ரஃபேல் போர் விமானத்தை இயக்க முதல் பெண் விமானி தேர்வு!
ரஃபேல் போர் விமானங்களை இயக்க முதல் முறையாக பெண் விமானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே நேரம் இந்திய போர் கப்பலில் முதல் முறையாக இரு பெண் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளர்.
விரைவில் ரஃபேல் போர் விமானங்களை பெண் விமானிகள் இயக்குவதை நாம் பார்க்கலாம். இந்திய விமானப் படையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட ரஃபேல் போர் விமானத்தை இயக்க முதல் முறையாக பெண் விமானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அம்பாலா விமானத்தளத்தில் ரஃபேல் போர் விமானங்களை இயக்க பயிற்சி பெற்ற 10 பெண் விமானிகளில் ஒருவரை இந்திய விமானப் படை தேர்வு செய்துள்ளது.
அதேபோல் இந்தியக் கடற்படை வரலாற்றில் முதல் முறையாக போர் கப்பல்களில் ஹெலிகாப்டர்களை இயக்க இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய பாதுகாப்புத் துறையின் முப்படைகளிலும் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
பெண்கள் திருமணம், மகப்பேறு போன்ற காரணங்களுக்காக பணியில் இடைவெளி எடுக்கவேண்டிய சூழல் ஏற்படுவதுண்டு. போர் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சியளிக்க ஒரு நபருக்கு 15 கோடி ரூபாய் வரை செலவிட வேண்டியிருப்பதால் இதில் பெண்களை நியமிப்பதில் இந்திய விமானப் படை தயக்கம் காட்டி வந்தது.
ஆனால் சமீபத்தில் இந்தப் போக்கு மாறியது. 2016-ம் ஆண்டு போர் விமானங்களை இயக்க 10 பெண்கள் நியமிக்கப்பட்டனர். விமான லெப்டினண்ட் அவனி சதுர்வேதி இந்தியாவின் முதல் பெண் போர் விமானி என்கிற பெருமைக்குரியவர். இவர் 2018-ம் ஆண்டு எம்.ஐ.ஜி 21 ரக போர் விமானத்தை தனியாக ஓட்டிச் சென்றார்.
தற்போது இந்திய கடற்படை வரலாற்றில் முதல் முறையாக சப் லெப்டினெண்ட் குமுதினி தியாகி மற்றும் சப் லெப்டினெண்ட் ரிதி சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் இந்தியப் போர் கப்பல்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தகவல் உதவி: டைம்ஸ் ஆஃப் இந்தியா