தீபாவளியை பசுமையாக, சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில் கொண்டாட சில வழிகள்...
தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்திற்கான கவுன்டவுன் தொடங்கிவிட்ட நிலையில் இந்த விழாக் காலத்தை ‘கிரீன் தீபாவளியாக’ அமைத்துக் கொள்ள சில டிப்ஸ்.
வருடத்தில் எத்தனையோ பண்டிகைகள் இருந்தாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் குழந்தைகளுக்கு படு குஷி. இனிப்பு, புத்தாடை, புதிய ஒளி பாய்ச்சும் பட்டாசுகள் என்று எல்லாமே அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும். 27ம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளிப் பண்டிகைக்காக மக்கள் தயாராக வருகின்றனர்.
தீமை என்னும் இருள் அகன்று நன்மை எனும் வெளிச்சம் பிறக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது தீபாவளி. இன்றைய காலகட்டத்தில் இந்தப் பண்டிகையை மாசு இல்லாமல், செயற்கை உற்பத்திப் பொருட்களின் பயன்பாடு இல்லாமல் பசுமையாகக் கொண்டாடுவதில் தான் சவாலே இருக்கிறது.
தீபாவளியை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் கொண்டாட சில வழிகள் இதோ:
- செயற்கை விளக்குகள் வேண்டாம்
தீபாவளிப் பண்டிகையில் முக்கியமானது விளக்குகள். மக்கும் தன்மையில்லாத விளக்குகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முற்றிலும் எரிந்து விடக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட மாட்டுச் சாணத்தால் ஆன விளக்குகள், தேனீக்களின் மெழுகால் செய்யப்பட்ட விளக்குகள், ரோஜா இதழ் விளக்குகள், ரோஸ் ஆயில் உள்ளிட்டவற்றை வாங்கி வீட்டிற்கும் மனதிற்கும் வெளிச்சத்தை தரலாம்.
ஆன்லைனில் வாங்க: பசுமை விளக்குகள் |
Big Bazaar, SPAR உள்ளிட்ட ஸ்டோர்களிலும் இவ்வகை விளக்குகள் கிடைக்கின்றன.
2. செடிகளை பரிசளியுங்கள்...
பண்டிகை என்றாலே பரிசளிப்பு இல்லாமலா? அந்தப் பரிசின் விலை எவ்வளவு என்பதை விட அதன் பயன் என்ன என்பதில் தான் இருக்கிறது அன்பின் வெளிப்பாடு. பொருட்களாக பரிசளிக்காமல் சுத்தமான காற்றை பரப்பக் கூடிய செடிகளை பரிசளியுங்கள் உங்கள் பிடித்தமானவரின் வாழ்நாள் அதிகரிக்கும். இயற்கையின் சிறந்த காற்று மாசை நீக்கும் சக்தி படைத்த செடிகள் நீங்கள் பரிசளிப்பவரின் எண்ணங்களிலும் வண்ணங்களிலும் பசுமையை சேர்க்கும். மணி பிளான்ட்டோ, போன்சாய் மரங்களோ எது வேண்டுமானாலும் கொடுங்கள்.
ஆன்லைனில் ஆர்டர் செய்ய : இயற்கை செடிகள்
3. இயற்கைக்கு மாறுங்க
பரிசளிக்கும் பொருட்கள் அவை சுற்றப்பட்டிருக்கும் தாள்கள் என எல்லாவற்றையும் இயற்கைக்கு ஊறு விளைவிக்காதவற்றை தேர்ந்தெடுங்கள். மக்கும் தன்மையுள்ளவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட பைகள், கூடைகளை பயன்படுத்துங்கள். நறுமணம் மற்றும் இயற்கை எண்ணெய்களைக் கொண்டு வீட்டிற்கு புத்தொலி பாய்ச்சுங்கள்.
4. இயற்கைக் குளியல் பொருட்கள்
தீபாவளியென்றாலே அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்தல் பிரதானம். இந்த எண்ணெய்க் குளியலிலும் ஆரோக்கியத்தை தேர்வு செய்யுங்கள். நெல்லிக்காய், சீயக்காய், செம்பருத்தி, ரோஸ், வேப்பிலை, துளசி உள்ளிட்ட இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்திய ஆரோக்கிய பொடிகளை தேர்வு செய்யலாம். இது 100 சதவிகிதம் இயற்கையானது எந்த பக்கவிளைவுகளும் இருக்காது.
5. ரங்கோலி
ரங்கோலி இல்லாமல் தீபாவளி முழுமைபெறாது. பண்டிகைக்காலங்களில் கண்ணிற்கு தெரியாத சிறு ஜீவராசிகளைக் கூட மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக ரங்கோலி பழக்கப்படுத்தப்பட்டது. எனவே இந்த தீபாவளிக்கு வண்ண வண்ண உணவு தானியங்களையும், இயற்கை சாயங்களைக் கொண்டு ரங்கோலி போடுங்கள்.
உணவு தானியங்கள் பறவைகளுக்கு உணவாகும் மேலும் இவற்றை வாங்குவதும் மிகச் சுலபம். அதேப் போல் இயற்கைப் பொருட்கள் சேர்க்கப்பட்ட ரங்கோலி பவுடர்களிலும் தற்போது விற்பனையில் உள்ளது. மரத்தூள், காய்கறி சாயம் கொண்டு செய்யப்பட்ட இந்த பொடிகளை வாங்கி பசுமையான கோலத்தை போடுங்கள்.
ஆன்லைன் லின்க்: இயற்கை கலர் அடங்கிய ரங்கோலி பொடிகள்
6. கிரீன் பட்டாசுகள்
ஒளி மற்றும் காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிக சப்தத்தை மற்றும் ஒளியைத் தரும் பட்டாசுகளுக்கு பதிலாக கிரீன் பட்டாசுகளை வாங்கவும் அரசு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் அரசுகளின் கட்டுப்பாடுகளால் சந்தையில் 40 சதவிகிதம் கிரீன் பட்டாசுகள் இந்த ஆண்டு இடம்பிடித்துள்ளது.
கிரீன் பட்டாசுகள் குறைவான சப்தத்துடனும், வெள்ளை மற்றும் மஞ்சள் வண்ண நிறங்களில் மட்டும் ஒளிரும். வேதியியல் பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படாததால் குழந்தைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது.
இந்த 6 வழிகளும் தீபாவளியை பசுமையானதாக மாற்றுவதோடு பண்டிகைக்கான முழு சந்தோஷத்தையும் கொடுக்கும். அனைவரும் ஒன்றிணைந்து பசுமை தீபாவளியைக் கொண்டாடுவோம் பசுமைச் சுற்றுச்சூழலை வளர்க்க உறுதியெடுப்போம்.