’ஒரு தொழில் முனைவராக தோல்வி அடைந்துவிட்டேன்’- காணாமல் போன Cafe Coffee Day நிறுவனரின் உருக்கமான கடிதம்...
பிரபல வர்த்தக நிறுவனமான ’கஃபே காஃபி டே’ உரிமையாளரும், கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்,கிருஷ்ணா மருமகனுமான வி.ஜி.சித்தார்த்தா காணாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அவர் தனது நிறுவன இயக்குனர் குழு மற்றும் ஊழியர்களுக்கு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.
ஒரு தொழிலதிபராக தோல்வி அடைந்துவிட்டேன் என்றும் தவறுகள் அனைத்திற்கும் தான் மட்டுமே பொறுப்பு என்றும் சித்தார்த்தா உருக்கமாக அதில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மங்களூர் நேத்ராவதி ஆறு அருகே அவரை கடைசியாக பார்த்ததாக சொல்லப்படுவதால், ஆற்றுப்பகுதியில் தீவிர தேடுதல் பணி காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காஃபி டே நிறுவனம், உலக அளவில் புகழ்பெற்ற வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. பாரம்பரியமாக காஃபி வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் குடும்பத்தைச் சேர்ந்த வி.ஜி.சித்தார்த்தா இந்நிறுவனத்தின் உரிமையாளர். இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மூத்த மகளை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
இதனிடையே, சித்தார்த்தா காணாமல் போய்விட்டதாக தெரியவந்தது. நேற்று மாலை முதல் சித்தார்த்தாவை காணவில்லை என தகவல் வெளியாகியது. கர்நாடக மாநிலத்தின் சிக்மங்களூருவில் உள்ள தனது காபி தோட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் அவர் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது.
காரில் வந்து கொண்டிருந்த போது, முதலில் சேகல்பூருக்கு செல்ல வேண்டும் என கூறியதாகவும், ஆனால் திடிரென மங்களூருக்கு செல்லுமாறு சித்தார்த்தா கார் டிரைவரிடம் கூறியதாக தெரிகிறது.
கார், மங்களூரு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, நேத்ராவதி ஆறு பாலத்தின் அருகே சென்றபோது சித்தார்த்தா திடிரென காரை நிறுத்துமாறு ட்ரைவரிடம் கூறியிருக்கிறார். டிரைவர் காரை நிறுத்தியதும் சிறிது நடந்துவிட்டு வருவதாக சொல்லி அவர் காரை விட்டு இறங்குச் சென்றிருக்கிறார்.
அதன் பிறகு ஒரு மணி நேரம் ஆகியும் சித்தார்த்தா திரும்பி வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த கார் டிரைவர், அவரது வீட்டிற்குத் தகவல் தெரிவித்து, காவல் நிலையத்திலும் புகார் செய்தனர். இதனையடுத்து காவல்துறையினர் புலன்விசாரணை நடத்தி தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
சித்தார்த்தா காணாமல் போனதாக சொல்லப்படும் பகுதி அருகே தான் நேத்ராவதி ஆறு ஒடுகிறது. இந்த ஆற்றின் பாலத்தில் இருந்து ஒருவர் குதிப்பதை பார்த்ததாக வழிபோக்கர்கள் சிலர் கூறியுள்ளனர். இதனால், ஆற்றல் குதித்தவர் சித்தார்த்தவாக இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தக் கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், ஆற்றில் தேடும் பணியையையும் முடுக்கிவிட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 25 படகுகளில் தேடல் பணி நடைபெற்று வருகிறது. மீனவர்களும் தேடலில் உதவி வருகின்றனர்.
சித்தார்த்தா காணாமல் போன செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி வெளியானதும், கர்நாடக முதல்வர் எடியூரப்பா முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் எஸ்.எம்.கிருஷ்ணா வீட்டிற்குச் சென்று அவரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் பல உள்ளூர் தலைவர்களும் அவரது வீட்டிற்கு விரைந்துள்ளனர்.
இதனிடையே, காஃபி டே நிறுவனமும், சித்தார்த்தா காணாமல் போன தகவலை உறுதி படுத்தியுள்ளது. தங்கள் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சித்தார்த்தா திங்கள் கிழமை மாலை முதல் காணவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சித்தார்த்தா, நிறுவன இயக்குனர் குழு மற்றும் ஊழியர்களுக்கு எழுதிய கடிதம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில் சித்தார்த்தா, ”ஒரு தொழிலதிபராக தான் தோல்வி அடைந்துவிட்டேன்,” என உருக்கமாக எழுதியுள்ளார். தொழில் சிக்கல் மற்றும் கடன் அழுத்தம் பற்றியும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
”கடின உழைப்புக்கான ஈடுபாட்டுடன், எங்கள் நிறுவனங்கள் மூலம், 30,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கிய நிலையில், துவக்கம் முதல் நான் பங்குதாரராக இருக்கும் நிறுவனம் மூலம் 20,000 தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கிய நிலையில், 37 ஆண்டுகளுக்குப் பிறகு, என்னுடைய சிறந்த முயற்சிகளையும் மீறி சரியான லாபகரமான வர்த்தக மாதிரியை உருவாக்க தவறிவிட்டேன்,” என்று கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
எல்லாவற்றையும் கொடுத்தாலும், தன் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களை ஏமாற்றிவிட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். பங்குகளை திரும்பி வாங்கிக் கொள்வதற்கான தனியார் பங்குதாரர் ஒருவரின் அழுத்தம் மற்றும் கடன் பிரச்சனைகளின் அழுத்தம் பற்றியும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழியர்கள் அனைவரும் வலுவாக இருக்க வேண்டும் என்றும், புதிய நிர்வாகத்தின் கீழ் வர்த்தகத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளவர், தவறுகள் அனைத்திற்கும் தான் மட்டுமே பொறுப்பு என்றும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
தான் யாரையும் ஏமாற்ற நினைக்கவில்லை என்றும், ஒரு தொழிலதிபராக தான் தோல்வி அடைந்துவிட்டதாகவும், இதுவே தனது கருத்து என்றும் அவர் மேலும் உருக்கமாக கூறியுள்ளார். கடன்களை அடைப்பதற்குத் தேவையான சொத்துக்கள் இருப்பதாகவும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்ப நிறுவனமான மைன்ட்டிரி நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களில் ஒருவராகவும் சித்தார்த்தா விளங்கினார். சில மாதங்களுக்கு முன் தன்வசம் இருந்த பங்குகளை அவர் எல் & டி நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். சித்தார்த்தா காணமால் போனதற்கு தொழில் பிரச்சனை மற்றும் கடன் சிக்கல் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தகவல் உதவி: பிடிஐ, லைவ்மின்ட் | தொகுப்பு: சைபர்சிம்மன்