'கடம்' இசையில் சாதனை படைக்கும் குமரி இளைஞர் அப்துல் ஹலீம்!
ஜனவரி 12, 2015 மாலை வேளை. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த முத்தலகுறிச்சியில் அப்துல் ஹலீமின் வீடு கொஞ்சம் பரபரப்பாக இருந்தது. கேரளா மாநிலம் கோட்டயத்திலிருந்து வந்த கின்னஸ் பார்வையாளர்கள் மனதில் அப்துல் ஹலீமின் கடம் எப்படி இருக்கும் என்ற ஆவல் சூடு பிடித்திருந்தது.
110 செ.மீட்டர் உயரமும், 252 செ.மீட்டர் விட்டமும் கொண்ட அந்த கடத்தை அப்துல் ஹலீம், அவர்கள் முன் வாசிக்கத் துவங்கினார். இவ்வளவு பெரிய கடம் உலகிலேயே வாசிக்கப்படுவது அப்துல் ஹலீமின் வீட்டில் தான். அந்த கடத்தை வாசித்தது மட்டுமல்லாமல் அதை உருவாக்கியதும் அவரே. இதே காரணத்திற்காக கின்னஸ் சாதனையுடன், லிம்கா சாதனையாளர் பட்டியலிலும் அப்துல் ஹலீம் இடம் பிடித்துள்ளார்.
நீண்ட குறுந்தாடியுடன், கறுப்பு கண்ணாடி அணிந்து காணப்படும் இந்த 32 வயது இளைஞரின் சாதனைப் பயணம் சற்று வித்தியாசமானது. கர்நாடக இசையில் மிகவும் அபூர்வமாகி போன கடத்தில், கிட்டத்தட்ட ராஜாவாகவே வலம் வருகிறார் அப்துல் ஹலீம்.
“எனது அம்மா சிறுவயதில் பாடல்களை பாடுவார். அவருடன் நானும் பாடுவது வழக்கம். நான் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது, அய்யன்பாறவிளை கிருஷ்ணன் என்ற வித்வானிடம், தபேலா பயின்றேன். நான் படித்த முதல் இசைகருவியும் தபேலா தான்.”
தனது பள்ளி படிப்பை முடித்த பின், இசையில் ஆர்வம் மிகுந்த அப்துல் ஹலீம், தனது வாழ்க்கையை இசைக்காகவே செலவிட முடிவு செய்தார். அதற்காகவே அண்ணாமலை பல்கலைகழகத்தில் பி.ஏ.மியுசிக் பட்ட படிப்பில் சேர்ந்து படிக்கத் துவங்கினார். இங்கு தான் அவருக்கு கடம் அறிமுகமானது. தனது பட்டப்படிப்பின் இரண்டாவது வருடத்தில், சென்னையைச் சேர்ந்த பிரபல கடம் வித்துவான், சுரேஷை தேடி கடம் பயிலச் சென்றார். தபேலா இசைத்த அப்துல் ஹலீமின் கை விரல்களை பானையை போன்று இருக்கும் கடத்தில் விளையாட பயிற்றுவித்தார் வித்வான் சுரேஷ்.
“கர்நாடக சங்கீதத்தில் பயன்படுத்தப்படுவது தான் இந்த கடம். முதன்முதலாக பழனி கிருஷ்ணய்யர் தான் இந்த இசை கருவியை கர்நாடக இசை கச்சேரிகளில் பயன்படுத்த துவங்கியதாகக் கூறுவார்கள். இந்த இசைக்கருவியை மிகவும் குறைவான எண்ணிக்கையிலான கலைஞர்களே பயன்படுத்துகின்றனர். இது கொஞ்சம் கடினமான இசைகருவியும் கூட. இதை படிப்பதை ஒரு சவாலாகவே நான் எடுத்து கொண்டேன். அந்த சவாலின் ஒரு பகுதியாக தான் கின்னஸ் சாதனையை செய்யவும் விரும்பினேன்.”
என கூறுகிறார் அப்துல் ஹலீம்.
கடத்தை பார்த்தால் பானையின் உருவத்திலேயே இருக்கும். ஆனால் அது எப்படி கணீர் என்ற சத்தத்துடன், காதிற்கு இனிய இசையை தருகிறது என்ற கேட்ட போது,
“ கடத்தை பொறுத்தவரை வெறும் மண்ணில் செய்யப்படும் பானை அல்ல. செம்மண்ணுடன், வைகை ஆற்றின் களிமண் மற்றும் கந்தக பொடி சேர்த்து மழை நீரில் தயாரிக்கப்படுவது தான், இந்த கடம். அதனால் தான் அதிலிருந்து கணீர் என இனிமையான சத்தம் கேட்கிறது” என்றார்.
பி.ஏ.மியுசிக்கில் முதல் வகுப்பில் வெற்றி பெற்ற அப்து ஹலீம், தனது மேற்படிப்பை எம்.ஏ மிருதங்கத்தில் தொடர்ந்து மிருதங்கத்திலும் கைதேர்ந்த கலைஞரானார்.
இவ்வாறு, தனது இசைப்பயணத்தில் அடிமேல் அடி வைத்து முன்னேறிய அப்துல் ஹலீமின் அடுத்த திருப்புமுனை WFD (World Fastest Drummers ) அமைப்பின் மூலம் வந்தது. அமெரிக்காவில் இருக்கும் இந்த அமைப்பு, ட்ரம்ஸ் உள்ளிட்ட இசைக்கருவிகளை வேகமாக வாசிக்கும் கலைஞர்களை தேர்வு செய்து சிறப்பித்து வருகிறது. டிரம்ஸில் ஒரு நிமிடத்திற்கு 1220 அடிகள், அதாவது நொடிக்கு 20 அடிகள் என்ற வேகத்தில் அமெரிக்காவின் மைக் மேன்கினி என்பவர் சாதித்துள்ளார்.
ஆனால் அப்துல் ஹலீமோ அதே வேக சாதனையை கடத்தில் செய்தார். ஒரு நிமிடத்தில் 1224 அடிகள் என கடத்தில் யாரும் நெருங்க முடியாத சாதனையை தன்னிடத்தில் வைத்துள்ளார்.
இப்படிப்பட்ட அடுக்கடுக்கான சாதனைகள், அப்துல் ஹலீமுக்கு ஆல் இந்தியா ரேடியோவில் ‘ ஏ ’ கிரேட் கலைஞர் என்ற அந்தஸ்தை தந்தது. பிரபல இசைகலைஞர்களான கத்ரி கோபால்நாத், டி.வி.ஜி.கோபாலகிருஷ்ணன், சங்கர நாராயணன், நெய்வேலி சந்தான கோபாலன், டாக்டர் ரமணி உள்ளிட்ட இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.
கூடவே, தமிழக அரசின் கலை வளர்மணி விருதும், சிறந்த இசை கலைஞர் விருது உள்ளிட்ட விருதுகளும் அப்துல் ஹலீமின் வீடு தேடி வந்தன.
கடம் மட்டுமல்லாது, இவர் தபேலா, டாம்பரின், மிருதங்கம், செண்டை, உடுக்கு, டிரம்ஸ், ஜம்பே என இன்னும் பல இசை கருவிகளில் கைதேர்ந்தவர். இவற்றில் டாம்பரின், அரேபிய வகை இசைக்கருவியும், ஜம்பே, ஆப்பிரிக்க வகை இசைக் கருவியுமாகும். இந்த இசைக்கருவிகளை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கற்று கொடுத்தும் வருகிறார்.
தனது அயராத உழைப்பால் சிறந்த இசைக் கலைஞனாக உருவெடுத்து வரும் அப்துல் ஹலீமின் வாழ்நாள் கனவு என்னவென கேட்டால் கிராம்மி பட்டம் பெறுவது என்கிறார்.
“கிராம்மி என்பது சினிமாவின் ஆஸ்கர் விருது போல், இசை கலைஞர்களுக்கு உலக அளவில் கொடுக்கப்படும் விருது. இந்திய இசை கலைஞர்களில் ஏ ஆர் ரஹ்மான் இருமுறை இந்த விருதினை வென்றுள்ளார். அதோடு பிரபல தபேலா இசைக் கலைஞர் சாகீர் ஹுசைன் மற்றும் கடம் வித்வான் விநாயக் ராம் போன்றோர்களும் பெற்றுள்ளனர். அதை பெறுவதே எனது வாழ்நாள் இலட்சியம். “ என புன்னகையுடன் கூறுகிறார் அப்துல் ஹலீம்.
சாதாரண ஏழை குடும்பத்திலிருந்து வந்த அப்துல் ஹலீம், தனது உழைப்பால் இசையில் இன்னும் பல சாதனைகள் செய்ய நாமும் வாழ்த்துவோமே!.
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்:
மார்த்தாண்டம் முதல் லண்டன் வரை: கின்னஸ் சாதனை ஓவியர் ராஜசேகரனின் கதை!
வாஜித் கான்- காப்புரிமை மற்றும் கின்னிஸ் சாதனை கொண்டுள்ள ஒரு திரைமறைக் கலைஞன்!