ஈரோட்டில் ஆச்சரியம்; 70க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளுடன் 100வது பிறந்தநாள் கொண்டாடிய தம்பதி!
70-க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளுடன் 100-வது பிறந்த தினத்தை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்த தம்பதி பற்றிய செய்தியும், வீடியோவும் இணையத்தில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
70-க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளுடன் 100-வது பிறந்த தினத்தை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்த தம்பதி பற்றிய செய்தியும், வீடியோவும் இணையத்தில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள். ஆன்லைன் யுகத்தில் நடக்கும் திருமணங்கள் பாதிக்கு மேல் விவாகரத்தில் நிறைவடைகின்றன. இதற்கு மணப்பொருத்தம் இருந்தாலும், மன பொருத்தம் இல்லாதது காரணமாகும். ஆனால், இதில் சிலரும் 25வது, 50வது, 75வது என திருமணநாளை விமர்சையாகக் கொண்டாடுவது போல், 60வது பிறந்தநாளை ஒன்றாக கொண்டாடும் பாக்கியம் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது.
60 வயதுக்கே அப்படியென்றால் 100 வயது என்றால் சின்ன விஷயமா என்ன? ஈரோட்டில் தனது 100 வயது பிறந்தநாளை 70க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
4வது தலைமுறையுடன் 100வது பிறந்தநாள்:
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச்சேர்ந்த குமரகுரு, 100 வயதான இவர் கனி மார்க்கெட்டில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 96 வயதான லட்சுமியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
தற்போது அவர்களது வாரிசுகளுக்குத் திருமணமாகி பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன் என 4வது தலைமுறை வந்துவிட்டது. 1924ல் பிறந்த குமரகுரு 100 வயதை எட்டியதையடுத்து, அவரது குடும்பத்தினர் நேற்று அவருக்கு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர்.
70க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளுடன் இவர்களது பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது. தம்பதி கேக் வெட்டும் போது, அனைவரும் பிறந்தநாள் பாட்டு பாடி வாழ்த்தினர்.
குமரகுரு-லட்சுமியம்மாள் தம்பதியின் மகன்கள், மகள்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் வழியிலான பேரன்கள், கொள்ளுப் பேரன்கள், எள்ளுப் பேரன்கள் என மகன்கள் வழியில் 45 பேரும், மகள்கள் வழியில் 45 பேரும் என மொத்தம் 90 பேர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து இந்த பிறந்த நாள் விழாவை நடத்தினர்.
எந்தவொரு உடல்நலக் குறைவும் இல்லாமல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் தங்களுடைய தாத்தா இருப்பதற்கு அவருடைய எளிமையான வாழ்க்கை முறையும் கடின உழைப்பும் தான் காரணம் என்று அவரது வாரிசுகள் பெருமையுடன் தெரிவித்தனர்.
இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு மதியம் கறி விருந்தும், பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. மேலும் மகன், மகள்கள் முதல் கொள்ளுப்பேரன்கள் வரை அனைவரும் வயதான தம்பதியின் கால்களில் விழுந்து ஆசி பெற்றனர்.