1 லட்சம் பேர் பயன்படுத்திய கழிவறையை களவாடிய கொள்ளையர்கள்: போலீஸ் வலைவீச்சு...
கழிப்பறைக்காக காவல்நிலையத்தில் புகாரா என்று மலைக்காதீர்! ஏனெனில் திருடு போனது தகதக தங்கத்தால் செய்யப்பட்ட தங்க டாய்லெட். எங்கே, எப்போது, எவர் திருடியது?
ஒரு மனுஷனுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடத்துடன் அதற்குள் ஒரு கழிவறையும் அவ்வளவு அவசியம். அப்படிப்பட்ட, ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதிலுள்ள முதல் இருவார்த்தைகளுக்கான இடமாக விளங்கி காலைக்கடனை கழிக்க உதவும் கழிப்பறை ஒன்று திருடு போனதில் லண்டன் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருடப்பட்டது தங்க கழிவறையாச்சே! ஆம், அதன் மதிப்பு ரூ.8 கோடியே 91லட்சமாம்...
லண்டன் வுட்ஸ்டாக் பகுதியில் அமைந்துள்ளது ப்ளென்ஹெய்ம் அரண்மனை. பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்தது இந்த அரண்மனையில் தான். இவ்வரண்மனையில் தங்க டாய்லெட் பொதுமக்கள் பார்வைக்காக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. 5 மில்லியன் டாலர் மதிப்புள்ள ‘அமெரிக்கா’ என்று பெயரிடப்பட்ட இந்த கழிப்பறை, இத்தாலிய கலைஞரான மௌரிசியோ கட்டெலனின் கலைப் படைப்பாகும். அவர் ஏற்பாடு செய்திருந்த கலைக் கண்காட்சியில் தங்க டாய்லெட் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.
’அமெரிக்கா’ கழிப்பறை செப்டம்பர் 12ம் தேதி முதல் அக்டோபர் 27 வரை ப்ளென்ஹெய்மில் காட்சிக்கு வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை(14.9.19) அதிகாலை 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட கழிப்பறை இருக்கை கொள்ளை அடிக்கப் பட்டுள்ளது. மேலும், அரண்மனையில் பணியாற்றி 66 வயதுடைய ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து ப்ளென்ஹெய்ம் அரண்மனையின் தலைமை நிர்வாக அதிகாரி டொமினிக் ஹரே சிஎன்என்-யிடம் கூறியதாவது:
“இந்த அசாதாரண நிகழ்வுக்காக நாங்கள் வருத்தப்படுகிறோம். திருட்டு சம்பவத்தில் யாரும் காயப்படவில்லை. விரைவான மற்றும் துணிச்சலான எதிர்வினைகளுக்கு எங்கள் ஊழியர்களுக்கும் தேம்ஸ் பள்ளத்தாக்கு காவல்துறையினருக்கும் நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். மௌரிசியோ கட்டெலனின் ஆர்ட் கண்காட்சிக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். ஆகையால், மிகவும் விலைமதிப்பற்ற ஒரு பொருள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது பெரிய அவமானம். ஆனால் கண்காட்சியில் இன்னும் பல கண்கவர் புதையல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன,” என்றார்.
குறைந்தது 2 வாகனங்களைப் பயன்படுத்தி திருடர்கள் இந்த கழிப்பறையை சனிக்கிழமை அதிகாலை எடுத்துச் சென்றுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், கழிப்பறையானது அரண்மனையின் பிளம்பிங் அமைப்புடன் இணைக்கப்பட்டிருந்ததால், கழிப்பறையை அகற்றும்போது அறையில் குறிப்பிடத்தக்க சேதம் மற்றும் நீர் கசிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தேம்ஸ் பள்ளத்தாக்கு இன்ஸ்பெக்டர் ரிச்சர்ட் நிக்கோல்ஸ் வயர் ஏஜென்சியிடம் தெரிவித்ததாவது:
“அதிகாலை 4:50 மணியளவில் திருடர்கள் அரண்மனையை விட்டு வெளியேறி இருக்கவேண்டும். அரண்மனையிலிருந்து கழிப்பறை மட்டுமே திருடப்பட்டிருக்கும் என்று நம்புகிறோம். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்து வருகிறோம்,” என்றுள்ளார்.
கழிவறையை உருவாக்கிய மௌரிசியோ கட்டெலன் நியூயார்க் டைம்சுக்கு அனுப்பி மெயிலில், “அது ஒரு ப்ரான்க்காக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். திருடு போன அன்று காலை இச்செய்தியுடன் என்னை எழுப்பியதும், ப்ரான்க் என்றே நினைத்தேன். கழிப்பறையை திருடிய முட்டாள் யார் என்று தான் தோன்றியது. அது தங்கத்தாலானது என்பதைஒரு நொடி மறந்தேவிட்டேன் நான்...” என்று குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சில் பிறந்த அறைக்கு எதிரே ஒரு மரத்தாலான அறையிலே தங்க கழிவறையானது வைக்கப்பட்டிருந்தது. சர்ச்சிலின் குடும்பம் 1950ம் ஆண்டில் முதல் முதலில் அரண்மனையை பொதுமக்கள் பார்வையிட அனுமதித்தது. அவருடைய குடும்பம் இன்னும் அதை வைத்திருந்தாலும், அது இப்போது ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகும். 2014ம் ஆண்டில், அரண்மனையில் பொது கலை கண்காட்சிகளை நடத்த ப்ளென்ஹெய்ம் கலை அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.
தங்கக் கழிவறை ஆனது 2016ம் ஆண்டில் நியூயார்க்கின் குகன்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் முதன்முதலில் வைக்கப்பட்டபோது, மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட 1 லட்சம் பார்வையாளர்கள் மணிக்கணக்காக நின்று கழிவறையை கண்டு பயன்படுத்தியுள்ளனர். துப்புரவாளர்கள் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் கழிப்பறையை சுத்தப்படுத்தினர்.
வரிசையில் காத்து கிடப்பதை தவிர்க்க ஒரு பார்வையாளருக்கு 3 நிமிட அவகாசமே வழங்கப்படுகிறது. பார்வையாளர்கள் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளவும் முடியும். அரண்மனை, பூங்கா மற்றும் தோட்டத்தினை சுற்றிபார்ப்பதற்கான ஒரு அனுமதி சீட்டின் விலை ரூ2,500.
தகவல் உதவி: www.insider.com & www.history.com