வீட்டில் அமர்ந்தபடியே ஃப்ரீலான்சிங் மூலம் லட்சங்களை ஈட்டும் நந்திதா!
'Manipal Global Education' ஆய்வு, 15 மில்லியன் பேர் நம் நாட்டில் ஃப்ரீலான்சர்களாக இருந்து வீட்டில் இருந்தபடியே பணி செய்து வருவாய் ஈட்டுகின்றனர் என்கிறது. உலகிலேயே freelancingல் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. வீட்டில் இருந்து கொண்டே ப்ராஜ்க்ட் அடிப்படையில் வெவ்வேறு நிறுவனங்களுக்கு பணிபுரிந்து அதிக வருவாய் ஈட்டுகின்றனர் பல இளைஞர்கள். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு பணிபுரிந்து பலர் நல்ல வருமானம் பெறுகின்றனர் என்று ஆய்வு தெரிவிக்கின்றது.
திறனுள்ள ப்ரீலான்சர்கள் இந்தியாவில் ஒரு நாளைக்கு 20 டாலர் அதாவது குறைந்தது 1000 ரூபாய் சம்பாதிக்க முடியும். மும்பையைச் சேர்ந்த நந்திதா பால் வெற்றிகரமான ஃப்ரீலான்சருக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
டிசைனர் ஆன நந்திதா மும்பையில் பிறந்து வளர்ந்தவர். அவருக்கு கலை மற்றும் டிசைனிங்கில் ஆர்வம் அதிகம். வெப் டிசைனரான அவர், இளம் வயது முதல் டிஜிட்டல் டிசைனிங் மற்றும் பாரம்பரிய முறையில் டிசைனிங் செய்து வருகிறார். MetLife Asia, Guyana Business Magazine, Potomac University போன்ற பல பிரபல நிறுவனங்களுக்கு விளம்பர டிசைனிங் செய்துள்ளார் நந்திதா.
நந்திதாவிற்கு வண்ணங்கள் மீது காதல். அதனால் அதையே தன் பணிவாழ்க்கை ஆக்கிக்கொண்டார். ஆரம்பத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வெப் டெவலப்பராக இருந்தார். பின் 2012ல் தான் சுயமாக பணி செய்ய முடிவெடுத்து வெப்சைட் டிசைனிங், லேபில் டிசைன், லோகோ, பேக்கேஜிங் டிசைனிங் என்று தன் திறமையை வெளிப்படுத்த ஃப்ரீலான்சர் ஆனார்.
“இன்று நந்திதா 4-5 லட்சம் ரூபாய் வரை வீட்டில் பணிபுரிந்தபடி வருவாய் ஈட்டுகிறார்.”
ஆனால் ஃப்ரீலான்சிங்கில் சில சிக்கல்கள் இருப்பதை அவர் மறுக்கவில்லை. பொதுவாக ஒரு ப்ராஜக்ட்டுக்கு பேசப்பட்ட தொகையை முழுமையாக பெறுவது சுயேட்சையாக பணிபுரிபவர்களுக்கு சவாலாக இருக்கிறது. அதற்கு வழி சொல்லும் நந்திதா,
“முழுமையான பேசிய தொகை கையில் வரும்வரை, நீங்கள் முழு ப்ராஜக்டையும் ஒப்படைக்காதீர்கள்,” என்கிறார்.
இன்று சிறு தொழில்முனைவர் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவரும் தங்களுக்கான வெப்சைட்டை ரெடி செய்ய ஆர்வமாக உள்ளனர். அதனால் நந்திதா போன்ற வெப் டிசைக்னர்களுக்கு நல்ல டிமாண்ட் இருந்து கொண்டே இருக்கிறது. அதிலும் தரமான டிசைனர்களுக்கு எப்போதும் வரவேற்பும், அதிக வருவாயும் சந்தையில் காத்திருக்கிறது.
ஃப்ரீலான்சிங் மூலம் செய்யக்கூடிய மற்ற பணிகள்:
டிசைனிங் தவிர, இன்று சுயேட்சையாக செய்ய பல பணி வாய்ப்புகள் உள்ளது. உலகமெங்கும் பல பணிகளுக்கு ஃப்ரீலான்சிங் முறையில் சில வேலைகளுக்கு ஆட்களை நியமிக்கின்றனர்.
வெப் மற்றும் மொபைல் டெவலப்மெண்ட், டேட்டா எண்ட்ரி, இண்டெர்நெட் ரிசர்ச், அக்கவுண்டிங், கன்சல்டன்சி பணிகள், உள்ளடக்க எழுத்தாளர்கள் என்று பல்வேறு பணிகளை வீட்டில் இருந்தபடியே செய்யமுடியும். ப்ராஜக்ட் அல்லது அசைன்மெண்ட் அடிப்படையில் வேலையை ஒப்புக்கொண்டும், மாதம் அல்லது வருடக்கணக்கில் ஒப்புக்கொண்டும் ஃப்ரீலான்சிங் செய்யமுடியும். மேற்கத்திய நாடுகளில் பிரபலமான சுயேட்சை பணி, தற்போது இந்தியாவிலும் அதிகரித்துவிட்டது.
நந்திதா பால் ஃப்ரீலான்சிங் மூலம் பெரிய வெற்றியை அடைந்திருந்தாலும் அவர் அதற்கான அடியை பயமின்றி எடுத்து வைத்ததே அவரின் இந்த நிலைக்குக் காரணம். அவரைப்போல பலரும் இன்று இந்தியாவில் தனிச்சையாக லட்சங்களில் வருமானம் ஈட்டி தங்களின் விருப்பத்துறையில் கோலோச்சி உள்ளனர்.
கட்டுரையாளர்: இந்துஜா ரகுனாதன்