எலிசா முதல் சாட்ஜிபிடி வரை- 6 | Clippy கதை கேளுங்க!
கிளிப்பி (Clippy) தனக்குள் மெல்ல புன்னகைப்பதை அல்லது ’சாட்ஜிபிடிக்கு முன்பாகவே நான் இருந்தேன்’ என்று சொல்வதையோ, உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
ஆம் எனில் நீங்கள் கிளிப்பியிடம் மென்மையாக மன்னிப்பும் கேட்டுவிடலாம்.
Clippy-யை அறியாதவர்களுக்கு, இந்த அறிமுகம் குழப்பத்தை ஏற்படுத்தலாம். அதோடு, கிளிப்பியிடம் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனும் கேள்வியும் எழலாம்.
இரண்டு காரணங்களுக்கு கிளிப்பி நம்மிடம் இருந்து மன்னிப்புக் கோருவதாக வைத்துக் கொள்ளலாம். முதல் காரணம், கம்ப்யூட்டர் பயனாளிகள் பெரும்பாலும் கிளிப்பி-யை மோசமாக நடத்தியிருக்கின்றனர். கிளிப்பையை குறைத்து மதிப்பிட்டது அல்லது சரியாக புரிந்து கொள்ளாதது இரண்டாவது காரணம். இதுவே, கிளிப்பியை பலரும் எள்ளி நகையாட காரணமாகவும் அமைந்தது.
முன்னோடி சேவை
ஆனால், பயனாளிகள் காட்டிய அலட்சியத்தை மீறி Clippy இப்போது எங்களுக்கான காலம் வந்துவிட்டது எனச் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறது. கிளிப்பியும் ஒரு வகை சாட்பாட் தான் என்பதையும், இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் சாட்ஜிபிடிக்கு கிளிப்பி ஒரு வகையில் முன்னோடி என்பதையும் தெரிந்து கொண்டால், கிளிப்பியின் இந்த உணர்வை புரிந்து கொள்ளலாம்.
அதற்கேற்பவே, சாட்ஜிபிடி தொடர்பான கட்டுரைகளில் ஒன்று, கிளிப்பியை நினைவுப்படுத்தி, அதன் மிகை கொண்டாட்ட வடிவம் தான் சாட்ஜிபிடியா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. அது மட்டும் அல்ல, சாட்ஜிபிடியின் தாய் நிறுவனம் ஓபன் ஏஐ – ல் முதலீடு செய்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனமும் தனது ஏஐ உத்தியை புதுப்பித்து, அதன் அலுவலக மென்பொருள்களில் சாட்ஜிபிடி சார்ந்த வசதியை அறிமுகம் செய்துள்ள நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்னரே இதே போன்ற செயல்திறனோடு தான் கிளிப்பி அறிமுகமானது என்பதையும் நினைத்து பார்க்க வேண்டியிருக்கிறது.
Clippy கதை
இப்போது கிளிப்பி கதையை கொஞ்சம் திரும்பி பார்க்கலாம்.
’கிளிப்பிட்’ எனும் பெயரில் மைக்ரோசாப்ட் 1997ம் ஆண்டு காகித கிளிப் வடிவிலான அரட்டை மென்பொருளை அறிமுகம் செய்தது. இரண்டு கண்கள் கொண்ட காகித கிளிப் அனிமேஷன் தோற்றத்தில் அமைந்திருந்த இந்த சேவையை பின்னர் ’கிளிப்பி’ என அழைக்கப்படலாயிற்று.
1995ல் விண்டோஸ் அறிமுகமாகி, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த சூழலில், மைக்ரோசாப்ட் பெரும் திட்டத்துடன் கிளிப்பி சேவையை அறிமுகம் செய்தது.
மைக்ரோசாப்ட் அலுவலக மென்பொருள் தொகுப்பின் அங்கமான வோர்டு செயலியில் மறைந்திருந்து செயல்படக்கூடிய மென்பொருளாக கிளிப்பி உருவாக்கப்பட்டது. பயனாளிகள் கோப்புகளை உருவாக்கும் போது, அவர்கள் தேவை அல்லது எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு, தானாகத் தோன்றி அவர்களுக்கு உதவுது கிளிப்பியின் நோக்கமாக இருந்தது.
உதாரணத்திற்கு, பயனாளிகள் ‘மதிப்பிற்குறிய அல்லது அன்புக்குறிய எனும் வார்த்தையை டைப் செய்தால், கிளிப்பி காகித கிளிப் கோப்பின் மீது எட்டிப்பார்த்து, ‘நீங்கள் கடிதம் எழுத இருக்கிறீர்கள் போலும், ஏதேனும் உதவி தேவையா?’ எனக் கேட்கும் வகையில் கிளிப்பி அமைந்திருந்தது.
குரல் வழி உதவியாளர் சேவைகளுக்கு எல்லாம் கம்ப்யூட்டர் உலகம் பழகியிராத 1990’களில், இப்படி தானாக எட்டிப்பார்க்கும் மென்பொருள் நிச்சயம் பயனாளிகளை வியப்பில் ஆழ்த்தியிருக்கும்.
உதவிக்கு வரும் சேவை
கிளிப்பியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஆம் எனும் பதிலை கிளிக் செய்தால், தொடர்ந்து கிளிப்பியுடன் உரையாடி அடுத்த கட்டங்களில் தேவையான உதவியை பெறலாம். இப்படி, பயனாளிகள் செயல்பாட்டை கவனித்து பொருத்தமான இடங்களில் தலையிட்டு உதவி செய்து, அவர்கள் பணியை எளிதாக்கும் நோக்கத்துடன் கிளிப்பை வடிவமைக்கப்பட்டிருந்தது.
பயனாளிகளுக்கு ஏதேனும் சந்தேகம் என்றால் கிளிப்பியே குறிப்பறிந்து திரையில் தோன்றி வழிகாட்டலாம். கிளிப்பியுடன் உரையாடுவதும் எளிதாகவே இருந்தது. அதன் உரையாடல் பெட்டி வழியே பயனாளிகள் தங்கள் கோரிக்கையை சமர்பிக்கலாம். இந்த உரையாடல் தன்மையே கிளிப்பியை சாட்பாட் ரக மென்பொருளாக கருத வைக்கிறது.
உண்மையில் கிளிப்பி சேவை பயனாளிகள் மத்தியில் பெரும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது மைக்ரோசாப்ட் நிறுவனம் அப்படித் தான் நம்பியிருக்க வேண்டும். ஆனால், அந்த நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் கிளிப்பி, பயனாளிகளை அதிருப்தியில் ஆழ்த்தி அதை வெறுக்கச்செய்தது.
பலரும் கிளிப்பியை தேவையில்லாத இடையூறாக கருதினர். அதோடு, தொழில்நுட்ப ஆர்வலர்களும் கிளிப்பியின் போதாமையை வைத்து அதை விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளாக்கினர்.
பயனர் அதிருப்தி
Clippy அதன் முந்திரிகொட்டை தனத்தை மீறி, மைக்ரோசாப்ட் அலுவலக மென்பொருளில் இருந்த தீர்வுகளையே அதிகபட்சமாக வழங்கியது அதன் பெருங்குறையாகக் கருதப்பட்டது. மேலும், உதவி தேவையில்லை என்று மறுத்த பிறகும், மீண்டும் மீண்டும் கிளிப்பி தோன்றியதும் பலரை எரிச்சல் அடைய வைத்தது.
உதவி தேவைப்படும் இடங்களில் எட்டிப்பார்க்கும் தன்மை கொண்டிருந்ததே தவிர, பயனாளிகள் கேள்விக்கு பதில் அளித்து அசத்தும் புத்திசாலித்தனம் கிளிப்பியிடம் இல்லை. அந்த காலகட்ட சாட்பாட் தொழில்நுட்பம் அந்த அளவில் தான் இருந்தது.
பயனாளிகள் அதிருப்தி காரணமாக அடுத்து வந்த சில ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் கிளிப்பியை பின்னுக்குத்தள்ளி ஒரு கட்டத்தில் விலக்கிக் கொண்டது. இத்தனைக்கும் மைக்ரோசாப்ட் கிளிப்பி சேவை மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தது. அலுவலக உதவியாளராக செயல்பட்டு பயனாளிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் கிளிப்பி செயல்படும் என்றும் நம்பியது.
கிளிப்பிக்கு முன்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம், பாப் எனும் பெயரில் தனது இயங்குதளத்திற்கான புதுமையான இடைமுகத்தை அறிமுகம் செய்திருந்தது. டெஸ்க்டாப்பை ஒரு வீடாகக் கருதி, அதில் இருந்த பல வசதிகளை வீட்டின் அறைகளாக உருவகப்படுத்தும் வகையில் பாப் அமைந்திருந்தது.
கோப்புகளை ஐகான்கள் வடிவில் தேடுவதை விட, இந்த வகை இடைமுகம் எளிதாக இருக்கும் என மைக்ரோசாப்ட் கருதியது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்த வசதியை அறிமுகம் செய்த போது, இணையத்தை ஆளப்போகும் அடுத்த கட்ட சமூக இடைமுகம் என இதை பெரிதாக வர்ணித்தார். ஆனால், இந்த இடைமுக வசதி பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
கம்ப்யூட்டர் ஆய்வு
இந்த இடைமுகத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே, கிளிப்பி காகித கிளிப் சேவையும் அறிமுகமானது. அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பேராசிரியர்கள் கிளிபார்டு நாஸ் மற்றும் பைரன் ரீவ்ஸ் (lifford Nass and Byron Reeves) மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் பாப் மற்றும் கிளிப்பி-யை உருவாக்கியது.
கம்ப்யூட்டருக்கும், மனிதர்களுக்குமான உறவை ஆய்வு செய்த இந்த பேராசிரியர்கள், மனிதர்கள் கம்ப்யூட்டரை ஒரு சக ஜீவன் போலவே கருதி தொடர்பு கொள்ள நினைக்கின்றனரே தவிர ஒரு சாதனமாக அல்ல என தங்கள் ஆய்வு முடிவாகத் தெரிவித்திருந்தனர்.
இந்த ஆய்வை அடிப்படையாகக் கொண்டே, கம்ப்யூட்டருக்குள் எட்டிப்பார்க்கக் கூடிய மனித தோற்றம் கொண்ட மென்பொருளாக கிளிப்பி அறிமுகம் செய்யப்பட்டது. கம்ப்யூட்டருடன் மனிதர்கள் சமூக நோக்கிலேயே தொடர்பு கொள்ள விரும்புவார்கள் என்பதால், கிளிப்பியையும் பயனாளிகள் விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்காலம்
கிளிப்பி தொடர்பான பெரும்பாலான எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை மற்றும், மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்த மகத்தான தோல்வி மென்பொருள்கள் வரிசையில் ஒன்றாக மாறி மறக்கப்பட்டுவிட்டது என்பதை எல்லாம் மீறி, இப்போது சாட்ஜிபிடியின் வெற்றி, அட அந்த காலத்தில் கிளிப்பி இதைத் தானே செய்ய முயன்றது என பேச வைத்திருக்கிறது.
கிளிப்பி தோல்விக்கான காரணங்கள் மேலும் ஆய்வுக்குறியது என்றாலும், சாட்பாட்கள் வரலாற்றில் அது முக்கிய மைல்கல்லாக இருப்பதை மறுப்பதற்கில்லை. அதோடு, தொடர்ந்து வந்த ஆப்பில் சிரி, மைக்ரோசாப்ட் கார்ட்டனா போன்ற குரல் வழி உதவியாளர் சேவைகளுக்கான படிக்கல்லாகவும் அமைந்தது.
சாட்பாட்கள் முன்னேற்றத்தை தொடர்ந்து பார்க்கலாம்...
Edited by Induja Raghunathan