கடையில் வாங்காமல், வீட்டில் நீங்களே செய்யலாம் விநாயகர் சிலை!
வீட்டில் உள்ள சமையலறைப் பொருட்களைக் கொண்டே குழந்தைகளை வைத்தே சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத, அழகிய விநாயகர் சிலை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்!
இந்தியாவின் மிக முக்கியான பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. நாடு முழுவதிலும் உள்ள இந்து மக்கள் இந்த பண்டிகையை விநாயக பெருமானின் பிறந்தநாளாகக் கொண்டாடி மகிழ்வர். அன்றைய தினம் தங்களுடைய வீடுகளில் விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, கரும்பு, வெலாங்காய், கலாக்காய் என படையலிட்டு வழிபடுவது வழக்கம்.
இதில் மிக முக்கியமான ஒன்று விநாயகர் சிலை. பொதுவாக களிமண்ணால் ஆன புதிய விநாயகர் சிலைகளை வீட்டில் பிரதிர்ஷ்டை செய்து வழிபடுவதே இந்துக்களின் மரபு. பிறகு அந்த சிலைகளை கடலிலோ அல்லது ஏரி, குளங்களிலோ போட்டுவிடுவர்.
இந்தியாவை பொறுத்தவரை மகாராஷ்ட்டிரா போன்ற மாநிலங்களில் தான் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அங்கு பெரிய பெரிய சிலைகளை எல்லாம் தெருக்களில் வைத்து, பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று, கடலில் கரைப்பர். அதே வழக்கம் தமிழ்நாட்டிலும் உண்டு.
ஆரம்ப காலங்களில் களிமண்ணில் தான் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வந்தன. பின்னர் விஞ்ஞான வளர்ச்சியினால் ரசாயனப் பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலைகள் செய்யப்பட்டன. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டது. கடல், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் போடப்படும் ரசாயன விநாயகர் சிலைகள், தண்ணீரை கெடுக்கத் தொடங்கின.
இதையடுத்து ரசாயனங்களை கொண்டு விநாயகர் சிலைகளை செய்யக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இன்றளவும் ரசாயன விநாயகர் சிலைகள் புழக்கத்தில் தான் இருக்கிறது. இதன் காரணமாக கடல் நீரின் மாசு அளவு அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் போதும் 2,033 மெட்ரிக் டன் குப்பைகள் கடலில் சேர்கிறது.
எதிர்கால சந்ததிக்கு நல்ல இயற்கையான காற்றையும், தூய்மையான நீரையும் விட்டுச் செல்வது தான் நாம் அவர்களுக்கு தரும் மாபெரும் சொத்து. எனவே, சமீபகாலமாக சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத, அதே சமயம் பயனுள்ள விநாயகர் சிலைகள் மார்க்கெட்டில் விற்பனைக்கு புதிதாக வந்தவண்ணம் தான் உள்ளன. ஆனால், அவற்றின் தரம் எல்லா இடங்களில் ஒரே மாதிரி இருப்பதில்லை. சமயங்களில் அவற்றிலும் கலப்படம் நடக்கிறது.
எனவே அவற்றை முற்றிலும் தவிர்க்க, நாமே வீட்டில் விநாயகர் சிலை செய்வது தான் சரியானது. ஆனால், அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள் களிமண்ணைத் தேடி எங்கே போவது என கஷ்டப்பட வேண்டாம். அவர்களுக்காகத்தான் சமையலைப் பொருட்களைக் கொண்டே அழகிய விநாயகர் சிலை செய்யக் கற்றுத் தருகிறார் ’தி கே ஜங்சன்’ நிறுவனர் குஹூ குப்தா.
இவர் மும்பை ஐஐடியில் கணினி அறிவியல் பொறியியல் பட்டம் பெற்றவர். சுமார் ஏழு வருடங்களாக பல கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றிய அவர், தனது சொந்த நிறுவனமான ’The k Junction'னைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் உத்தியோகஸ்தர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு, சுயவளர்ச்சி மற்றும் ஆன்மீக நடைமுறைகள் குறித்து மாற்று வழி கற்றல் முறையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாகத் தான்,
விநாயகர் சதுர்த்திக்கு சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வகையிலான விநாயகர் சிலைகளை நாமே வீட்டில் செய்யலாம் என்கிறார் குஹூ. அதுவும் வீட்டில் உள்ள சமையலறைப் பொருட்களைக் கொண்டே இத்தகைய விநாயகர் சிலைகளை செய்ய முடியும் என்கிறார் இவர். அதோடு, இந்த சிலை உருவாக்கம் எளிமையானது என்பதால் அதில் இரண்டு வயது குழந்தை கூட ஈடுபட முடியும். இது நமது குடும்பத்தின் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும் என நம்பிக்கையுடன் அவர் கூறுகிறார்.
இதற்குத் தேவையான பொருட்கள் என்னவெனில், 5 டிஸ்பூன் மஞ்சள் தூள், 2 டிஸ்பூன் மைதா மாவு, அரை டிஸ்பூன் சர்க்கரை மற்றும் தேவையான அளவு பால் மட்டுமே. தன் இரண்டு வயது மகனின் பங்களிப்புடன் விநாயகர் சிலை செய்த வீடியோவையும் அவர் யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவரது செய்முறை விளக்கத்தில்,
- முதலில் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை களிமண் பதத்துக்கு பிசைந்துகொள்ள வேண்டும்.
- அடுத்து, அந்த பசையை வைத்து முதலில் ஒரு உருண்டை செய்து கொள்ளுங்கள். அதுதான் வயிற்றுப்பகுதி.
- பிறகு கால்கள், அடுத்து தலை என ஒவ்வொன்றாக செய்யவும்.
- கண்களுக்கு மிளகு அல்லது கிராம்பை பயன்படுத்தலாம்.
”இவ்வாறு செய்யப்படும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்புடையதாக இருக்கும்,” என்கிறார் குஹூ.
இந்த விநாயகர் சிலையை கடலில் கொண்டு போய் போடாமல் நம் வீட்டிலிலேயே ஒரு பூந்தொட்டியில் தண்ணீர் ஊற்றி கரைத்துவிடலாம். இதன் மூலம் நமக்கு ஒரு செடி கிடைத்தது போலவும் ஆகும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால்,
- முதலில் களிமண்ணால் ஆன பூந்தொட்டி ஒன்றை வாங்கிக்கொள்ளுங்கள். அதில் ஓட்டைகளை அடைத்துவிட்டு தண்ணீர் நிரப்புங்கள். பிறகு களிமண்ணால் ஆன அல்லது வீட்டில் செய்த பசுமை விநாயகர் சிலையை அதில் போட்டு கரையுங்கள். சிலை கரைந்தவுடன் அதில் நவதானிய விதைகளைப் போடுங்கள்.
களிமண் விநாயகர் சிலை எறால் அதில் தனியாக மண் கொட்டத் தேவையில்லை. பசுமை விநியாகர் சிலை என்றால் தொட்டியில் மண் கொட்டிக்கொள்ளுங்கள். இப்போது அதில் விதைகளை (துளசி, வெண்டைக்காய், தக்காளி) போட்டுவிட்டு, பிறகு ஆர்கானிக் உரத்தை போடவும். ஓரிரு நாட்களில் அந்த பூந்தொட்டியில் செடி முளைத்திருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.
அதேபோல் தேங்காய் சரடு, மூங்கிள், மரக்கட்டை, சணல் கயிறு போன்றவற்றை கொண்டும் நாம் விநாயகர் சிலைகளை செய்யலாம். இதுபோல் செய்யும் போது சுற்றுச்சூழலுக்கு எந்த தாபிப்பும் ஏற்படாமம் நம்மால் தவிர்க்க முடியும். முடிந்த வரை பிளாஸ்டிக் மற்றும் ரசாயண பொருட்களை தவிர்ப்போம்.
சிறுகுழந்தைகளை இது போன்ற செயல்களில் நாம் ஈடுபடுத்தும் போது, அவர்களின் கற்பனைத்திறன் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்யும் திறமை மேம்படும். அதோடு, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வும் சிறுவயதிலேயே பசுமரத்தாணி போல் மனதில் பதிந்து விடும் என்பதில் சந்தேகமேயில்லை.
குஹூ குப்தா வீட்டிலேயே விநாயகர் சிலை செய்யும் வீடியோ: