பார்வையற்றோர்க்கு கால்பந்து முதல் கணினி வரை அளிக்கும் SRVC
மாற்றுத் திறனாளிகளுக்குப் பயிற்றுவித்து அவர்களது திறமையை வெளிக்கொணரும் கொச்சின் தொண்டு நிறுவனம்
நீங்கள் கொச்சின் தகவல் தொழில்நுட்பப் பூங்காவினுள் சென்றால் சிநேகமான பார்வை உங்களை ஈர்ப்பதை உணர்வீர்கள். டாட்டா, காக்கினிஷான்ட், விப்ரோ ஆகியவற்றிற்கிடையே அமைந்துள்ள கட்டடமான விஸ்மாயா தரைத் தளத்தில் இயங்குகிறது கொச்சின் ரோட்டரி கிளப்பின் குளோபல் – சொசைட்டி பார்வையற்றோருக்கான மறுவாழ்வு மையம். சுருக்கமாக இது ஆங்கிலத்தில் SRVC எனப்படுகிறது. பெரிய நிறுவனங்களாகப் பெயர் பெற்றவைகளுக்குரிய இடவசதியையோ, பொருள் ஊக்கத்தையோ SRVC பெறாமல் போயிருக்கலாம். ஆனால் அதனை உருவாக்கியவர்கள் அதற்குரிய தனித்தன்மையான சூழலை உருவாக்கி இருக்கிறார்கள். பார்வையற்றோர் வேலை வாய்ப்பு அடைவதற்கு உதவிகரமாக SRVC நடத்தும் திறன் மேம்பாட்டுக் கல்வி வகுப்பில் பார்வை இழந்த 15 வயது முதல் 45 வயது வரை, வயது வேறுபாடு இல்லாமல் அமர்ந்துள்ளனர்.
பிறவியிலேயே பார்வையற்றோர் மற்றும் இடையில் விபத்து அல்லது நோய் காரணமாக பார்வை இழந்தோர் என அனைத்துப் பிரிவினருக்கும் SRVC, திறன் மேம்பாட்டு வகுப்புகளை நடத்திக் கொண்டுள்ளது. இம்மாணவர்கள் அவர்களுக்கெனவே உருவாக்கப்பட்ட விடுதிகளிலோ அல்லது பணம் செலுத்தும் விருந்தினராகத் தங்கியுள்ள இடங்களிலோ இருந்து வந்து வகுப்பில் பங்கேற்கின்றனர். SRVC நடத்தும் இவ்வகுப்புகளில் தகவல் பதிவு, தொலைபேசிச் சந்தை, இசை, மருத்துவக் குறிப்புகள் எழுதுதல் (தேநீர், வைன்) சுவையறிந்து கூறுதல், மணம் நுகர்தல், மனநல ஆலோசனைகள் வழங்குதல், உடல் நலப் பயிற்சி உட்பட பல்வேறு விதமான பயிற்சிகளைப் பெறுகின்றனர்.
இரண்டாயிரமாம் ஆண்டு துவக்கப்பட்ட SRVC சுனில் ஜே மேத்யூ, எம்.சி ராய் போன்றோரின் முயற்சியால் தன்னை அரசு சாரா தொண்டு நிறுவனமாக 2002 இல் பதிந்து கொண்டது. ”இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் உள்ள (உலக நாடுகளிலேயே இந்தியாவில் தான் மிக உயர்ந்த எண்ணிக்கையில் 37 மில்லியன் அளவில் இருப்பதாகக் கூறுகிறது உலக சுகாதார அமைப்பு) பார்வையற்றோருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகிறேன். தகவல் தொழில்நுட்பப் புரட்சியால் என் வாழ்க்கையில் ஏற்பட்ட வளமையான மாற்றத்தைத் தொடர்ந்து பார்வையற்றோருக்கான பயிற்சி மற்றும் மறுவாழ்வு மையம் எண்ணம் எனக்குள் உதித்தது. திரைவாசிப்பு உதவியுடன் எழுத்துப் பிரதியை ஒலிப் பிரதியாக மாற்றும் மென்பொருள் சாத்தியங்களும், கால் சென்டர் சேவைகளும் அலுவலகங்களுக்கு அப்பால் செய்யக் கூடிய வேலை வாய்ப்பை அதிகரித்துள்ளது” என்று இதன் துவக்கம் குறித்து விளக்குகிறார் சுனில்.
வடிவமைப்பு மற்றும் மென்பொருள் நிறுவனம் சிஸ்டிகா சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை உருவாக்கிய (பார்வையற்ற புரோக்கிராமர் உட்பட எட்டு பேர் அந்நிறுவனத்தில் பணி புரிகின்றனர்) சுனில் SRVC மூலமாகத் திறனாளர்களை தகவல் தொடர்புத் துறைக்குக் கொண்டுவர முடிவெடுத்தார். “துவக்கத்தில் தகவல் தொடர்பு நிறுவனங்களில் உள்ள நிபுணர்களை அழைத்து வந்து கோடை பயிற்சி முகாம்கள் மட்டுமே நடத்தி வந்தோம். அதன் பின்னர் 2008 இல் தான் வசதியான அலுவலகத்திற்கு இடம் பெயர்ந்தோம். இங்கு தாராளமான வெளியுடன் நல்ல சாதனங்களும், பயிற்சித் தளத்திற்குத் தேவையான அனைத்தும் நிறுவப்பட்டுள்ளன. இங்கு மாணவர்களுக்கு ஆறுமாத எட்டு மாத பயிற்சி வகுப்புகள் நடத்தினோம்” என்கிறார் சுனில்.
அடுத்த சில ஆண்டுகள் கழித்து தகவல் தொழில் நுட்பமல்லாத பிற பிரிவுகளையும் துவக்க முடிவெடுத்தோம். “காரணம் எல்லோராலும் கணினி பயிற்சியில் ஈடுபட முடிவதில்லை” SRVC யிலும் வெளியிலும் இசையார்வம் உடைய சிலரது முயற்சியால் இசைக்குழு தோன்றியது. நாங்கள் நடத்தும் நிகழ்ச்சியை விரும்பி ரசித்த பார்வையாளர்களுக்கு முடிவில் இவர்கள் பார்வையற்றவர்கள் என்பதை அறிவிக்கையில் பெரும் ஆனந்த அதிர்ச்சி அடைவார்கள்” என்கிறார் சுனில்.
தனக்குச் சாத்தியமான பல்வேறு செயல்பாடுகளுடன் SRVC மையம் நிதானமான வளர்ச்சி கண்டு வருகிறது. எங்கள் மாணவர்களும் கணினி தகவல் பதிவு, தொலைபேசிச் சந்தை, கால் சென்டர் போன்ற பல்வேறு துறைகளில் நிறைய வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.
SRVC இன் தொப்பியில் மற்றொரு இறகு, கால் பந்துக் குழு. “2013 ஆம் ஆண்டு தேசியப் போட்டிகளில் கலந்து கொண்டதுடன் தாய்லாந்தில் நடைபெற்ற ஏழு குழுக்களுக்கு இடையிலான பார்வையற்றோருக்கான சர்வதேசப் போட்டியிலும் பங்கேற்றது. குழுவை அமைத்து போதிய பயிற்சி பெற்றிராத ஆரம்ப நாட்களிலேயே நல்ல பயிற்சி பெற்ற ஈரான் போன்ற நாடுகளுடன் மோதி அரை இறுதிவரை நாங்கள் சென்றது மிகப்பெரிய சாதனையாகும். ஈரான் பார்வையற்றோர் கால்பந்தாட்டக் குழு சர்வதேச அளவில் ஐந்தாம் இடத்தைப் பிடித்தது” என்றார் சுனில்.
புறத்தூண்டுவியல் நடவடிக்கைகளிலும் கூட்டுச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். எங்கள் முன்னால் மாணவர்களில் ஒருவர் சதை பிடிப்புக் கலையில் அற்புதமான தேர்ச்சி பெற்றவர். அத்திறமையைப் பயன்படுத்தி மஸாஜ் மையத்தைத் துவக்கினார். அம்மையத்தில் எமது அமைப்பைச் சேர்ந்த பார்வையற்றோருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளார்” என்கிறார் சுனில்.
SRVC இல் பட்டம் பெற்றவர்களில் வேலை வாய்ப்பை அடைகிறவர்களின் எண்ணிக்கை மிக உயர்ந்த எண்ணிக்கையில் 65% ஆக இருக்கிறது. கால் சென்டர்களில், நிர்வாக அமைப்பில், மற்ற பிறவற்றில் வேலைக்கு ஆட்களை அமர்த்துவதில் பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் பங்காளிகளாக இருக்கின்றனர். “தொலைத் தொடர்பு நிறுவனமான ஐடியாவில் எங்கள் பட்டதாரிகள் சிலரைக் கடந்த ஆண்டு வேலைக்கு அனுப்பி வைத்தோம். இந்த ஆண்டு இங்கு பயிற்சி பெறும் அணி முழுவதையும் தங்களிடம் வேலைக்கு அனுப்புமாறு கேட்டுள்ளனர்” சலவைத் தொழில், உணவுத் துறை, குளிர் பானம் சுவையறிதல் போன்ற பல்வேறு இடங்களில் பார்வையற்றோருக்கான வேலை வாய்ப்புகள் பெருகி வருகிறது. மேலும் சிலர் கொச்சின் நட்சத்திர விடுதி இசைக்குழுக்களில் நிரந்தர இடம் பெற்றுள்ளனர். வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறாத மீதி 35% பேர் ஆசியர் மற்றும் பயிற்சி போன்ற தங்களது பழைய வேலைகளையே தொடர்கின்றனர்.
SRVC தனது செயல்பாடுகளுக்கான நிதித் தேவைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்கிறது.? தனிநபர்கள் வழங்கும் நன்கொடை மற்றும் செலவின ஏற்பு மூலமாகவும், நிறுவனங்கள் அளிக்கும் புறச் சேவைக் கொடைகள் மூலமாகவும் மையம் தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கிறது. “கடந்த எட்டு ஆண்டுகளில் எட்டு அணி மாணவர்கள் பயிற்சி பெற்றுச் சென்றுள்ளனர். வேலை வாய்ப்பு அதிகரித்திருப்பதையடுத்து 2014 ஆம் ஆண்டு இரண்டாவது மையம் துவக்கியுள்ளோம். இதில் நான்கு மாத குறுகிய காலப் பயிற்சிகள் அளித்து வருகிறோம். இவ்வகுப்புகளில் ஆங்கிலத் தேர்ச்சியும். கணினி அறிவியல் அறிமுகமும் செய்து வருகிறோம்” என்று பெருமையுடன் கூறுகிறார்.
இருந்தாலும், இந்தப் பயணம் நெடியதாகவும், கடுமையானதாகவும் இருக்கிறது. லாப நோக்கற்ற பல அமைப்புகளைப் போலவே கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருவதை விளக்கினார் சுனில். பார்வைக்குறைவு உடையோர் வழக்கமான வேலைகளைச் செய்ய முடியாது என்ற மனோபாவத்தைக் கடந்து வருவது மிகவும் சிக்கலாக உள்ளது. பார்வையற்ற தங்கள் மகன், மகளை வீட்டை விட்டு வெளியில் அனுப்பவே தயங்குகின்றனர் அவர்களது பெற்றோர்கள். இதுவொரு புறமிருக்க, மறுபுறம் வேலை செய்கிற இடத்தில் சக ஊழியர்கள் பார்வையற்றோர் தங்கள் குழுவில் இடம்பெறுவதை விரும்புவதில்லை. இது பற்றி சுனில் முன்வைக்கும் வாதம் “கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் மிகப்பெரும் எண்ணிக்கையில் திறன் மிக்க பார்வையற்றோரை ஒன்று திரட்டியிருக்கிறோம். எனது நெடிய அனுபவத்தில் வலியுறுத்திக் கூற விரும்புவது, ஊழியர்களுக்கு வேலைக்கு அமர்த்துவோர் பார்வையற்றோர் எவ்வளவு பெரிய திறமைசாலிகள் என்பதைப் புரிந்து கொள்வதில்லை. எங்களிடம் பயிற்சி பெற வருபவர்கள் கூறுவது, அவர்களால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடிவதில்லை என்பதைத் தான். அவர்களுக்குள் எவ்வளவு பெரிய திறமை ஒளிந்து கிடக்கிறது என்பதைப் பெற்றோர்கள் உணர்வதில்லை. அதனால் தான் எங்களிடம் வருகின்றனர்” என்று சுனில் தொடர்ந்து கூறுகிறார்.
எது இத்தனை ஆண்டுகளாக இயக்கிக் கொண்டிருக்கிறது என்று நாம் முன்வைத்த கேள்வி சுனிலுக்குப் புதிதல்ல. “இதற்கு உனக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று பலரும் என்னைக் கேட்கிறார்கள். நான் நினைக்கிறேன் நம் எல்லோருக்குமே நேரம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதைக் காணத் தான் விரும்புவதில்லை. கருணை காட்ட விரும்புபவர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை. கருணை காட்டலைச் செய்து கொண்டே இருக்கிறார்கள் அவ்வளவு தான். எங்களுடன் தொண்டு புரிபவர்கள் யாரும் மாற்றுப்பாதையைத் தேடுவதே இல்லை. அதுதான் எங்கள் பலமே” என்கிறார். எப்போதாவது இதை விட்டுவிடத் தோன்றுமா என்று கேட்டதற்கு ”ஆம் தோன்றும் தான் அவ்வப்போது விட்டுவிடத் தான் தோன்றுகிறது. என் வேலையை. எனது நேரம் முழுவதையும் பார்வையற்றோருக்காக அர்ப்பணிக்கத் தோன்றுகிறது”