நவீன விக்கிரமாதித்தன் கதைகள் பகுதி- 5
ஆரவாரமில்லாத, அழுத்தமான, போர்குணமிக்க ஒரு தொழில்முனைவோர் என்றால் அது ஜெப் பெசாஸ் தான். இன்று உலகின் 5வது பெரும் பணக்காரரான அவரின் கதை பலரும் அறியாதது!
அமேசான் நிறுவனரின் கதை ஒரு தொழில்முனைவரின் வழக்கமான கதையாக தான் ஆரம்பிக்கிறது. ஜெப் பெசாஸ் சிறுவயதில் நிறைய புத்தகங்கள் படிக்கிறார். இளமை பருவத்தில் நிறைய தொழில் முயற்சிகளை மேற்கொள்கிறார். அவருக்கு தொடர்பில்லாத பல வேலைகளை செய்கிறார். ரெம்பவும் சின்சியராக செய்கிறார். நல்ல வேலை நல்ல சம்பளம் கிடைக்கும்போதே அதை தூக்கி எறிந்துவிட்டு தொழில் தொடங்க செல்கிறார். பெற்றோர்கள், உறவுகள், நண்பர்கள் வேண்டாம் என்று அறிவுரை சொல்கிறார்கள். யார் சொல்வதையும் கேட்பதாக இல்லை.
இது என்ன வகையான மனநிலை? தொழில்முனையும் இளைஞர்கள் அனைவருக்கும் ஏன் இந்த இயல்புக்கு மாறான மனநிலை இருக்கிறது? சராசரி மனிதர்களில் இருந்து வேறுபடவும் அதை உறுதியாக நம்பவும் இந்த இளைஞர்களுக்கு எங்கிருந்து இந்த ஊக்கம் கிடைக்கிறது? என்று நீங்கள் யோசிக்கலாம். உண்மையில் இவர்கள் தான் இயல்பானவர்கள். இயற்கையின் விதியோடு ஒத்துப்போகிறவர்கள். இயற்கையின் விதியே புற உலகின் மாயங்களை நம்பாது உள்ளுணர்வோடும் பகுத்தறியும் திறனோடும் புதிய ஒன்றை தேடுவதே. ஆதிமனிதர்களிடம் இந்த தேடல் இருந்ததாலேயே நாகரிகங்கள் பிறந்தன. அடுத்து வந்த மனிதர்கள் தன்னுள் இருந்த இயல்பான புதியன தேடும் அகஉணர்வை இழந்து, மத, இன, சாதி, மொழி புற மயக்கங்களில் சிக்கி கலாச்சாரம், பாரம்பரியம், சித்தாந்தம் என்று பழையனவற்றை உடைக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
எலன் மஸ்க், ஜெப் பெசாஸ் போன்றவர்கள் அந்த மாயவலையை உடைக்கத் தயங்குவதில்லை, தன்னை உடைத்து உடைத்து முளைவிட்டு வருவது தான் வளர்ச்சி. உயரமான தென்னை மரத்தில் இருக்கும் வரிகள் தன்னை உடைத்து முளைத்த வளர்ச்சியை தான் காட்டுகிறது. கதைக்கு வருவோம்.
1994 இல் இன்டர்நெட் 2300% சதவீதம் அசுரவளர்ச்சி எடுக்கிறது. இனி எல்லா வர்த்தமும் இணையத்தில் சாத்தியம் என்று ஜெப் கணிக்கிறார். இருந்தபோதும் அப்போது இணையத்தில் வர்த்தகம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அதை நீக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது. அதன் எதிரொலியாக 20 வகை பொருட்களுக்கு மட்டும் இணையத்தில் விற்க விலக்கு கிடைக்கிறது. ஜெப் அதில் புத்தகத்தை தேர்ந்தெடுக்கிறார்.
உடனே வேலையை விடுகிறார், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி வர்த்தக நகரான சியாட்டில்க்கு குடிபெயர்கிறார். Cadabra என்ற நிறுவனத்தை தொடங்குகிறார். போனில் ஆர்டர் எடுக்கும்போது எல்லோரும் Cadaver என்று தவறாக உச்சரிக்கவே, எளிதில் உச்சரிக்ககூடிய எளியபெயராக Amazon என்ற பெயரை வைக்கிறார். ஒரு சின்ன கார்நிறுத்தும் Garageஇல் அவரது மனைவி, இரண்டு ப்ரோக்ராமர்ஸ் மற்றும் 10000 டாலர் பணத்துடன் Amazon உருவாகிறது. இப்போது பெற்றோர்களுக்கு இவர்கள் மீது நம்பிக்கை பிறக்கவே 100,000 டாலர்கள் முதலீடு செய்கிறார்கள். ஜூலை 16,1995இல் Amazon இணையதளம் வெற்றிகரமாக திறக்கப்படுகிறது.
சிறிய முதலீடு என்பதால் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறார்கள். புத்தகங்களை ஸ்டாக் வைத்துக்கொண்டு விற்பதில்லை. ஆர்டர் கிடைத்த பின்பே வாங்கப்பட்டது. இதனால் டெலிவரி கொஞ்சம் தாமதமானாலும் மக்கள் விரும்பவே செய்தார்கள். ஆயிரக்கணக்கான ஆர்டர்கள் குவிந்தபோதும் ஊழியர்கள் பேக்கிங் கைகளால் தான் செய்தார்கள். இயந்திரங்கள் மூலம் பார்சல் பேக் பண்ண பெரிய முதலீடு தேவைப்பட்டது. மீண்டும் முதலீட்டை தேடுகிறார். Angel Investors மற்றும் (மீண்டும்) பெற்றோர்களும் உதவிசெய்ய 1 மில்லியன் டாலர் முதலீடு கிடைக்கிறது. வளர்கிறார். புதிய எதிரிகள் பிறக்கிறார்கள். Barnes & Nobles CEO ஒரு டின்னருக்கு அழைக்கிறார். அமேசானை விற்றுவிட்டு ஓடிவிடு என்று கிட்டத்தட்ட மிரட்டல் விடுக்கிறார்.
ஜெப்புக்கு குழப்பம். விற்றுவிடலாமா.. அல்லது மோதிப்பார்க்கலாமா.. என்று Harward Businiss School பேராசிரியர்களிடம் யோசனை கேட்கிறார்கள். என்ன சொல்லியிருப்பார்கள்? விற்றுவிடு என்று தான் சொன்னார்கள். ஜெப்புக்கு இப்போதான் இன்னும் அதிகமாக நம்பிக்கை சுரக்கிறது. Barnes&Nobles, அமேசான் மீது வழக்கு தொடுக்கிறது. அதுவே Amazon-ஐ பற்றி பரவலாக எல்லா பத்திரிக்கைகளிலும் செய்திவர, மக்களுக்கு சென்று சேர காரணமாகிறது. அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி Amazon நேரடியாக மக்களிடம் முதலீட்டை கோரி பங்குசந்தையில் களம் இறங்குகிறது. வாழ்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா, தடைகல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா என்ற சினிமா பாடல்வரி ஜெப்புக்கு ரெம்பவே பொருந்தும். மக்களின் முதலீட்டால் அமேசான் பெருவெற்றி பெற்றுவிட்டது
1998இல் இரு பட்டதாரி மாணவர்கள் ஒரு அருமையான இணையதளத்தை அமைத்துவிட்டு முதலீடு தேடி ஜெப்பிடம் வருகிறார்கள். இவரின் அனுபவமும் உள்ளுணர்வும் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல, முதலீடு செய்கிறார். அங்கே ஒரு பிரமாண்டமான வெற்றிக்கதை பிறக்கிறது. அவர்கள் இணைய உலகத்தையே ஆள்வார்கள் என்று ஜெப் நினைத்திருப்பாரா என்று தெரியவில்லை. அவர்கள் தான் Google-ஐ படைத்த செர்ஜிப்ரின், லாரிபேஜ்.
ஜெப் பெசாஸ் அதன்பிறகு வெற்றியும் தோல்வியும் மாறி மாறி பார்க்கிறார். தோல்வி என்பது அங்கே இன்னொரு வெற்றியே. தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மிகப்பெரும் வெற்றியைக் கொடுக்கிறார். இன்று உலகின் முதல் பத்து பணக்காரர்களில் அவருக்கும் ஒரு இடம் உண்டு.
கதை தொடரும்...
(பொறுப்பு துறப்பு: இது விருந்தினர் கட்டுரைப் பகுதி. கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். யுவர்ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)