இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் ரயில்வே நிலையம்...!
நாள் ஒன்றுக்கு 25 ரயில்கள் நிறுத்தம், 50 ரயில்கள் கடந்து சென்று; சுமார் 7000 பயணிகள் பயன்படுத்தும் இந்த ரயில் நிலையத்தில் சுமார் 40 பெண் ஊழியர்கள் ட்ராக் முதல் அலுவலக பணிகள் வரை அனைத்தையும் பார்த்துக்கொள்கின்றனர்.
இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர், ஆண்களுக்கு இணையாக எல்லாத் துறையிலும் முன்னின்று திறன்பட செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும், ஒரு முழு துறையும் பெண்களால் மட்டும் இயங்குவது அதிசயம் தான்; அதுவும் அரசுத் துறை என்றால் நிச்சயம் அதிசயம் தான்.
ஜெய்ப்பூர் காந்தி நகர் ரயில் நிலையம் முழுவதும் பெண் ஊழியர்கள் மூலம் மட்டுமே இயங்குகிறது. இந்தியாவில் பெண்கள் மட்டுமே இயக்கும் முதல் ரயில் நிலையம் இது. துணை நகர வகையில் மும்பை மாட்டுங்கா ரயில் நிலையமே முதல் பெண்கள் ரயில் நிலையமாகும், ஆனால் முக்கிய நகர வகையில் இரு மாநிலங்களுக்கு இடைய ஓடும் ரயில் நிலையத்தில் ஜெய்ப்பூர் காந்தி நகரே முழுமையாக பெண்களை கொண்ட முதல் ரயில் நிலையம்.
பெண்கள் முன்னேற்றத்தை முன்னிறுத்துவதற்காக வட மேற்கு ரயில்வே, பெண்கள் மட்டுமே இயக்கும் ரயில் நிலையத்தை அமைத்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இது செயலுக்கு வந்ததுடன் 40க்கும் மேலான ஊழியர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.
இந்த ரயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 25 ரயில்கள் நின்று போகின்றன, 50 ரயில்கள் கடந்து செல்கின்றனர்; அதில் சுமார் 7000 பயணிகள் நடமாட்டத்தில் உள்ளனர்.
ஜெய்ப்பூர் காந்தி நகர் ரயில் நிலையத்தின் வேலை அமைப்பு
இந்த ரயில் நிலையத்தில் பணிபுரியும் பெண்களே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் சுதந்திரத்தை பெற்றுள்ளனர். இங்கு அன்ஜெல்லா ஸ்டெல்லா என்பவர் நிலைய மேலாளராக இருக்கிறார். மேலாளர் மட்டுமின்றி வணிக மற்றும் செயல்பாட்டு பிரிவு, டிக்கெட் சோதனை மற்றும் அறிவித்தல் என சகலத்தையும் பெண்கள் தான் பார்த்துக் கொள்கின்றனர்.
இது குறித்து வட மேற்கு ரயில்வே பொது மேலாளர் டிபி சிங் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில்,
“பெண்கள் எப்பொழுதுமே ஆண்களுக்கு இணையானவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். அதனால் இந்த ரயில் நிலையத்தை அனைத்து மகளிர் ரயில் நிலையமாக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன். இது மிகவும் சவாலான வேலை; அதை நிறைவாக செய்வார்கள் என நம்பிக்கைக் கொள்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.
இந்திய ரயில் சேவையில் ஒரு வருடம் மட்டுமே பணிபுரிந்துள்ள ஸ்டெல்லா இந்நிலையத்தின் மேலாளராக ஆனதை கண்டு பெருமைக்கொள்கிறார்.
“ஒரே வருடத்தில் அனைத்து மகளிர் நிலையத்தின் மேலாளர் ஆவேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எல்லா பாதுகாப்பு விதிமுறைகளையும் நான் கடைபிடித்து, தரமான செயல்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றுவேன்,” என ஸ்டெல்லா தெரிவித்தார்.
ஜெய்ப்பூர் ரயில்வே பிரிவை தலைமை தாங்கும் சௌம்யா மாத்தூர், இந்த ரயில் நிலையத்தை கடந்து செல்லும் பல பெண்களுக்கு இது உந்துதலாக அமையும் எனத் தெரிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்களும் இங்க பொருத்தப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டில், சர்வதேச தொழிலாளர் அமைப்பு 131 நாடுகளில் வேலைவாய்ப்பில் பெண் பங்களிப்பு பட்டியலை வெளியிட்டது. அதில் இந்தியா கீழிருந்து 11வது இடத்தைப் பிடித்துள்ளது. இது போன்ற வேலைவாய்ப்பு பெண்களின் பங்களிப்பை அதிகரித்து இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்த உதவும்.