முதல் இந்திய பெண் சுரங்கப் பொறியாளர்: அகன்ஷா குமாரி யார்?
ஜார்க்கண்ட் சுரங்கத்தில் இணைந்து அகன்ஷா!
ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள பார்காகான் நகரை சேர்ந்த அகன்ஷா குமாரி, கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) இல் சேர்ந்த முதல் இந்திய பெண் சுரங்க பொறியியலாளர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரி ஆகியிருக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள வடக்கு கரன்புரா பகுதியில், கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) நிலக்கரி சுரங்கத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார் அகன்ஷா.
”அதிகாரி முதல் மருத்துவர் வரை, ராணுவம் முதல் கனரக வாகனங்கள் இயக்குவது வரை பெண்கள் எல்லா துறையிலும் தங்கள் பங்கில் சிறந்து விளங்கினாலும், நிலக்கரி சுரங்கத் துறையில் கால்பதிப்பது இதுவே முதல்முறை," என்று சுரங்க அதிகாரிகள் சிலர் பேசியிருக்கின்றனர்.
மகாரத்னா காங்லோமரேட் கோல் இந்தியா லிமிடெட்டில் (சிஐஎல்) அகன்ஷா இரண்டாவது சுரங்கப் பொறியாளராகவும் மற்றும் நிலத்தடி நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிய போகும் முதல் நபர் என்பதால் அவரது சாதனையின் மகத்துவம் பெரிது என்றும் சுரங்க அதிகாரிகள் பேசியிருக்கின்றனர்.

ஹஜாரிபாகில் உள்ள பார்காகான் பகுதியை சேர்ந்த அகன்ஷா, நவோதயா வித்யாலயாவில் பள்ளிப்படிப்பை முடித்தவர். அந்த பகுதியில் இருக்கும் சுரங்கப் பகுதியை ஒட்டி வசிப்பதால், அகன்ஷா நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளை தொடர்ந்து பார்த்து வருகிறார்.
மேலும் அவரது குழந்தை பருவத்திலிருந்தே நிலக்கரி சுரங்கம் மீது ஆர்வம் கொண்டுள்ளார். இதனால், குழந்தை பருவத்திலிருந்தே சுரங்கங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் பற்றிய இயல்பான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர், ஆர்வம் காரணமாக தன்பாத்தில் உள்ள கல்லூரியில் சுரங்க பொறியியல் படிப்பை தேர்வு செய்தார்.
கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு, ராஜஸ்தானில் உள்ள ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் பலாரியா சுரங்கத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய அகன்ஷா, தனது கனவுகளை நிறைவேற்றுவதற்கு குடும்பத்தினர் மிகப்பெரிய ஆதரவளித்தனர் என்று நெகிழ்கிறார்.
”கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணியில் இணைந்தன் மூலம் எனது குழந்தை பருவ கனவு நிறைவேறி இருக்கிறது. இதற்கு எனது குடும்பத்தினர் கொடுத்த ஆதரவு மறக்க முடியாதது. எனது சிறப்பை நிறுவனத்துக்கு வழங்க முடியும் நம்புகிறேன்," என்று அகன்ஷா பேசியிருக்கிறார்.
நிலக்கரி அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, கோல் இந்தியா லிமிடெட் அதிகாரி பிஎம் பிரசாத் போன்றோர் அகன்ஷாவை வெகுவாக வாழ்த்தியதோடு, அவர் நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு பங்களிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தகவல் உதவி- newindianexpress | தமிழில்: மலையரசு

