எலிசா முதல் சாட்ஜிபிடி வரை- 7 | எல்லா கேள்விக்கும் பதில் சொன்ன வாட்சன் பாட்!
கம்ப்யூட்டர் வரலாற்றில் மட்டும் அல்ல, ஏஐ வரலாற்றிலும் ஐபிஎம் நிறுவனத்தின் பங்களிப்பு அழுத்தந்திருத்தமாக பதிந்திருக்கிறது. ஐபிஎம் செஸ் சாம்பியனை வீழ்த்திய டீப் புளு சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியதோடு, ஏஇ துறையின் இரண்டாவது குளிர் காலம் முடிந்து, மீண்டும் ஆர்வமும், ஆய்வும் இத்துறையில் தழைக்க அடிப்படையாக அமைந்தது.
1997ல் அறிமுகமான டீப் புளு, கம்ப்யூட்டர்களின் புத்திசாலித்தனத்திற்கு சான்றாக விளங்கியதோடு, ஏஐ ஆற்றலை வெகு மக்கள் வியந்து பார்க்கவும் காரணமானது.
இதே போலவே சாட்பாட் வரலாற்றிலும் ஐபிஎம் நிறுவனத்திற்கு முக்கியப் பங்கு இருக்கிறது. சாட்பாட்கள் அவற்றின் பிள்ளை பருவத்தை கடந்து, உரையாடல் கலையில் மேலும் திறன் பெற்று வந்த நிலையில், 2011ல் ஐபிஎம், ’வாட்சன் சூப்பர் கம்ப்யூட்டரை’ அறிமுகம் செய்தது.
வாட்சன் வடிவத்தில் சூப்பர் கம்ப்யூட்டராக இருந்தாலும், உள்ளடக்கத்தில் அது கேள்வி பதில் இயந்திரமாக இருந்தது. அந்த வகையில் வாட்சன் கம்ப்யூட்டரை சாட்பாட் என்றே கருத வேண்டும்.
செஸ் சாம்பியன்
சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கு பல வகை வரையறை இருந்தாலும், ஜியோபார்டி (Jeopardy) எனச் சொல்லப்படும் வினாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்று மனிதர்களோடு போட்டியிட்டு தனது ஆற்றலை நிருபிக்கும் நோக்கத்துடன் ஐபிஎம் வாட்சனை உருவாக்கியது. டீப் புளு, செஸ் சாம்பியன் காஸ்பரேவை வென்று காட்டி வியக்க வைத்தது போல, வாட்சன், ஜியோபார்டியில் மனித சாம்பியனை வென்று காட்டி உலகை திரும்பி பார்க்க வைத்தது.
கம்ப்யூட்டர்; செஸ் விளையாடியதே ஒரு ஆச்சயம் என்றால், அதில் உலக சாம்பியனை தோற்கடிக்கும் திறன் பெற்றது இன்னும் பெரிய ஆச்சர்யம். எனினும், விதிகளுக்கு உட்பட்ட செஸ் விளையாட்டில் கம்ப்யூட்டர் வல்லமை பெற்றதை கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அறிவாற்றலுக்கு அடையாளமான வினாடி வினா நிகழ்ச்சியில் ஒரு கம்ப்யூட்டர் தேர்ச்சி பெற்றிருப்பதையும், மனித சாம்பியனை மண்ணைக்கவ்வ வைப்பதையும் எப்படி புரிந்து கொள்வது?
வாட்சன் உருவான கதை
இந்த வகையான ஆச்சர்யத்தை அளித்த ஐபிஎம், வாட்சன் உருவாக்கத்திற்குப் பின்னே சுவாரஸ்யமான கதை இருக்கிறது. டீப் புளு வெற்றிக்குப் பிறகு, ஐபிஎம் ஏஐ நுட்பத்தில் அடுத்த கட்ட சாவாலை நாடியது. இந்த காலகட்டத்தில் தான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஜியோபராடி தொலைக்காட்சி பிரபலமாக இருந்தது.
இதனிடையே, 2004ம் ஆண்டு ஐபிஎம் ஆய்வு மேலாளர் சார்லஸ் லிக்கல் (Charles Lickel) என்பவர் தனது நண்பர்களோடு ரெஸ்டாரண்ட் ஒன்றுக்கு இரவு விருந்து சாப்பிடச் சென்றிருந்தார். பரபரப்பாக இருந்த ரெஸ்டாரண்ட் திடிரென அமைதியானது.
அங்கிருந்த தொலைகாட்சி திரையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஜியோபார்டி நிகழ்ச்சியே இந்த திடீர் அமைதிக்கு காரணம் எனத் தெரிந்து கொண்டார். சாம்பியன் கென் ஜென்னிங்ஸ் தனது 74வது தொடர் வெற்றியில் இருந்ததால் ரசிகர்கள் தொலைக்காட்சி திரையையே ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருந்தனர்.
லிக்கலுக்கு, ஜியோபார்டி விளையாட்டிலோ, அதில் சாம்பியனாக இருந்த ஜென்னிங்ஸ் மீதோ ஆர்வம் வந்ததா எனத்தெரியவில்லை. ஆனால், அந்த நிகழ்ச்சி மீது மக்களுக்கு இருந்த அதீத ஆர்வம் அவருக்கு தெளிவாகப் புரிந்தது.
மக்கள் ஆதரவு
ஜியோபார்டி நிகழ்ச்சிக்கு இத்தனை மக்கள் ஆதரவு இருக்கிறது என்றால், இந்த விளையாட்டில் பங்கேற்கக் கூடிய கம்ப்யூட்டரை உருவாக்குவது ஐபிஎம் நிறுவனத்திற்கான அடுத்த இலக்காக இருக்கலாமே என லிக்கல் நினைத்தார். இந்த யோசனையை ஐபிஎம் நிர்வாகத்திடம் முன்வைத்த போது, ஆய்வுக்குழு தலைவர் பால் ஹார்ன் இதை உற்சாகமாக ஆதரித்தார்.
எனினும், இந்த ஆய்வை மேற்கொள்வதற்கான குழுவை கண்டறிவது அத்தனை எளிதாக இல்லை. இறுதியில் David Ferrucci இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். செஸ் விளையாட்டு அடிப்படை விதிகளைக் கொண்டது என்பதால், அதன் நகர்வுகளை எளிதாக கணக்குகளாக மாற்றி விடலாம். கணிதம் என்று வந்துவிட்டால் கம்ப்யூட்டர்கள் புகுந்து விளையாடிவிடும்.
ஆனால், வினாடிவினா போட்டி அப்படி அல்ல: அதில் வினாக்களுக்கு பதில் அளிக்க ஆழமான பொது அறிவும், சிக்கலான குறிப்புகளை அதிவேகமாக பரிசீலித்து புரிந்து கொண்டு செயல்படும் அறிவாற்றலும் தேவை.
வினாடி-வினா வகை கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் கம்ப்யூட்டர் மென்பொருளை உருவாக்குவதே ஒரு சவால் என்றால், அதில் மனிதர்களோடு போட்டியிட்டு வெல்லக்கூடிய திறனை பெற வைப்பது என்பது, மாபெரும் சவால் தான். ஆனால், ஐபிஎம் இந்த சவாலை எதிர்கொள்ளத் துணிந்தது.
கேள்வி பதில் முன்னோடி
ஏஐ ஆய்வில் நீண்ட பாரம்பரியம் கொண்டிருந்த ஐபிஎம் ஏற்கனவே கேள்விகளுக்கு பதில் அளிக்கும் திறன் கொண்ட ’பிக்வன்ட்’ (Practical Intelligent Question Answering Technology - (Piquant) எனும் மென்பொருளை உருவாக்கியிருந்தது. ’பிரேசில் நாட்டின் தலைநகர் எது?’ என்பது போன்ற நேரடியான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த மென்பொருள் அமைந்திருந்தது.
அமெரிக்க அரசு நடத்திய போட்டிகளில் பங்கேற்ற போது இதன் வெற்றி விகிதம் 35 சதவீதமாக மட்டுமே இருந்தது. எனவே, இதைவிட மேம்பட்ட முயற்சி தேவைப்பட்டது. இதுவே வாட்சன் திட்டத்தின் நோக்கமாக இருந்தது.
2006ம் ஆண்டு பெர்க்கி தலைமையிலான ஆய்வுக்குழு, வாட்சன் மென்பொருளை முதல் கட்டமாக சோதித்துப்பார்த்தது. அப்போது உருவாக்கப்பட்டிருந்த கேள்வி- பதில் வகை மென்பொருள்களோடு ஒப்பிடும் போது வாட்சன் 15 சதவீதம் சரியான பதில் சொல்வதாக அமைந்திருந்தாலும், வினாடி வினாவில் களமிறங்க போதுமானதாக இல்லை.
வாட்சனை மேலும் மேன்பட்ட கேள்வி பதில் மென்பொருளாக உருவாக்குவதற்காக, ஐபிஎம் 15 பேர் ஆய்வுக்குழுவை அமைத்து, மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் இலக்கு அளித்தது. இதனிடையே, ஜான் கெல்லி என்பவர் ஐபிஎம் ஆய்வுக்குழுவுக்கு பொறுப்பேற்றுக்கொண்டு இந்த ஆய்வை தீவிரமாக்கினார்.
டிஜிட்டல் ஆய்வு
வினாடி வினா போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்றால் ஒருவர் என்ன செய்ய வேண்டும்? பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்? இதற்காக புத்தகங்களை படிக்க வேண்டும், நூலகத்திற்கு செல்ல வேண்டும். நாளிதழ்களை வாசிக்க வேண்டும். ஐபிஎம் வாட்சனும் இப்படி தான் தயார் படுத்தப்பட்டது.
டிஜிட்டல் வடிவிலான புத்தகங்கள், இணைய ஆவணங்கள், அகராதிகள், விக்கி களஞ்சியம் வாயிலாக வாட்சனுக்கு அறிவூட்டப்பட்டது. அதாவது, அதன் நினைவகத்தில் தரவுகள் ஏற்றப்பட்டன. இந்த தரவுகளை வெகுவேகமாக செயலாக்குவதற்கான திறனும் அளிக்கப்பட்டது. ஆக, வாட்சனிடம் டிஜிட்டல் மூளை அளிக்கப்பட்டது.
கேள்விகளுக்கு பதில் அளிக்க ஏற்ற வகையில், கோடிக்கணக்கான தரவுகளுடன் வாட்சன் தயார் செய்யப்பட்டது. தரவுகளை கொண்டிருப்பது எல்லாம் சரி தான், ஆனால் கேட்கப்படும் கேள்விக்கு ஏற்ற பதில் எங்கே இருக்கிறது என்பதை வாட்சன் மென்பொருள் எப்படி தேடி கண்டறியும்?
வாட்சனுக்கான அல்கோரிதம் இதற்கான பதிலாக அமைந்தது. மனிதர்கள் போல கேள்விகளை புரிந்து கொள்வதற்காக, இயற்கை மொழி செயலாக்கத்திறன் மற்றும், அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ள ஆழ்கற்றல் ஆகிய நுட்பங்கள் கொண்டு இந்த அல்கோரிதம் உருவாக்கப்பட்டது.
வாட்சன் அல்கோரிதம் செயல்படும் விதம் செயற்கை நுண்ணறிவு அற்புதம் என்று தான் சொல்ல வேண்டும். வாக்கியங்களை வார்த்தைகளாக உடைத்து, வார்த்தைகளை பெயர்ச்சொல், வினைச்சொல், பொருள் என பிரித்துக்கொண்டு, வாக்கிய அமைப்பின் உள்ளார்ந்த பொருளை யூகித்து செயல்படுவது உள்ளிட்ட திறன்கள் இதில் அடக்கம்.
மேலும், பதில்களை தேடும் போது, கிடைக்கும் பதில்களை பகுத்தறிந்து அவற்றுக்கு நம்பிக்கை புள்ளிகள் அளித்து, அதிக நம்பிக்கைக் கொண்ட பதிலை சரியான பதிலாக வாட்சன் முன்வைத்தது. இந்த ஆற்றலே வாட்சனை வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற வைத்தது.
2011ல் வாட்சன் ஜியோபாரடி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது ஏஐ நுட்பத்தின் அடுத்த மைல்கல்லாக அமைந்தது. இந்த வெற்றி ஐபிஎம் நிறுவனத்திற்கு பெரும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் அளித்தது. வாட்சன் கேள்வி பதில் இயந்திரத்தின் ஆற்றலை மையமாகக் கொண்டு பலதுறைகளுக்கான சேவைகளை வழங்க முடியும் என ஐபிஎம் நம்பியது.
அதனடிப்படையில், வாட்சனை மூலமாக கொண்டு, உரையாடல் வாயிலான சேவைகளை வழங்க தீர்மானித்தது. இதை வர்த்தக நோக்கில் சற்று பெருமிதமாகவும் அறிமுகம் செய்தது.
வாட்சன் கேள்விகள்
ஆனால், ஐபிஎம் எதிர்பார்த்த அளவுக்கு வர்த்தக நோக்கில் வாட்சனுக்கு வெற்றி கிடைக்கவில்லை. கேள்வி பதில் இயந்திரமாக வாட்சன் சிறந்து விளங்கினாலும், வினாடி வினா பரப்பை கடந்து எல்லாத் துறைகளிலும் செயல்படக்கூடிய சேவையாக அதை விரிவுபடுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் தோன்றின. உதாரணமாக, வாட்சன் சேவை முதல் கட்டமாக மருத்துவத் துறையில் (புற்றுநோய் மருத்துவம்) அறிமுகம் செய்யப்பட்டது.
மருத்துவ வழக்குகளை கையாள்வதில் வாட்சன் மென்பொருள் பயன்படுத்தப்பட்ட போது, வெற்றி விகிதம் முழுமையாக இல்லை. தவறு விகிதம் குறைவு என்றாலும் உயிர் காக்கும் துறையில் அனுமதிக்க முடியாததாக இருந்தது. விளைவு, மருத்துவர்கள் நோய்க்கூறு பகுப்பாய்வுக்கு வாட்சனை நாடுவதற்கு பதில், எண்ணற்ற மருத்துவ தரவுகளை கையாள வாட்சனை பயன்படுத்தினர். லட்சக்கணக்கான தரவுகளை சாறு பிழிந்து வாட்சன் அளித்த புரிதல் மருத்துவர்களுக்கு உதவியாக இருந்தது.
ஐபிஎம் நிறுவனமும் வாட்சனின் வரம்புகளை புரிந்து கொண்டு, வர்த்தக நிறுவனங்களுக்கான சேவையாக இதை முன்வைத்தது. துறை சார்ந்த குறிப்பிட்ட தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்ட போது வாட்சன் வெளுத்து வாங்கியது. தற்போது வங்கித்துறையில் வாட்சன் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது, இன்னும் பல துறைகளில் பெருமளவு பயன்படுகிறது.
இது தான் வாட்சன் சாட்பாட்டின் கதை. வாட்சனை பலவிதங்களில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் சாட்ஜிபிடியுடன் ஒப்பிடலாம். இரண்டுமே சாட்பாட் வகை மென்பொருள் தான். இரண்டுமே, ஆழ்கற்றல், இயற்கை மொழி செயலாக்கம் உள்ளிட்ட நுட்பங்களை கையாள்கின்றன. கோடிக்கணக்கான தரவுகளை கக்கத்தில் வைத்துக்கொண்டு, கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் திறன் கொண்டுள்ளன. எனினும், வாட்சன் பெறாத வரவேற்பையும், கவனத்தையும் சாட்ஜிபிடி பெற்றிருப்பது எப்படி? இந்த கேள்விக்கான பதிலில் அடங்கியிருக்கிறது சாட்ஜிபிடியின் பாய்ச்சல்.
சாட்பாட்கள் பயணம் தொடரும்...
Edited by Induja Raghunathan