சென்னை மக்கள் திருமணம், துக்க நிகழ்வுக்கு செல்ல ‘இ-பாஸ்’ பெறலாம்!
மக்கள் தங்களுக்கான அவசரத்தேவைக்காக பயணம் மேற்கொள்ள ஆன்லைனில் உரிய பாஸ் பெற்று சொந்த வாகனங்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் பகுதியாக, ஊரடங்கு மே 4ம் தேதி தொடங்கி மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிக்கைகளை வெளியிட்டனர்.
தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, பொது போக்குவரத்துகளான ரயில், பேருந்து மற்றும் விமானப் பயணங்களுக்கான தடை தொடர்கின்றது. ஆனால் மக்கள் தங்களுக்கான அவசரத்தேவைக்காக பயணம் மேற்கொள்ள மாநகராட்சி ஆணையிரடம் இருந்து உரிய பாஸ் பெற்று சொந்த வாகனங்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய நிகழ்ச்சிகளான அதாவது முன்கூட்டியே நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்கள், எதிர்பாராத மரணம் மற்றும் மருத்துவச் சிகிச்சைகள் தொடர்பான காரணங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வது குறித்து ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுக்கும் விதத்தில் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் முன்கூட்டியே நிச்சயகிப்பட்ட திருமணங்கள், எதிர்பாராத துக்க நிகழ்வுகள், இறுதிச்சடங்குகள் மற்றும் மருத்துவச் சிகிச்சைகள் தொடர்பாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் மேற்கொள்ள பெருநகர மாநகராட்சி வழங்கும் அனுமதிச் சீட்டைப் பெறவேண்டும்.
தமிழ்நாடு அரசு மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறையின் வாயிலாக http://tnepass.tnega.org என்ற இணையதளத்தின் வழியே அவரசஅனுமதிச் சீட்டு வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி முன்கூட்டியே நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்கள், அவசர மருத்துவ சிகிச்சை (ரத்த சொந்தங்களுக்கு மட்டும்) மற்றும் எதிர்பாராவிதமான மரணம் (ரத்த சொந்தங்களுக்கு மட்டும்) அரசு வழிகாட்டுதலின்படி அவசரப் பயண அனுமதிச் சீட்டு (Emergency pass) வழங்கும் அதிகாரம் மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதனால் http://tnepass.tnega.org என்ற இணையதளம் வழியாக பாஸ் தேவைப்படுவோர் விண்ணப்பித்து பயண அனுமதிச் சீட்டினைப் பெற்றுக்கொள்ள சென்னை மாந்கராட்சி அறிவுறுத்தியுள்ளது. எனவே, இதற்காக அவசர அனுமதிச் சீட்டு பெற சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் யாரும் வர வேண்டாம் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்”.