RuPay டெபிட் கார்டில் இன்சூரன்ஸ் தொகையை கிளைம் செய்வது எப்படி? Step-by-Step Guide!
ரூபே டெபிட் கார்டு பயனர்கள் அதில் உள்ள இலவச விபத்து காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிந்திருக்க மாட்டார்கள். இது விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு அல்லது நிரந்தரமாக ஊனமடைதல் போன்ற பாதிப்பு ஏற்படும் போது இந்தத் தொகையை பெற முடியும். அது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
ரூபே டெபிட் கார்டு பயன்படுத்தி வரும் பெரும்பாலான பயனர்கள் அதில் உள்ள இலவச விபத்து காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிந்திருக்க மாட்டார்கள். இது விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு அல்லது நிரந்தரமாக ஊனமடைதல் போன்ற பாதிப்பு ஏற்படும் போது இந்தத் தொகையை பெற முடியும். அது குறித்த விவரத்தை விரிவாக பார்ப்போம்.
நமது கைவசம் உள்ள டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். அதை கொண்டு ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கவும், ஷாப்பிங் மால்களில் உள்ள பிஓஎஸ் இயந்திரங்களில் கார்டை பயன்படுத்தியும் பணம் செலுத்துகிறோம். இதோடு, சேர்த்து அந்த கார்டுகளை வழங்கும் நிறுவனங்களும், வங்கியும் இணைந்து சில கட்டனமில்லாத சலுகைகளை வழங்குகின்றன. இருப்பினும், இந்த சலுகைகளை பெற பயனர்களுக்கு சில விதிமுறைகள், நிபந்தனைகள் உள்ளன.
இந்தியாவில் மாஸ்டர்-கார்டு, விசா, ரூபே உள்ளிட்ட பேமெண்ட் கார்டு சர்வீரஸ் நெட்வொர்க்குகள் செயல்பாட்டில் உள்ளன. இதில், மாஸ்டர்-கார்டு, விசா வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமானது. ரூபே, இந்தியாவின் உள்நாட்டு பேமெண்ட் கார்டு சேவை வழங்குநராக உள்ளது. இதை நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (NPCI) கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கியது. இப்போது இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ரூபே கார்டுகளை தான் வழங்கி வருகிறது.

இந்நிலையில், ரூபே டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வரும் பயனர்களில் பெரும்பாலானவர்கள் அறியாத முக்கிய அம்சம் குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், இது மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு அல்லது ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைம் சார்ந்தது அல்ல. இதை தனிநபர் விபத்து காப்பீடு என்றும் சொல்லலாம். விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு அல்லது நிரந்தரமாக ஊனமடைதல் போன்ற பாதிப்பு ஏற்படும் போது இந்தத் தொகையை பெற முடியும்.
டெபிட் கார்ட் மூலம் இன்சூரன்ஸ் கிளைம் பெறுவது எப்படி?
ரூபே கார்டு வகைகள்:
கிளாசிக் கார்டு, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கார்டு (PMJDY) மற்றும் ப்ரீமியம் கார்டு மற்றும் ரூபே ‘செலக்ட்’ கார்டுகள் என பலவகை ரூபே கார்டுகள் வழங்கப்படுகின்றன. பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கார்டில் பழைய மற்றும் புதிய கார்டுகள் உள்ளன. அதே போல, ப்ரீமியம் கார்டு பிரிவில் பிளாட்டினம் கார்டு உள்ளிட்டவை உள்ளன.
இதற்காக இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் ரூபே ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதில் ப்ரீமியம் கார்டு வகைகளுக்கு டாடா ஏஐஜி நிறுவனம் இன்சூரன்ஸ் கவரேஜை வழங்குகிறது. PMJDY கார்டுகளுக்கு நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனம் கவரேஜை வழங்குகிறது. இதற்கான ப்ரீமியத்தை என்பிசிஐ வழங்குகிறது.

தகுதி மற்றும் நிபந்தனைகள் என்ன? -
2025-26 நிதி ஆண்டுக்கான ரூபே கார்டு இலவச விபத்து காப்பீட்டுத் திட்டம் சார்ந்து பிளாட்டினம் ரூபே கார்டு தகுதி மற்றும் நிபந்தனைகள் என்னென்ன என பார்ப்போம்…
- பிளாட்டினம் கார்டு: இந்த திட்டத்தின் கீழ் பிளாட்டினம் ரூபே கார்டு பயனர்கள் ரூ.2 லட்சம் வரையும், செலக்ட் ‘ரூபே’ கார்டு (அதாவது, Higher வேரியன்ட் கார்டு) பயனர்கள் ரூ.10 லட்சம் வரையும் கிளைம் தொகையை பெற முடியும்.
- விபத்து ஏற்பட்ட தேதிக்கு 30 நாட்களுக்கு முன்னதாக ரூபே பிளாட்டினம் கார்டு பயனர்கள் அதை பயன்படுத்தி இருக்க வேண்டும். அதை ஏதேனும் ஒரு பிஓஎஸ் இயந்திரம் அல்லது ஆன்லைன் மூலம் மின்னணு பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும்.
- ஏடிஎம் பரிவர்த்தனைகள் மேற்கொண்டிருந்தால் இந்த சலுகை/திட்டத்தை பெறுவதற்கான தகுதி கிடையாது.
- PMJDY கணக்கு கார்டு: PMJDY கணக்கின் கீழ், பழைய ரூபே கார்டு (ஆகஸ்ட் 28, 2018 வரை) வைத்துள்ள பயனர் என்றால் ரூ.1 லட்சம் வரை கிளைம் தொகை பெற முடியும்.
- PMJDY கணக்கின் கீழ் புதிய ரூபே கார்டு (ஆகஸ்ட் 28, 2018 பிறகு) வைத்துள்ள பயனர் என்றால் ரூ.2 லட்சம் வரை கிளைம் தொகை பெற முடியும்.
- விபத்து ஏற்பட்ட தேதிக்கு 90 நாட்களுக்கு முன்னதாக PMJDY கணக்கு வைத்துள்ள ரூபே கார்டு பயனர்கள் அதை பயன்படுத்தி இருக்க வேண்டும். அந்த கார்டை பயன்படுத்தி ஏதேனும் ஒரு ஏடிஎம் மையம், ஆன்லைன் பரிவர்த்தனை, பிஓஎஸ் பரிவர்த்தனை மேற்கொண்டிருக்க வேண்டும்.
- இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருக்கின்ற போது கார்டு பயனருக்கு விபத்து ஏற்பட்டாலும் இந்த திட்டத்தின் மூலம் பலன் பெற முடியும். இருப்பினும், கிளைம் தொகை இந்திய ரூபாய் மதிப்பில் மட்டுமே வழங்கப்படும்.

கிளைம் பெறுவது எப்படி?
- கிளைம் வேண்டும் என்பது குறித்த விவரத்தை சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம், வங்கி உள்ளிட்டவற்றுக்கு தெரிவிக்க வேண்டும்.
- தொடர்ந்து கிளைம் தொடர்பான விண்ணப்ப படிவம் மற்றும் தேவைப்படும் பல்வேறு ஆவணங்களை இணைத்து இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
- அப்படி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை ஏற்றுக் கொண்ட நாளில் இருந்து 30 நாட்களுக்கு கிளைம் தொகை பயனர் அல்லது அவரது Nominee/வாரிசுதாரருக்கு வழங்கப்படும்.
- விபத்து ஏற்பட்ட 90 நாட்களுக்குள் அது குறித்த விவரத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும்.
- எதிர்பாராத விபத்து சம்பவத்துக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும்.
- கார்டு பயனர் தனிநபர் விபத்து காப்பீட்டை வேறு வங்கியில் வைத்து இருந்தாலும் இது Additional Cover என்ற வகையில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
- Joint Account வைத்திருந்தால் அதில் பிரைமரி கணக்கு தாரருக்கு மட்டுமே இந்த விபத்து காப்பீடு பொருந்தும். அப்படி இல்லாமல் மற்றொரு கணக்குதாரரும் தனது பெயரில் கார்டு வைத்திருந்து, அதற்கான ப்ரீமியத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு என்பிசிஐ வழங்கி இருந்தால் அவரும் இந்த திட்டத்தின் கீழ் விபத்து காப்பீடு பெற தகுதி ஆவார்.
- கிளைம் தொகையை பாதிக்கப்பட்ட கார்டு பயனர் அல்லது அவரது வங்கிக் கணக்கின் Nominee அல்லது அவரது சட்டப்படியான வாரிசுகள் பெறலாம்.
நகைக்கடனுக்கு புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன? - ஆர்பிஐ திட்டம் | YS தமிழ் Explainer
Edited by Induja Raghunathan

