'வாழ்க்கையில் எல்லாம் இப்போது ஒரு சிறிய போனஸ்' - புற்றுநோயை வென்ற Zerodha நிதின் மற்றும் மனைவி சீமா பாட்டில்!
இந்தியாவின் பிரபலமான பங்குச் சந்தை மற்றும் நிதிச் சேவை நிறுவனமான ஜீரோதாவின் நிறுவனர்களான நிதின் காமத் மற்றும் அவரது மனைவி சீமா பட்டீலின் வணிக வெற்றி இன்றைய தலைமுறையினர் கற்று தீர வேண்டிய ஒன்றாக எண்ணும் வேளையில், அவர்களது மணவாழ்க்கையும் தம்பதியினர்களுக்கான பாடமாகும்.
இந்தியாவின் பிரபலமான பங்குச் சந்தை மற்றும் நிதிச் சேவை நிறுவனமான
-வின் நிறுவனர்களான நிதின் காமத் மற்றும் அவரது மனைவி சீமா பட்டீலின் வணிக வெற்றி இன்றைய தலைமுறையினர் கற்றுத் தீர வேண்டிய ஒன்றாக எண்ணும் வேளையில், அவர்களது மணவாழ்க்கையும் தம்பதியினர்களுக்கான பாடமாகும். ஏனெனில், மனைவி சீமா மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட, அதனை தம்பதியினரும் இருவரும் சேர்ந்து எதிர்த்து போராடி மீண்டு வந்துள்ளனர்.அந்த அனுபவங்களை யுவர்ஸ்டோரியின் நிறுவனர் ஷ்ரத்தா ஷர்மாவுடனான உரையாடலில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
சீமாவும் நிதினும் பெங்களூரில் உள்ள டயல்-எம் என்ற கால் சென்டரில் பணிபுரிந்த போது தான் முதன் முதலில் சந்தித்துள்ளனர். பிறகு, அங்கிருந்து சீமா சிங்கப்பூருக்குச் சென்ற போதிலும், இருவரும் பழகி வந்தனர். 2008ம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், 2011ம் ஆண்டில் அவர் தனது பங்குத் தரகு நிறுவனமான 'ஜீரோதா'வில் இணைவதற்காக இந்தியா திரும்பி உள்ளார். 2015ம் ஆண்டு தம்பதியினருக்கு மகன் பிறந்துள்ளார். அவனுக்கு கியான் என்று பெயரிட்டு மகிழ்வுடன் வாழ்ந்துள்ளனர்.
இந்நிலையிலே... நவம்பர் மாதம், 2021ம் ஆண்டில் ஒரு நாள்... நிதினும், சீமாவும் அவர்களின் வருடாந்திர விடுமுறையை எங்கு கழிப்பதென மும்மரமாக ஆராய்ந்து கொண்டிருந்தனர். அதே சமயம், அவர்கள் மற்றொரு விடயத்திற்காகவும் காத்து கொண்டிருந்தனர். அது சீமாவின் உடல்நல பரிசோதனையின் முடிவுகள்.
சீமா அவரது வருடாந்திர உடல்நலப் பரிசோதனையின் முடிவுகளுக்காகக் காத்திருந்தார். முந்தைய ஆண்டிகளின் முடிவுகள் போல் அவ்வாண்டில்லை. பரிசோதனையின் முடிவுகளில், அவரது வலது மார்பகத்தில் ஒரு சிறிய கட்டி இருப்பது தெரியவந்தது.
தொடக்கத்தில், சீமா தைரியமாக எதிர்கொண்டாலும், நாட்கள் ஓட அவருள் குழப்பம் நிலவியது. சீமாவும் நிதினும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசத் தொடங்கியபோது, அவர்கள் மார்பகப் புற்றுநோயின் முழு யதார்த்தத்தை எடுத்துரைத்தனர்.
"இது போன்ற சங்கடங்கள் நிகழுகையில் எதிர்கொண்டவரின் முதல் எதிர்வினை 'எனக்கு ஏன்?' என்பதாகவே இருக்கும். ஆனால், என் விஷயத்தில் நான் முதலில் கடவுளுக்கு நன்றி தெரிவித்தேன். ஏனெனில், என் அன்புரிகுரியவர்கள் யவரும் இந்நோயால் தாக்கபடவில்லை..." என்று ஷ்ரத்தா ஷர்மாவுடன் உரையாடிய சீமா கூறினார்.
மார்பக புற்றுநோயிலிருந்து மீட்ட ஹாஸ்ய உணர்வு
இந்தியப் பெண்களிடையே அதிகம் காணப்படும் புற்றுநோய், மார்பகப் புற்றுநோயாகும். 1,00,000 பெண்களில் 26 பேர் தங்கள் வாழ்நாளில் மார்பகப் புற்றுநோயை எதிர்கொள்கிறார்கள் என்று தரவுகள் கூறுகின்றன. இருப்பினும், புற்றுநோய் தாக்குதலுக்கான சரியான காரணங்கள் கண்டுபிடிக்கபடாமலே இருக்கிறது. சீமாவின் விஷயத்தில் அவரது சிகிச்சை காலம் 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை இருக்கலாம் என்று மருத்துவர்களால் கூறப்பட்டுள்ளது.
அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் நிபந்தனையற்ற ஆதரவாலும், குறிப்பாக அவரது கணவர் நிதின், சீமாவின் மார்பக புற்றுநோயால் ஏற்பட்ட அனுபவங்களை இணையதளத்தில் பதிவு செய்யுமாறு ஊக்குவித்துள்ளார்.
"எங்களது பிரச்னையை பெரிதாக்கி பார்த்து கவலையுறாமல், எங்களுக்குள்ளே கேலிச் செய்து ஏமாற்றிக் கொண்டு இக்கடினமான பயணத்தை கடந்தோம். நோயின் தாக்கத்தால் நாங்கள் பாதிக்கப்பட்டோம், அதில் சந்தகேமில்லை. ஆனால், அதை நகைச்சுவையுடன் சமாளிக்க முடிவு செய்தோம்," என்று நிதின் கூறுகிறார்.
இங்கு புற்றுநோய் என்பதே பேசாபொருளாக உள்ள நிலையில், மார்பகப் புற்றுநோயோ தடைச் செய்யப்பட்ட தலைப்பாக உள்ளது. சமூகம் அதை மூடிமறைக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறது. சீமாவும் நிதினும் இதற்கு நேர் எதிர்மாறாகச் செய்தனர். தம்பதியினர் முலையழற்சியை பேசாத் தலைப்பாக மாற்றுவதற்கு மாறாக நேரடியாக உரையாற்றினர். சீமா அவரது முலையழற்சி பற்றிய உரையாடலை விவாதமாக மாற்றினார்.
நித்தினைப் பொறுத்தவரை, ஜீரோதாவில் முழுநேர வேலையைக் கையாளும் அதே வேளை சீமாவை கவனித்துக்கொண்டு இரண்டையும் சமநிலையும் எடுத்து செல்வது கடினமாக இருந்துள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இருவரும் ஒன்றாகக் கழித்ததால், அவர்கள் அதை செயல்படுத்தியுள்ளனர்.
"நாங்கள் 2001 முதல் டேட்டிங் செய்து வருகிறோம், மேலும் பல விஷயங்களை ஒன்றாகச் செய்துள்ளோம். அதனால் அவளுக்கு மார்பக புற்றுநோய் தாக்கியது, உடல் அம்சத்தில் ஏற்பட்ட பாதிப்பாக மட்டுமே தெரிந்தது, அப்பிரச்னை என்னைத் தொந்தரவு செய்யவில்லை. நாங்கள் நகைச்சுவையுடன் கடினமான சூழ்நிலையை கையாளக் கற்றுக் கொண்டோம், ” என்று நிதின் கூறுகிறார்
நெருக்கடி உண்டாக்கிய நெருக்கம்...
புற்றுநோய் சிகிச்சைகளுக்கு ஒன்றாகவே இருவரும் சென்றதும், ஒன்றாக பயணத்தை கடந்ததும் இருவருக்கிடையேயான உறவை வலுப்படுத்தியதாக தெரிவித்தனர். உதாரணமாக, தம்பதியர் சண்டையிட்டுக் கொள்ளும் சூழ்நிலைகளை அமைதியாக இருந்து கையாள்வதை கற்று கொண்டுள்ளனர்.
"எங்களிடம் விவாதங்கள் உள்ளன, வாதங்கள் அல்ல. ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும் போது நமது துணைகள் ஒருபோதும் மாற மாட்டார்கள் என்று நம்மில் பலரும் தவறாக எண்ணிக் கொள்கிறோம். ஆனால் அப்படி இல்லை, இல்லையா? மக்கள் மாறுகிறார்கள். எனது புற்றுநோய் பயணம் முழுவதும் நிதின் என்னுடன் இருந்தார் என்பது எனக்கு முக்கியமானது," என்றார் சீமா.
புற்றுநோயை எதிர்த்து பல மாதங்களாக போராடியதில், மருத்துவமனைக்கு உள்ளும், வெளியும் நிலவிய சூழ்நிலைகளை கவனித்த தம்பதியினர், மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை பரப்ப வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளனர். நோயறிதல் பற்றி எழுதுவதற்கு சீமாவை அவர் ஊக்குவித்து மட்டுமின்றி, அதைப் பற்றி அவரது சமூக ஊடகங்களிலும் பதிவிட்டுள்ளார். அது பல காலமாக டாபூ டாபிக்காக மார்பக புற்றுநோய் விளங்குவதை சுட்டிக்காட்டி, அத்தடையை உடைத்தறெிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி சமூக ஊடகத்தில் கவனத்தை ஈர்த்தது.
"எங்கள் கதையைப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தோம். ஆரோக்கியமாக இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறோம். ஏனெனில், இது போன்ற சூழ்நிலைகளில் இருந்து வேகமாக மீள இது உதவுகிறது. வாழ்க்கை ஒரு மாரத்தான், அதை நான் ஸ்ட்ராங்காக முடிக்க வேண்டும். இங்குள்ள அனைவரும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு உயிர்வாழ முடிந்தால், மருத்துவ அறிவியலில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான முன்னேற்றத்தின் காரணமாக நாம் மிக நீண்ட காலம் வாழ்வோம்," என்கிறார் நிதின்.
"வாழ்க்கையில் எல்லாம் இப்போது ஒரு சிறிய போனஸ்"
ஒரு காலத்தில் இருவரது வாழ்க்கையின் இலக்குகளும் வெவ்வேறாக இருந்தன. உலகம் முழுவதும் சுற்றி திரிந்து, அனுபவத்தை சேகரிப்பதே அன்றைய இலக்காக இருந்துள்ளது. இன்றோ, சமூகத்துக்கு திருப்பி அளிப்பதே இலக்கு. பணம் என்பது வெறும் பொருளே. அதனாலே, அவர்கள் தொடங்கியுள்ள இலாப நோக்கற்ற அமைப்பான 'ரெயின்மேட்டர் அறக்கட்டளை' மூலம், தம்பதியினர் அவர்களால் இயைந்த பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
"இப்போதெல்லாம் பணத்தை செலவழிப்பதால் மகிழ்ச்சி கிட்டுவதில்லை. தொழில்முனைவோருக்கு உதவுவதாலோ, சமூக காரணங்களில் பங்கெடுத்து கொள்வதிலே மகிழ்ச்சி கிடைக்கிறது," என்கிறார் நிதின்.
சீமாவைப் பொறுத்தவரை, அவரது உண்மையான ஆர்வத்தை மீண்டும் கண்டறியும் பயணம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. ஜீரோதாவின் ஆரம்ப கட்டங்களில் காமத் சகோதரர்களுக்கு அவர் உதவியிருந்தாலும், நிதி அவருக்கு விருப்பமான ஒன்றல்ல. நித்தினுடன் சேர்ந்து, அடுத்து என்ன செய்வது என்று அடையாளம் காணும் பாதையில் அவர் சென்று கொண்டிருக்கிறார்.
சீமாவிடம் இன்னும் எல்லாவற்றிற்கும் பதில்களில்லை. ஆனால், அவர் நிற்கும் இடத்திலிருந்து, அவருக்கு உலகம் பிரகாசமாகத் தெரிகிறது.
"வாழ்க்கையில் எல்லாம் இப்போது ஒரு சிறிய போனஸ் போல் தெரிகிறது" என்று கூறிமுடித்தார்.