்துள்ளதாக பார்லே தெரிவித்துள்ளது.

”ஜி.எஸ்.டி காரணமாக பிஸ்கெட் விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. அரசு ஊக்கமின்மை காரணமாக நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. எங்களைப் போன்ற பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனங்களின் முக்கிய வாடிக்கையாளர் பிரிவுக்கு ஏற்ப மத்திய மற்றும் குறைந்த விலை பிரிவில் அதிக பிராண்ட்களை கொண்டுள்ளோம். நுகர்வை ஊக்குவிக்க அரசு விரும்பினால், ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்,” என மயங்க ஷா கூறியுள்ளார்.

மற்றொரு பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியாவும் அண்மையில் பிஸ்கெட் விற்பனையில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.