வாட்ஸ்அப்-ல் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறலாம்: எப்படி பதிவிறக்கம் செய்வது?
மிகவும் எளிதாக சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்!
கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இப்போது முக்கியமான ஒன்றாக இருந்துவருகிறது. வெளிநாடு மற்றும் வெளிமாநில பயணங்களுக்கும் இன்றியமையாமல் இருக்கும் இந்த சான்றிதழை பெற பல்வேறு வழிகள் உள்ளன.
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள், பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும். அந்த லிங்க்கை கிளிக் செய்து அதற்குள் சென்று சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியும். அதேபோல் டிஜி லாக்கர் மற்றும் கோவின் தளத்தில் சென்று செல்போன் எண்ணை பதிவு செய்து, சான்றிதழை பெற முடியும்.
ஆனால் இவை அனைத்தும் உடனடியாக செய்ய முடியாது. தடுப்பூசி போட்டு இரண்டு நாட்கள் ஆன பிறகுதான் இந்த தளங்களில் பதிவிறக்கம் செய்ய முடியும். தடுப்பூசி போட்ட அன்றே சான்றிதழை பதிவிறக்கம் செய்யும் வகையில் சில வாரங்கள் முன் மத்திய அரசு வாட்ஸ்அப் மூலம் சான்றிதழ் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியது.
இந்த வசதி மூலம் தடுப்பூசி சான்றிதழ் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதை பார்ப்போம்!
எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?
* MyGov கொரோனா ஹெல்ப் டெஸ்க் வாட்ஸ்அப் எண் ஆன +91 9013151515 என்பதை உங்கள் ஸ்மார்ட்போனில் சேவ் செய்துகொள்ள வேண்டும்.
* சேவ் செய்தவுடன், வாட்ஸ்அப்பில் இந்த எண்ணுக்கு covid certificate என்று டைப் செய்து அனுப்ப வேண்டும்.
* இதன்பின், உங்கள் செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி (OTP) எண்ணை வாட்ஸ்அப் சாட்டில் உள்ளீடு செய்ய வேண்டும்.
* இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உங்களின் பெயர் விவரம் வரும். பின்னர் உங்களுக்கு கோவிட் தடுப்பூசி சர்டிபிகேட் வேண்டும் என்றால் எண் 1 டைப் செய்யவும் என்று வரும்.
* மேலும், 1 என்ற ஆப்ஷனை தேர்வு செய்து அனுப்பினால் தடுப்பூசி சான்றிதழ் கிடைத்துவிடும்.
* Pdf வடிவில் சான்றிதழ் கிடைக்கும். அதனை நீங்கள் உங்கள் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.