இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரல் ஆகும் முதல் தமிழ் பெண் - யார் இந்த இக்னேசியஸ் டெலாஸ் புளோரா?
இந்திய ராணுவ மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற முதல் தமிழ்ப் பெண் இக்னேசியஸ் டெலாஸ் புளோராவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவ மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற முதல் தமிழ்ப் பெண் இக்னேசியஸ் டெலாஸ் புளோராவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
யார் இந்த இக்னேஷியஸ் டெலாஸ் புளோரா?
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூர் வடக்கூரைச் சேர்ந்தவர் இக்னேஷியஸ் டெலாஸ் புளோரா. 1965ம் ஆண்டு ஜனவரி மாதம், 5ம் தேதி இவர் லூர்துசாமி பிள்ளை, தெரசம்மாள் தம்பதிக்கு மகளாக பிறந்துள்ளார். இக்னேஷியஸ் டெலாஸ் புளோராவுடன் 3 சகோதரர்கள், 2 சகோதரிகள் பிறந்துள்ளனர்.
இவருடைய ஒட்டுமொத்த குடும்பமே ராணுவத்துடன் தொடர்புடையது தான். மூத்த சகோதரரான அந்தோணி சாமி 40 ஆண்டுகள் இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2-வது சகோதரரான ஜான் பிரிட்டோ எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராணுவத்தில் பணியாற்றிய இவரது 3வது சகோதரர் ஜார்ஜ் ராஜா, தற்போது உயிரோருடன் இல்லை. அன்னம்மாள், டெசி ஆகிய 2 சகோதரிகள் உள்ளனர்.
இக்னேசியஸ் டெலோஸ் புளோராவின் கணவர் இக்னேசியஸ் ஜான். ஓய்வு பெற்ற பேராசிரியராவார். இந்த தம்பதிக்கு மைக்கேல் ஜெகன், ஜெசன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

ராணுவத்தில் இணைந்தது எப்படி?
சகோதரர்கள் அனைவரும் ராணுவத்தில் இருந்ததால் சிறிய வயதில் இருந்தே இக்னேசியஸ் டெலோஸ் புளோராவிற்கும் ராணுவத்தில் சேரவேண்டும் என்ற இருந்துள்ளது. எனவே, அவருடைய மூத்த அண்ணன் அந்தோணி சாமியின் அறிவுரைப்படி திருவனந்தபுரத்தில் நடந்த இந்திய ராணுவ செவிலியர் சேவை பிரிவு பணிக்கான எழுத்து தேர்வை எழுதியுள்ளார்.
அதில் தேர்வான பிறகும் கூட விடாமுயற்சியுடன் அடுத்தடுத்து தேர்வுகள் எழுதி பதவி உயர்வு பெற்று வந்துள்ளார். அதன் விளைவாக தற்போது செவிலியர் பிரிவில் முதன்மை இடமான மேஜர் ஜெனரல் பதவி உயர்வை பெற்றுள்ளார்.
இதுபற்றி இக்னேசியஸ் டெலோஸ் புளோராவின் சகோதரர்கள் அந்தோணி சாமி, ஜான் பிரிட்டோ ஆகியோர் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில்,
”இந்திய நாட்டிற்காக நாங்கள் பணியாற்றியதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அதிலும் எங்களது சகோதரி இக்னேசியஸ் டெலோஸ் புளோரா தமிழகத்தின் முதல் பெண் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் சேவை செய்யும் பாக்கியம் எங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கிடைத்தது மிகவும் சந்தோசமாகவும், மன நிறைவாகவும் உள்ளது,” என்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து:
இந்திய ராணுவத்தில் செவிலியர் பிரிவில் பணியாற்றி வந்த இக்னேஷியஸ் டெலாஸ் புளோரா, படிப்படியாக பல்வேறு பதவி உயர்வுகள் கிடைத்து தற்போது மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தமிழகத்தில் இப்பதவியை வகிக்கும் முதல் பெண் இவர்தான். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
“மேஜர் ஜெனரல் இக்னேஷியஸ் டெலாஸ் ஃப்ளோராவின் மகத்தான சாதனைக்கு வாழ்த்துகள். தமிழ்நாட்டின் முதல் பெண் மேஜர் ஜெனரல் என்ற பெருமையை அவர் பெற்றிருப்பது மிகப்பெரிய மைல்கல். அவளுடைய மகத்தான பணி, சேவை மற்றும் ஆர்வத்திற்காக நான் அவரை வாழ்த்துகிறேன்,” என பதிவிட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலாஸ் புளோராவுக்கு இந்திய ராணுவத்தின் வட இந்திய பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து நேற்று முன்தினம் பதிவிட்டிருந்தது. அதனை ரீட்வீட் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்தை தெரிவித்திருந்தார்.

ட்வீட் நீக்கமும் - சர்ச்சையும்:
இந்திய ராணுவத்தின் வட இந்தியப் பிரிவு நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய வாழ்த்து செய்தியை நீக்கியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
ஏற்கனவே மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால், அமலாக்கத்துறை தொடர்ந்து தமிழகத்தில் முகாமிட்டுள்ளது, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததையடுத்து ராணுவத்தின் ட்வீட் நீக்கப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்பி கனிமொழி, தமிழ்நாடு முதலமைச்சர், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை ஏன் நீக்க வேண்டும்? அதன் பின்னணி என்ன? என கேள்வி ராணுவத்திற்கு கேள்வி எழுப்பியிருந்தார். இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் அளித்த விளக்கத்தில்,
“பிரிகேடியர் பதவி வகிக்கும் வரை ராணுவத்தின் வட இந்தியப் பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்தார். தற்போது மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளதால் வட இந்திய ராணுவப் பிரிவு தனது பாராட்டுகளை ட்வீட் செய்துள்ளது. ஆனால், மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற பிறகு, அவர் ராணுவத்தின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு அதிகாரிகள் தலைமையகத்தின் கீழ் வருகிறார். எனவே, அவர்கள் முதலில் அதன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வாழ்த்து பதிவு செய்ய வேண்டும். எனவே வட இந்திய ராணுவப் பிரிவு வெளியிட்ட வாழ்த்து ட்வீட் நீக்கப்பட்டது. இதில் அரசியல் எதுவும் இல்லை,” என விளக்கமளிக்கப்பட்டது.
‘இந்திய விமானப் படையின் முதல் பெண் அதிகாரி’ - Dr.விஜயலட்சுமி ரமணன் பற்றி தெரியுமா?

