இந்தியப் பெண்களுக்கான ஃபேஷன் பொருட்களை வழங்கும் ஜெர்மனி ’தமிழ் பொண்ணு’
தொழில்முனைவில் ஈடுபட்டுள்ள ஜாக்குலீன் கபூர் இந்தியாவைத் தனது தாய்நாடாகவே கருதுகிறார். தற்போது பிரபல லைஃப்ஸ்டைல் பிராண்டான ’ஆயிஷா’-வின் நிறுவனராக உள்ளார்.
ஜாக்குலீன் கபூர் தொழில்முனைவர், டிசைனர், குதிரையேற்றம் சார்ந்த விளையாட்டு வீரர், உணவக உரிமையாளர், தாய் என வெவ்வேறு பொறுப்புகளை சுமந்துள்ளார். இவர் தற்போது ’ஆயிஷா ஆக்சசரிஸ்’ (Ayesha Accessories) என்கிற இளம் பெண்களுக்கான ஃபேஷன் பிராண்டின் நிறுவனர். நாட்டின் வெகு சில பெண் தொழில்முனைவோர்களில் ஒருவர் என்கிற பெருமையை மட்டும் இவர் கொண்டிருக்கவில்லை. இந்தியாவுடனான இவரது உறவே சிறப்பானதுதான்.
ஜெர்மனியில் பிறந்து வளர்ந்த ஜாக்குலின் 1989-ம் ஆண்டு தன்னுடைய காதலரான திலீப் கபூருடன் புதுச்சேரிக்கு மாற்றலானார். திலீப் கபூர் ’ஹைட்சைன்’ (Hidesign) என்கிற லைஃப்ஸ்டைல் பிராண்ட் நிறுவனர். போஹும் பல்கலைக்கழகத்திலும் ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஜப்பானிய மொழிக்கான கல்வி நிறுவனத்திலும் ஜப்பானிய மொழி படித்துள்ளார்.
திலீப்பை திருமணம் செய்துகொண்ட பிறகு ஹைட்சைனின் ஆடைகள் பிரிவு துவங்கப்படுவதில் ஜாக்குலின் முக்கிய பங்கு வகித்தார். 1999-ம் ஆண்டு இந்தியாவின் முதல் மல்டி பிராண்ட் டிபார்ட்மெண்டல் ஸ்டோரான Casablanca துவங்கினார். 2000-ம் ஆண்டு ஐரோப்பிய ஸ்டைல் ஆடைகளை குறைந்த விலையில் விற்பனை செய்யும் ’டைட்டானிக்’ என்கிற அவுட்லெட்டைத் திறந்தார்.
புதுச்சேரியில் வாழ்வதால் ஜாக்குலின் தன்னை ’தமிழ்ப் பொண்ணு’ என்றே குறிப்பிடுகிறார். 2000-ம் ஆண்டு இவர் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து ’ரெட் எர்த் ரைடிங் ஸ்கூல்’ நிறுவினார். இங்கு ஐந்து நாய்கள் 15 பூனைகள், 26 குதிரைகள் போன்றவை உள்ளன.
தற்போது ஐம்பதுகளில் இருக்கும் ஜாக்குலின் ’தி ப்ளாக் பாக்ஸ்’ என்கிற விருந்தினர் இல்லத்தை நடத்தி வருகிறார். இந்த இல்லம் மறுசுழற்சி செய்யப்பட்ட ஷிப்பிங் கண்டெயினர்களால் ஆனது. அத்துடன் PY Love Café திறந்துள்ளார். மறுசழற்சி செய்யப்பட்ட ஃபர்னிச்சர் மற்றும் கண்ணாடிகளைப் பயன்படுத்தி அவரே இந்த கஃபேவை வடிவமைத்துள்ளார்.
ஜாக்குலின் 2008-ம் ஆண்டில் இந்திய ஃபேஷன் சந்தையில் இடைவெளி இருப்பதை கவனித்தார். தற்கால மற்றும் மேற்கத்திய வடிவமைப்புகளை விரும்பும் பெண்களுக்கு சேவையளிக்கும் விதத்தில் ஃபேஷன் நகைகள் பிராண்ட் இல்லாததை கவனித்தார். இந்த இடைவெளியை நிரப்பும் முயற்சியாக Ayesha என்கிற சொந்த பிராண்டை அறிமுகப்படுத்தினார். தனது சேமிப்பைக் கொண்டும் ஹைட்சைனில் பணிபுரியும் பெண்கள் அடங்கிய ஒரு சிறு குழுவுடனும் இந்த முயற்சியைத் துவங்கினார்.
மெல்ல Ayesha-வில் நகைகள் மட்டுமல்லாது பைகள், சன்கிளாஸ், ஸ்கார்ஃப், தலைமுடியை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்ளிட்டவையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் முதல் நிலை நகரங்கள் முழுவதும் பன்னிரண்டு அவுட்லெட்களுடன் Ayesha விரிவடைந்துள்ளது.
”மக்கள் என்னை வெளிநாட்டவராகப் பார்ப்பதுண்டு. ஆனால் எனக்கு எப்போதும் வரவேற்பு கிடைப்பதாகவே கருதுகிறேன். இந்திய பணியாளர்களில் பெண்கள் இன்னமும் முக்கிய பொறுப்புகள் வகிப்பதில்லை என்றே தோன்றுகிறது,” என்றார்.
2016-ம் ஆண்டு ஜாக்குலினுக்கு விவாகரத்தான பிறகு சிறிது காலம் வணிகத்தில் சரிவு ஏற்பட்டதாக யுவர்ஸ்டோரியிடம் தெரிவித்தார் ஜாக்குலின். ஆனால் தற்போது Ayesha சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மத்திய கிழக்கு பகுதியில் அதன் செயல்பாடுகளை விரிவடையச் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் விரிவடையச் செய்ய வெளிப்புற முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஜாக்குலினின் மகன் மிலனின் வயது 27. வெளிநாட்டில் பணிபுரிகிறார். ஜாக்குலினின் மகளின் பெயர் ஆயிஷா. இவர் 2000-ம் ஆண்டில் வெளியான ’ப்ளாக்’ பாலிவுட் திரைப்படத்தில் ராணி முகர்ஜியின் சிறு வயது கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது பெயரில் செயல்படும் நிறுவனத்தில் இவரும் பார்ட்னராக உள்ளார். 24 வயதாகும் ஆயிஷா தற்போது கொலம்பியா பல்கலைக்கழக மாணவி ஆவார்.
ஆங்கில கட்டுரையாளர் : அதிரா நாயர் | தமிழில் : ஸ்ரீவித்யா