முட்டை மற்றும் வெல்லம் சேர்த்து சூழலுக்கு உகந்த வீடுக்கட்டி அசத்திய திருப்பூர் இன்ஜீனியர்!
பரவலாக இல்லையனெினும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் சூழலுக்கு உகந்த வகையில் மூங்கில், களிமண் கொண்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றிற்கெல்லாம் ஒரு படி மேல் சென்று முட்டை மற்றும் வெல்லத்தைக் கொண்டு அட்டகாசமான வீட்டைக் கட்டி பிரமிக்க வைத்துள்ளார் அரவிந்த் மனோகரன்.
எங்கும் நவீனமயமாக மாறி செயற்கை சூழலுக்குள் முடங்கிக்கிடந்த மக்கள் மெல்ல, இயற்கையை நோக்கி பயணப்படத் தொடங்கியுள்ளனர். இயற்கையான வழியில் சூழலுக்கு உகந்த முறையிலான உணவுகள், உடைகளை தேடிய நிலையில், இன்று உறைவிடத்தையும் சூழலுக்கு உகந்த வகையில் கட்டமைத்து வருகின்றனர். பரவலாக இல்லையனெினும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் சூழலுக்கு உகந்த வகையில் மூங்கில், களிமண் கொண்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றிற்கெல்லாம் ஒரு படி மேல் சென்று முட்டை மற்றும் வெல்லத்தைக் கொண்டு அட்டகாசமான வீட்டைக் கட்டி பிரமிக்க வைத்துள்ளார் அரவிந்த் மனோகரன்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதான சிவில் இன்ஜினியரான அரவிந்த், 'பிழை அழகு' என்ற பெயரில் நிலையான கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், பாரம்பரிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உள்ளூரில் கிடைக்கும் கட்டுமான பொருட்களைக் கொண்டு கட்டிடங்களை அமைத்துவருகிறது.
அவர்களின் முயற்சியில் வெல்லம் மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு கொண்டு கட்டப்பட்ட வீடு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோயிலில் வசிக்கும் ஜவஹர் என்பவருக்காக 3200 சதுர அடியில் கட்டப்படுள்ளது அந்த அழகிய வீடு.
"நம் முன்னோர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகளைக் கட்டி வாழ்ந்தனர். அவை நன்கு காற்றோட்டம் அளித்து, உறுதியானதாகவும், மற்றும் அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தன. அந்த கட்டிட அமபை்புகளால் ஆழமாக ஈர்க்கப்பட்டு, அதுபோன்றதொரு வீட்டை கட்டவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்,” என்கிறார் அரவிந்த்.
கூடுதலாக, கட்டுமானப் பணிகள் சுற்றுசூழலை மிகவும் மாசுபடுத்துகின்றன. எப்படியும் நாம் இயற்கை வளங்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டு இருக்கையில், புவியை ஏன் இன்னும் காயப்படுத்தவேண்டும்?" என்ற ஜவஹர், அதுபோன்றதொரு வீட்டைக் கட்ட அரவிந்த்தை நாடினார்.
வெல்லம் மற்றும் முட்டையால் கட்டப்பட்ட வீடு!
சூழலுக்கு உகந்ததொரு வீட்டை கட்டவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட ஜவஹருக்கு, கட்டுமானத்திற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும், அதை எவ்வாறு கட்டப்பட உள்ளனர் என்பது பற்றி விவரம் ஏதும் தெரியாது. அதற்காக, ஜவஹரும், அரவிந்தும் உள்ளூரில் உள்ள மூத்த கொத்தனார்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள வயதானவர்களை சந்தித்துள்ளனர்.
அங்குள்ள வீடுகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பாரம்பரிய நுட்பங்களைப் பற்றி கேட்டறிந்து அவர்களிடமிருந்து தகவல்களை சேகரிப்பதற்கான தேடுதல் பயணத்தில் இறங்கினர். அத்தேடலில் அவர்கள் சந்தித்தவர்களில் பலர், மண் மற்றும் வெல்லம் போன்ற பொருட்களை ஒரு பிணைப்பு முகவராகப் பயன்படுத்தி கட்டப்பட்ட பாரம்பரிய வீடுகளில் வசித்துள்ளனர். அதனை மூத்த கொத்தனார்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
"அந்த காலத்தில் மிகக் குறைவான கட்டுமான நிறுவனங்கள் இருந்ததால், இந்த வீடுகளை அவர்களே வெல்லம், மண் கொண்டு கட்டியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். வெல்லமும் முட்டையின் வெள்ளைக்கருவும் சிறந்த கட்டுமானப் பொருட்களாகச் செயல்படுவதாக அவர்கள் கூறினர். கட்டுமானப் பணியில் இந்தப் பொருட்களை எப்படி ஒருங்கிணைக்க வேண்டும் என்பது பற்றிய அறிவு எனக்கில்லை என்பதால்,
”நாங்கள் சந்தித்த கொத்தனார்களின் உதவியை நாடி அவர்களை பணிக்கு அமர்த்தினோம். வெல்லம் ஒரு சிறந்த பிணைப்பு முகவராக செயல்படுகிறது. அதே நேரத்தில் பிளாஸ்டரில் முட்டையின் வெள்ளைக்கருவைப் பயன்படுத்துவது சுவர்களுக்கு மெருகூட்டப்பட்ட தோற்றத்தை அளிக்கிறது.”
ஜவஹரின் கனவு இல்லம்!
வழக்கமான கட்டுமான பணிகளை போன்றே செங்கற்களைப் பயன்படுத்தி சுவர்கள் எழுப்பப்படுகின்றன. ஆனால், சிமெண்டிற்குப் பதிலாக சுண்ணாம்பு சாந்து, மணல், வெல்லம், நொறுக்கப்பட்ட கடுக்காய் மற்றும் தண்ணீர் ஆகியவற்றின் கலவையை பயன்படுத்துப்படுகின்றன.
செங்கற்களின் மேற்பரப்பு பூச்சானது ஐந்து அடுக்குகளில் செய்யப்படுகிறது. அவ்வாறு செய்வதன் மூலம் கட்டிடத்தின் உள்ளே அதிக ஆக்ஸிஜனைக் கொண்டு சுவாசிக்க உதவுகிறது.
ப்ளாஸ்டெரிங்கில் முதல் அடுக்கு சுண்ணாம்பு, மணல் மற்றும் நீர் கலவையைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கு தண்ணீர், சுண்ணாம்பு மற்றும் நொறுக்கப்பட்ட கடுக்காய் கலவையைப் பயன்படுத்தி பூசப்படுகிறது.
நான்காவது அடுக்கில் சுண்ணாம்பு, நீர் மற்றும் டால்கம் பவுடரும், ஐந்தாவது மற்றும் இறுதி அடுக்கு, முட்டையின் வெள்ளைக்கருவுடன் மீண்டும் சுண்ணாம்பு மற்றும் தண்ணீரின் கலவையினால் பூசப்படுகிறது. இப்பகுதியில் பாரம்பரிய வீடுகளை கட்டும் போது சுண்ணாம்பு பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் என்று கூறிய அரவிந்த் பேசுகையில்,
"சுண்ணாம்பு பயன்பாடு பல நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. முதலாவதாக, இது கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கும் மற்றும் குளிர்காலத்தில் வெப்பத்தை வெளியேற்ற அனுமதிக்காது,” என்றார்.
வீட்டின் மேற்கூரைகளுக்கு அருகிலுள்ள காரைக்குடி பழைய மரச்சந்தையில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட மரங்களை பெற்று பயன்படுத்தினோம். கரையான் தாக்குதலில் இருந்து மரத்தை பாதுகாப்பதற்காக மரத்திற்கும் செங்கற்களுக்கும் இடையில் வாழை இலைகள் மற்றும் தாமரை இலைகள் வைக்கப்பட்டுள்ளன, என்றார்.
சூழலுக்கு உகந்த கட்டிடமைப்பைத் தேடி; நாடுமுழுவதும் பயணம் செய்த அரவிந்த்!
வெல்லம் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு வீடு கட்டுவது அரவிந்திற்கு இதுவே முதல்முறை என்றாலும், நிலையான கட்டிடங்கள் கட்டுவதில் கணிசமான முன் அனுபவத்தை கொண்டுள்ளார். சிவில் இன்ஜினியரிங்கில் பிடெக் பட்டம் பெற்ற அரவிந்த், அவரது கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர் பில்டரிடம் ஒரு வருடம் பயிற்சி பெற்றார்.
அவரிடமிருந்து கணிசமான அனுபவ அறிவை பெற்றபின் பெங்களூருவில் உள்ள 'இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டிசைனில்' இன்டீரியர் டிசைனில்' முதுகலைப் பட்டம் பெற்றார்.
பட்டம் முடித்து சொந்த ஊருக்கு திரும்பிய நிலயைில் ஒரு நாள், கிராமத்தில் ஒரு சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கட்டப்பட்ட வீட்டைக் கண்டுள்ளார். லாரி பேக்கர் பாணி கட்டிடம் அது. அங்கிருந்து தான் நிலையான வீடுகளை கட்டுவதற்கான ஆர்வமும், அதற்கான தேடுதலும் தொடங்கியுள்ளது.
"வெளிப்புறம் நோக்கிய செங்கல், கூரை ஓடுகள் மற்றும் எலி பொறி பிணைப்பு சுவர் என பிரபல ஆர்கிடெக்ட் ஆன லாரி பேக்கரின் பாணியில் கட்டப்பட்ட அக்கட்டிடம் பார்த்து வியந்து போனேன். வீட்டிற்கு வெளியே வெப்பம் தாக்கியது. ஆனால், வீட்டிற்குள்ளோ நம்பமுடியாத அளவிற்கு குளிர்ச்சியாக இருந்தது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகள் எப்படி கட்டப்படுகின்றன என்பதை ஆராய அக்கட்டிடம் தூண்டியது," என்கிறார் அரவிந்த்.
காலப்போக்கில், அவருக்கு பாரம்பரிய கட்டுமானத்தில் நாட்டம் அதிகரிக்க, நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய கட்டுமான முறைகளை அறிந்து கொள்ள முடிவு செய்தார். மேற்கு வங்காளத்தின் ஜார்கிராமில் உள்ள மக்கள் உள்ளூர் கற்கள், மூங்கில் மற்றும் மண் ஆகியவற்றை கட்டுமானத்திற்கு எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதையும், கூரைக்கு, அவர்கள் டெரகோட்டா ஓடுகளைப் பயன்படுத்துவதையும் கவனித்தார்.
ஜார்கண்டில், பழங்குடியினர் களிமண்ணில் ஆன குடிசைகளில் வாழ்வதை கண்டார். நாடு முழுவதும் பயணித்து, பாரம்பரிய கட்டுமானங்களை தெரிந்த கொண்ட பின், அவருடைய ஊருக்கு திரும்பி 'பிழை அழகு' என்ற பெயரில் பாரம்பரிய கட்டுமானத்தை அமைத்தளிக்கும் நிறுவனத்தை நிறுவினார்.
"இதுவரை பல திட்டங்களில் பணிபுரிந்துள்ளோம். கோயம்புத்தூரில் உள்ள டமருகம் இசைப் பள்ளி மற்றும் கற்றல் மையத்தினை, கட்டிடக் கலைஞர் லாரி பேக்கரின் பாணியில் கட்டினோம். செங்கற்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக சில பிரிவுகளில் மூங்கில் சட்டங்களை பயன்படுத்தி, மங்களூர் ஓடுகளுடன் பைன் மரத்தை பயன்படுத்தி மேற்கூரையை அமைத்தோம். கிரீன்-ஆக்சைடைப் பயன்படுத்தி தரைகளை அமைத்தோம்," என்று பகிர்ந்தார்.
கட்டிடக் கலை குறித்த அனுபவ அறிவுக் கொண்ட கொத்தனார்கள் தயக்கமின்றி, அவர்களது அறிவை பகிர்ந்து கொள்வதற்காக அவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் எனும் அரவிந்த், எதிர்காலத்தில் குறிப்பிட்ட கட்டிடக்கலையைப் புரிந்துகொண்டு அவற்றை எவ்வாறு உருவாக்குவது என்பதை ஆவணப்படுத்தும் அதே செயல்முறையைத் தொடர விரும்புவதாக கூறி முடித்தார்.
படங்கள் உதவி : தி பெட்டர் இந்தியா
மின்சார செலவு இல்லை; கழிவில்லா வீடு - சாத்தியப்படுத்திய சாதனைப் பெண்மணி!