பீர் பாட்டில், பிளாஸ்டிக் பொருட்களால் கட்டிய வீடு: கேரள இளைஞரின் அசத்தல் முயற்சி!
கேரளாவைச் சேர்ந்த அஜி ஆனந்த் பிளாஸ்டிக் பைகள், பீர் பாட்டில்கள், களிமண், மூங்கில் போன்ற பொருட்களைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த வீட்டை குறைந்த செலவில் கட்டியிருக்கிறார்.
கொரோனா பரவல் மக்களை பெருமளவு அச்சத்தில் ஆழ்த்தியது. தொற்று பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மக்களை வீட்டுக்குள் முடக்கிய நிலையில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்கள் நேரத்தை செலவு செய்தனர்.
கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்திருக்கிறார். இவர் தனக்காக ஒரு ஸ்பெஷலான வீட்டை கட்டியிருக்கிறார். இதன் சிறப்பம்சம் என்ன என்கிறீர்களா?
இவர் கட்டியுள்ள வீடு சுற்றுச்சூழலுக்கு உகந்தது. அதுமட்டுமல்ல இதன் கட்டுமான செலவும் மிகக் குறைவு.
அப்படிப்பட்ட வீட்டை கட்டியிருக்கிறார் அஜி ஆனந்த். கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் வசிக்கிறார். இவரும் இவரது மனைவியும் அவர்களது பூர்வீக நிலத்தில் வீடு கட்ட ஆசைப்பட்டனர். குறைந்த செலவில் வீடு கட்ட நினைத்தார்கள். அதேசமயம், அந்த வீடு சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கவேண்டும் என்றும் முடிவு செய்தார்கள்.
குறைந்த செலவில் வீடு
36 வயதாகும் அஜி துணி கடை வைத்திருக்கிறார். அவரது மனைவி உதவி தலைமை ஆசிரியராக இருக்கிறார். கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வந்த அஜி சொந்தமாக வீடு கட்ட முடிவு செய்தார்.
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் ஆயிரம் சதுர அடி நிலத்தில் இவர்கள் வீடு கட்டியுள்ளனர். வீட்டை கட்டி முடிக்க அஜிக்கு ஆறு மாதங்கள் ஆனது. வெறும் 6 லட்ச ரூபாய் செலவில் கட்டுமானப் பணிகளை முடித்திருக்கிறார்.
பீர் பாட்டில் பயன்பாடு
அஜியின் உறவினர் ஒருவர் கட்டிடக் கலை படித்துக்கொண்டிருந்தார். அஜி அவரைத் தொடர்பு கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த வீட்டின் கட்டுமானம் பற்றி கலந்து பேசியிருக்கிறார். 2021ம் ஆண்டு கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு அஜி கட்டுமானப் பணியைத் துரிதப்படுத்தியிருக்கிறார்.
பிளாஸ்டிக் பைகள், பீர் பாட்டில்கள், களிமண், மூங்கில் போன்ற பொருட்களைக் கொண்டு இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. 2500-க்கும் மேற்பட்ட பீர் பாட்டில்கள் இந்த கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் உதவி
அஜி இந்த வீட்டின் கட்டுமானத்திற்குத் தேவையானப் பொருட்களைப் பற்றி சமூக வலைதளங்களில் மெசேஜ் பதிவிட, அது வைரலானது. அவருக்குத் தேவையான பொருட்களும் கிடைத்தன.
இந்த வீட்டில் இரண்டு அறைகள், ஒரு ஹால், கிச்சன், டாய்லெட் போன்றவை உள்ளன. நண்பர்களின் உதவியுடன் களிமண் கொண்டு வெளிப்புற சுவர்களில் கலை வேலைப்பாடுகள் செய்திருக்கிறார்.
இன்று எல்லோரும் அஜியின் வீட்டைப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். குறைந்த விலையிலான இப்படிப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகள் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்கின்றனர் இந்தத் தம்பதி.
தமிழில்: ஸ்ரீவித்யா