Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

'நம்ம ஊரு மெட்ராஸ்'... அதுக்கு இந்த வரலாறு தானே அட்ரசு...

மெட்ராஸ் தினம்: சென்னை! எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத தமிழகத்தின் தலைநகரம். ’மெட்ராஸ் தின’ கொண்டாட்டத்தில் அதன் வரலாற்றை தெரிந்து கொள்வோம்.

'நம்ம ஊரு மெட்ராஸ்'... அதுக்கு இந்த வரலாறு தானே அட்ரசு...

Monday August 22, 2016 , 6 min Read

சென்னை! இன்று சுமார் 1.5 கோடி மக்கள் தொகை நிறைந்த பிரமாண்ட மாநகரங்களில் ஒன்று. எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத தமிழகத்தின் தலைநகரம். இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் தலைநகரம் என்பதை விட, உலகில் உள்ள தமிழர்களின் முக்கிய பயன்பாட்டு நகரம் என்று சொல்வது இன்னும் சிறப்பாக இருக்கும்.


ஒருபுறம் அழுக்குகள் நிறைந்து, சிங்காரத்தை சென்னை இழந்தாலும், இன்றும் கம்பீரமாக வரலாற்றுச் சுவடுகளை தன்னகத்தே வைத்திருக்கும் இந்த நகருக்கு இன்றுடன் 383 வயது ஆகிறது. தான் தோன்றிய நாள் முதல் இன்று வரை, தன்னைத் தேடி பிழைக்க வந்தவர்களுக்கு வாழ்வளித்த நிலப்பகுதியாகவே சென்னை இருந்துவருகிறது.

'மெட்ராஸ்': அந்த கால மவுன்ட் ரோடு [பட உதவி: தி ஹிந்து]

சென்னையின் உருவாக்கம்

இன்று மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் பாதைகள், வானாளாவிய கட்டிடங்கள் என நவீன நகரமாகக் காட்சியளிக்கும் சென்னை மாநகரத்தின் துவக்கத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் 'பிரான்ஸிஸ் டே' என்ற கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்ட். 1639 ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று, இவர் சோழமண்டல கடற்கரையில் கொஞ்சம் நிலத்தை வாங்கினார். அந்த மனிதர் வாங்கிய நிலத்தில் பிரிட்டீஷர்கள் 'செயின்ட்.ஜார்ஜ் கோட்டை'யை கட்டினர். பிறகென்ன? அந்த இடத்தைச் சுற்றி மெல்ல குடியிருப்புகள் உருவாகவே சென்னைப் பட்டணம் உருவாகத் துவங்கியது.


பொதுவாக சென்னையின் பெயர்காரணமாக பல கதைகள் உலா வருகின்றன. 1996 க்கு முன் சென்னையின் அதிகாரப்பூர்வ பெயராக 'மெட்ராஸ்' என்றே இருந்து வந்தது. பிரான்ஸிஸ் டே, வாங்கிய நிலத்திற்கு அருகில் சில மீனவ குடும்பத்தினரும், இரு பிரஞ்சு கத்தோலிக்க பாதிரியார்களும் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த கிராமத்தின் ரோமன் கத்தோலிக்க தலையாரியின் பெயர் மதராசன் என்றும், அந்த நபரின் பெயரை வைத்தே, 'மதராஸ்பட்டணம்' என்ற பெயர் நிலவி வந்ததாகவும் கூறப்படுகிறது.


அதே நேரம் வேறொரு பெயர்க் காரணத்தையும் கூறுபவர்கள் உள்ளனர். சாந்தோமில் வசித்து வந்த போர்ச்சுக்கீசியர்களின் ‘மாத்ரா’ என்னும் செல்வாக்குமிகு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பிரான்ஸிஸ் டே காதல் வயப்பட்டிருந்தார். தனது காதலியின் குடும்பப் பெயரை வைத்தே இந்த பெயர் சூட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

செயின்ட்.ஜார்ஜ் கோட்டை (உள் படம்: 1673இல் ஜார்ஜ் கோட்டையின் வரைபடம்)

எக்மோர் ஆற்றுக்கும், கூவம் ஆற்றுக்கும் இடையில் இருந்த நிலம், சந்திரகிரி ராஜாவிற்கு சொந்தமானது. அதனை வாங்க அவரது உள்ளூர் நாயக்குகளான தாமர்லா சகோதரர்களிடம் பிரான்சிஸ் டே பேரம் பேசினார். அவர்கள் தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரை, புதிதாக அமையவிருக்கும் குடியிருப்புக்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நிலத்தை கிழக்கிந்திய கம்பெனிக்கு பட்டா எழுதிக் கொடுத்ததாகவும், அதனால் அந்த பகுதிக்கு 'சென்னப்பட்டினம்' எனப் பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.


ஆக, மதராஸபட்டினம் வடக்கிலும், சென்னப்பட்டினம் தெற்கிலும் இருந்த இருவேறு பகுதிகள். பின்னர் காலப்போக்கில் இரண்டையும் ஒருங்கிணைத்து 'மதராஸ்' என ஆங்கிலேயர்கள் அழைக்கத் தொடங்கினர்.


ட்ராம் வண்டியும் சென்னையும்

சென்னை மாநகரத்தில் போக்குவரத்தை சிறந்த முறையில் கட்டியமைத்ததில் ஆங்கிலேயருக்கு மிக முக்கிய பங்குண்டு. குதிரை வண்டிகளும், மாட்டு வண்டிகளும் மட்டுமே இருந்தபோது, ஆங்கிலேயர் காலத்தில் இன்று வழக்கொழிந்து போன ட்ராம் வண்டிகளும், ரயில் வண்டிகளும் அறிமுகப்படுத்தப்பட்டது. மணிக்கு வெறும் 7 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த ட்ராம் வண்டிகள், கால் கடுக்க நடக்கும் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. மெட்ராஸ் எலக்ட்ரிசிட்டி சிஸ்டம் என்ற கம்பெனி தான் ட்ராம் வண்டியை சென்னையில் இயக்கி வந்தது. 

1937 மெட்ராஸ் ட்ராம் [பட உதவி: KingsOwnMuseum]

சுமார் 100 ட்ராம் வண்டிகள், தங்க சாலை, பீச் ரோடு, மவுண்ட் ரோடு, பாரிஸ் கார்னர் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி வந்து கொண்டிருந்தன. 1895 முதல் 1953 வரை தனது சேவையை வழங்கிய இந்த ட்ராம் வண்டிகள், கால வெள்ளத்தில் சென்னையை விட்டு அடித்துச் செல்லப்பட்டன. இன்றைக்கு பெரியார் திடல் மற்றும் தினத்தந்தி அலுவலகம் இருக்கும் இடத்தில் தான் ட்ராம் வண்டிகளின் ஷெட் இருந்தது குறிப்பிடத்தக்கது.


சென்னையில் ரயில் எஞ்சின்களின் சத்தம்!

இராயபுரத்தில் தான் சென்னையின் முதல் ரயில் நிலையம் 1856 இல் அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்தி பார்க் டவுன் ரயில் நிலையம் ஹென்றி இர்வின் என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது. சென்னையில் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள் இரண்டுமே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை. எழும்பூர் ரயில் நிலையத்தை பொறுத்தவரை, எழும்பூர் ரெடோ என்ற பெயரில் அது ஒரு கோட்டையாக இருந்து வந்துள்ளது. இங்கு பிரிட்டீஷர், வெடிப் பொருட்களை சேமித்து வைத்ததாக கூறப்படுகிறது. 2.5 ஏக்கர் பரப்பில் விரிந்து காணப்படும் இந்த ரயில் நிலையத்தின் 1.7 ஏக்கர் நிலம் டாக்டர் பால் ஆண்டி என்பவரிடமிருந்து வாங்கப்பட்டதாகவும், அதற்காக சௌத் இந்தியா ரயில்வே நிறுவனம் அவருக்கு 1 லட்சம் ரூபாய் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

1925 இல் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் [பட உதவி: People Of India]

தனியாக ரயில் வைத்த தனவான்


‘தாட்டிகொண்ட நம்பெருமாள்’ செட்டியார். சென்னையின் புகழ்பெற்ற பல சிவப்பு நிறக் கட்டிடங்களை எழுப்பிய மனிதர். இவர் தான் சொந்தமாக ஒரு ரயிலையே வைத்திருந்தார். பாரிமுனையில் உள்ள உயர் நீதிமன்றம், சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் போன்றவை இவரால் கட்டப்பட்டவை. 18-ம் நூற்றாண்டின் மத்தியில் ஆங்கிலேயர்களுக்கு கிடைத்த பில்டிங் கான்ட்ராக்டர் இவர்.


இவர் வாழ்ந்த வீடு, ‘வெள்ளை மாளிகை’ என்ற பெயருடன், சேத்துப்பட்டு மேம்பாலம் அருகில், டாக்டர் மேத்தா மருத்துவமனையின் பின் உள்ளது. இதில், மூன்று மாடிகள், 30 அறைகள் உள்ளன. இது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. அன்றைய மெட்ராசில் வெளிநாட்டுக் கார் (French Dideon) வைத்திருந்த முதல் இந்தியர் செட்டியார்தான். கார் என்ன பெரிய விஷயம், அவர்தன் சொந்த உபயோகத்திற்காக, நான்கு பெட்டிகள் கொண்ட தனி ரயிலே வைத்திருந்தார். திருவள்ளூரில் இருக்கும் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு சென்று வருவதற்கு செட்டியார் இந்த ரயிலை பயன்படுத்தினார்.


ஏழுகிணறு

1639இல் சென்னையில் காலடி வைத்த கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் வங்கக் கடலுக்கு அருகில் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர். கோட்டைக்குள்தான் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகளும், ஊழியர்களும் ஆரம்ப நாட்களில் வசித்தனர். இங்கு, இவர்கள் சந்தித்த பிரச்னைகளில் முக்கியமானது குடிநீர். கடலுக்கு அருகில் இருப்பதால், ஜார்ஜ் கோட்டையில் எங்கு தோண்டினாலும் உப்பு நீர்தான் கிடைத்தது. குளுகுளு இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களை, மெட்ராஸ் வெயில் ஒருபுறம் வாட்டி வதைக்க, தாகம் தணிக்க நல்ல தண்ணீர் கிடைக்காதது மற்றொருபுறம் பாடாய்படுத்தியது.


குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ALL IS WELL என்று சொல்ல வேண்டுமானால், நமக்கென தேவை ஒரு WELL என்று யோசனை சொன்னார் கேப்டன் பேகர் என்ற ஆங்கிலேயப் பொறியாளர். அவரது யோசனையின் பேரில்தான் இன்றைய மின்ட் பகுதியில் ஏழு கிணறுகள் தோண்டப்பட்டன. உண்மையில் மொத்தம் பத்து கிணறுகள் வெட்டப்பட்டன. ஆனால் ஏழு கிணறுகளில்தான் ஊற்று நன்றாக இருந்ததால், அந்த பெயரே நிலைத்துவிட்டது.


ஸ்டான்லி மருத்துவமனை

வடசென்னை மக்களின் வாழ்வோடு இரண்டரக் கலந்துவிட்ட ஸ்டான்லி மருத்துவமனை சுமார் இருநூறு ஆண்டுகள் பழமையானது. கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் 17ஆம் நூற்றாண்டில் மெட்ராசில் குடியேறிய பிறகு, அவர்களுக்கு வேலை செய்வதற்காக நிறைய பேர் கோட்டையை சுற்றி உள்ள பகுதிகளுக்கு வரத் தொடங்கினர். அப்படி வந்தவர்களால் உருவானதுதான் அன்றைய 'கருப்பர் நகரம்' என அழைக்கப்பட்ட இன்றைய 'ஜார்ஜ் டவுன்' பகுதி.


ஆங்கிலேயர்கள் சென்னையில் காலூன்றியதும், தங்களுக்கான தேவைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பூர்த்தி செய்து கொண்டே வந்தனர். அந்த வரிசையில் நோய்வாய்ப்பட்ட ஆங்கிலேயர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோட்டைக்குள் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அதேசமயம் கோட்டைக்கு வெளியில் இருக்கும் சென்னையின் பூர்வ குடிகளுக்கு மருத்துவம் பார்க்க நவீன மருத்துவர்கள் என்று யாரும் இல்லை. நாட்டு மருத்துவர்கள் தான் அவர்களின் நோய்களுக்கு மருந்து கொடுத்து வந்தனர். எனவே அவர்களுக்கென ஒரு நவீன மருத்துவமனைக்கான தேவை மெல்ல உணரப்பட்டது.

மெட்ராஸ் பாரிமுனை பகுதி, [பட உதவி:ChennaiInFocus]

இந்த சூழலில்தான் 1781இல் மெட்ராசில் மிக மோசமான பஞ்சம் தலைவிரித்தாடியது. சென்னையின் சொந்த மக்கள் சோற்றுக்கு வழியில்லாமல் பரிதவித்தனர். இவர்களுக்கு உதவுவதற்காக இன்றைய 'ஸ்டான்லி மருத்துவமனை' இருக்கும் இடத்தில் ஒரு கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது. பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து கஞ்சி வாங்கி குடித்து தங்களின் பசியைப் போக்கிக் கொண்டனர்.


அடுத்த ஓராண்டில் இந்த இடம் ஒரு சத்திரமாக மாறியது. பின்னர் கிழக்கிந்திய கம்பெனி மருத்துவரான ஜான் அண்டர்வுட்டின் (John Underwood) முயற்சியால் இந்த இடத்தில் ஒரு சிறிய மருத்துவமனையும், தொழுநோயாளிகளுக்கான இல்லமும் தொடங்கப்பட்டது. 1799இல் தொடங்கப்பட்ட இதுதான் உள்ளூர்வாசிகளுக்கென பிரத்யேகமாக உருவான சென்னை மாநகரின் முதல் நவீன மருத்துவனை. இதனை உள்ளூர்வாசிகள் கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்று அழைத்தார்கள்.


சென்னை ஒரு துறைமுக நகரம்

முந்நூறு ஆண்டுகளுக்கு முன், சென்னை வெறும் மணல்வெளியாக இருந்த காலத்தில், இங்கு துறைமுகம் இல்லை, அதற்கான தேவையும் இல்லை. ஆனால் பல்லவர்கள் காலத்திலேயே இன்றைய மயிலாப்பூர், ஒரு துறைமுக நகரமாக இருந்திருக்கிறது. இங்கிருந்து ரோம சாம்ராஜ்ஜியத்துடன் பெரிய அளவில் வர்த்தகம் நடைப்பெற்றிருக்கிறது.


1522இல் போர்ச்சுகீசியர்கள் சோழ மண்டல கடற்கரையில் புனித தோமையாரின் பெயரால் சிறிய துறைமுகம் ஒன்றை நிறுவியிருக்கிறார்கள். போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து 1613இல் டச்சு வர்த்தகர்கள் பழவேற்காடு பகுதிக்கு வந்தனர். அவர்கள் வந்து சுமார் 25 ஆண்டுகள் கழித்தே, அதாவது 1639ஆம் ஆண்டுதான் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் சென்னை மண்ணில் கால் பதித்தார்கள்.


அவர்கள் கடற்கரை ஓரத்தில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டி வியாபாரத்தை ரிப்பன் வெட்டித் திறந்ததும், அவர்களுக்கான சரக்குகள் இங்கிலாந்தில் இருந்து பெரிய பெரிய கப்பல்களில் மெட்ராஸ் வரத் தொடங்கின. ஆனால் அப்போது இங்கு துறைமுகம் எதுவும் கிடையாது. எனவே கப்பல்கள் கடும் அலைகளைத் தாக்குப் பிடித்தபடி நடுக்கடலிலேயே நிற்க வேண்டும். பெரிய திறந்த படகுகள் (MASULAH BOATS) மூலம் கடலுக்குள் சென்று கப்பலில் உள்ள சரக்கை கரை சேர்ப்பார்கள். சில சமயங்களில் பெரிய அலைகளை எதிர்க்க முடியாமல் இந்த படகுகள் கவிழும்போது, சரக்குகளை கடல் ஸ்வாகா செய்துவிடும்.

1937 இல் சென்னை துறைமுகம், பட உதவி: KingsOwnMuseum

மெட்ராஸ் வர்த்தக சபையினர் துறைமுகம் வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக வைத்தனர். இதனையடுத்து பெரிய கப்பல்கள் சற்று உள்ளே வந்து நிற்பதற்கு வசதியாக 1861ஆம் ஆண்டு ஒரு நீண்ட சுவர், கடற்கரையில் இருந்து கடலுக்குள் செல்வது போல குறுக்காக கட்டப்பட்டது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் வீசிய புயலில் இந்த சுவர் குட்டிச் சுவராகிவிட்டது. எனவே இம்முறை இதனை சற்றே மாற்றி (L) வடிவில் இரண்டு தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டன. இந்த இரண்டுக்கும் இடையில் கிழக்குப் பகுதியில், 515அடி திறப்புடன் ஒரு செயற்கைத் துறைமுகம் உருவானது. கராச்சி துறைமுகத்தை கட்டிய பார்க்கஸ் என்பவர்தான் இந்த யோசனையை முன்வைத்தார். இதற்காக பல்லாவரம் மலையில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டன.


1881ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த வேலை முடியும் தருவாயில், பெரிய கப்பல்கள் உள்ளே வரத் தொடங்கின. ஆனால் இரண்டு மாதங்கள் கூட இந்த நிம்மதி நீடிக்கவில்லை. நவம்பர் மாதம் வீசிய புயலில் பாதி துறைமுகம் காணாமல் போய்விட்டது. மனந்தளராத விக்கிரமாதித்தனைப் போல கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மீண்டும் துறைமுகம் கட்டும் பணியில் இறங்கினர். ஒரு வழியாக இந்த பணி 1896இல் முழுமை அடைந்தது. இந்த துறைமுகத்தை மேம்படுத்தும் பணியில் சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் என்பவர் 1904ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவர்தான் இன்றைய துறைமுகத்தின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர். அடுத்த ஆண்டு உருவாக்கப்பட்ட 'மெட்ராஸ் போர்ட் டிரஸ்டு' -க்கு தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரான்சிஸ், பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.


மெட்ராசின் பழமையைப் பறைசாற்றியபடி நூற்றாண்டுகள் கடந்து நின்றுகொண்டிருக்கும் ஒவ்வொரு இந்தோ சராசனிக் பாணி கட்டடத்திற்கு பின்னும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. ஒவ்வொரு சாலைக்கு அடியிலும் ஒரு வரலாறு நிலத்தடி நீராய் ஈரம் மாறாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. கால ஓட்டத்தில் எத்தனையோ மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு இன்றும் இளமை மாறாமல் அதே துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சென்னை நகரத்திடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன. மொத்தத்தில் மூன்று நூற்றாண்டுகளைக் கடந்த இந்த மாநகரத்தின் கதை, அனைவருக்குமான ஒரு சிறந்த வாழ்வியல் பாடம்.

தகவல்கள் உதவி: பத்திரிகையாளர், எழுத்தாளர் பார்த்திபன், http://bodhiparthi.blogspot.in/

கட்டுரை தொகுப்பு உதவி: நந்தகுமாரன்