Electric Air Taxi: இந்தியாவில் விரைவில் வருகிறது எலெக்ட்ரிக் ஏர் டாக்ஸி; இனி 7 நிமிடத்தில் ஈசியா பயணிக்கலாம்!
2026ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் எலெக்ட்ரிக் ஏர் டாக்ஸி சேவையை செயல்படுத்த உள்ளதாக InterGlobe Enterprises என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.
2026ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 'எலெக்ட்ரிக் ஏர் டாக்ஸி' சேவையை செயல்படுத்த உள்ளதாக InterGlobe Enterprises என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனால் கற்பனை செய்ய இயலாத விஷயங்களைக் கூட சாத்தியமாக்கி வருகிறது. அந்த வரிசையில் இனி வானில் பறந்து கொண்டே பயணிக்கக்கூடிய வகையிலான எலெக்ட்ரிக் ஏர் டாக்ஸி சேவை இன்னும் 3 ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, இன்டர்குளோப் எண்டர்பிரைசஸின் ஒரு பகுதியாகும். அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ச்சர் ஏவியேஷன், எலக்ட்ரிக் டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் துறையில் முன்னணி நிறுவனமாகும். இந்த இரு நிறுவனங்களும், இந்தியாவில் முழு எலெக்ட்ரிக் ஏர் டாக்ஸி சேவைகளை தொடங்குவதற்கும் இயக்குவதற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திட்டுள்ளன.
இண்டர்குளோப் குழுமத்தின் எம்டி ராகுல் பாட்டியா மற்றும் ஆர்ச்சர் சிசிஓ நிகில் கோயல் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் 2026 ஆம் ஆண்டிற்குள் எலெக்ட்ரிக் ஏர் டாக்ஸி சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ், இன்டர்குளோப்-ஆர்ச்சர் ஏர்டாக்ஸி, ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனத்துடன் இணைந்து, டெல்லியின் கனாட் பிளேஸ் முதல் ஹரியானாவின் குருகிராமுக்கு முதலில் சேவை தொடங்கவுள்ளது.
இந்த இரண்டு பகுதிகளுக்கும் இடையே சாலை வழியாக பயணிக்க 60-90 நிமிடங்கள் ஆகும் நிலையில், ஏர் டாக்ஸி மூலம் 7 நிமிடங்களில் செல்ல முடியும். ஒவ்வொன்றிலும் நான்கு பேர் பயணம் செய்யலாம். இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் நகர்ப்புறங்களில் ஏர் டாக்ஸி சேவைகயுடன் சரக்கு, தளவாடங்கள், மருத்துவம் மற்றும் அவசர சேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் எலெக்ட்ரிக் ஏர் டாக்ஸி சேவையை தொடங்குவதற்காக இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் நிறுவனம் 200 ஆர்ச்சர் ஏர்டாக்சிகளை வாங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.