எம்.பி.யின் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்: நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரஸ்யம்!
எதிர்கட்சியின் எம்.பி.யின் குழந்தைக்கு சபாநாயகர் பாலூட்டிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது எந்த நாட்டு நாடாளுமன்றம் தெரியுமா?
நாம் கேள்விப்பட்ட வரை நாடாளுமன்றம் ஆகட்டும், சட்டசபை ஆகட்டும், அங்கு ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியின்ரும் சண்டை போட்டுக் கொள்வார்கள், பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்படும் போன்றவை தான். ஆனால், வெளிநாடுகளில் இதையெல்லாம் தாண்டி பல சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறுவதுண்டு.
தற்போதும் அப்படித்தான் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு பாலூட்டியபடி, சபாநாயகர் அவையை நடத்திய சம்பவம் நடந்துள்ளது. அதிலும் அவர் பாலூட்டியது அவரது குழந்தைக்கு அல்ல. எதிர்க்கட்சி எம்.பி.யின் குழந்தைக்கு என்பது தான் இங்கு கூடுதல் சுவாரஸ்யமே.
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பியாக இருப்பவர் டமாடி கோபி. அந்நாட்டின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த டமாடி கபி, ஒரு ஓரினச் சேர்க்கையாளர். அவர் ஸ்மித் என்ற ஆண் நண்பரை திருமணம் செய்துள்ளார். தற்போது இருவரும் வாடகைத் தாய் மூலமாக கடந்த ஜூலை மாதம் ஆண் குழந்தைக்கு பெற்றோர் ஆகினர்.
நியூசிலாந்தில் ஓரினச் சேர்க்கை ஆண்களுக்கும் பேறுகால விடுமுறை உண்டு. எனவே, தனது பேறுகால விடுமுறைக்குப் பிறகு நாடாளுமன்றத்துக்கு குழந்தையுடன் வந்தார் டமாடி. குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டே அவர் சபை விவாதத்தில் கலந்து கொண்டார்.
இதைக் கண்ட சபாநாயகர் ட்ரவர் மல்லார்ட், குழந்தையை வாங்கி தனது மடியில் வைத்துக் கொண்டார். புட்டிப் பால் புகட்டியவாறே அவர் சபையை நடத்தினார். இந்தக் காட்சிகள் புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் இணையத்தில் வெளியாகி வைரலானது.
எரிபொருள் விலை பற்றிய கடுமையாக விவாதம் நிகழ்ந்து கொண்டிருந்த போது சபாநாயகர், எதிர்க்கட்சி எம்.பி.யின் குழந்தைக்கு பால் ஊட்டிய சம்பவம் அனைவர் மனதிலும் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. ட்ரவரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ட்ரவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர்,
“பொதுவாக சபாநாயகர் இருக்கை என்பது அவையை நடத்துபவர்களுக்கு உரியது. ஆனால் இன்று ஒரு மிக முக்கியமான மனிதர் என்னுடன் இந்த நாற்காலியை பகிர்ந்து கொள்கிறார். எம்.பி. டமாடி கோபி மற்றும் அவரது மனைவி டிம் இருவருக்கும் உங்களது குடும்பத்தின் புதிய வரவுக்காக மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் கென்யாவில் குழந்தையோடு நாடாளுமன்றம் வந்த பெண் எம்.பி. அவையில் இருந்து வெளியேற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், நியூசிலாந்து சபாநாயகரின் இந்த கனிவான நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இப்படி ட்ரவர் நாடாளுமன்றத்தில் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது இது முதல்முறையல்ல. குழந்தைகள் மீது மிகுந்த பிரியம் கொண்டவரான ட்ரவர், ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு மற்றுமொரு எம்.பி.யான வில்லோவ் ஜீன் ப்ரைம்மின் குழந்தையை இதே போன்று நாடாளுமன்றத்தில் கவனித்துக் கொண்டு பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
அதேபோல், நியூசிலாந்து பிரதமர் அர்டெர்ன், ஐநா.வில் ஆற்றிய தனது முதல் உரையின்போது தனது கைக்குழந்தையுடன் சென்று உலகத்தின் கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.