‘50/30/20’ உங்கள் கடன் தொல்லையை நீக்கும் 'விதிமுறை'யைப் பின்பற்றுவது எப்படி?
மாதச் சம்பளம் ரூ.45,000. இ.எம்.ஐ-15,000, வாடகை-9,000, வீட்டுச் செலவு -10,000, கிரெடிட் கார்டு-5,000, இதர செலவுகள்-6,000. இதில் எதிர்பாராத செலவுகள் வந்துவிட்டால், நண்பர்களிடம் கடன் வாங்குவதைத் தவிர வேறு என்ன வழி...?
அவருக்கு மாதச் சம்பளம் ரூ.45,000. மாதம்தோறும் செலுத்தும் இ.எம்.ஐ ரூ.15,000, வீட்டு வாடகை ரூ.9,000, வீட்டுச் செலவு ரூ.10,000, கிரெடிட் கார்டு மினிமம் பேலன்ஸ் - கடன் வட்டித் தொகை ரூ.5,000 மற்றும் இதர செலவுகள் ரூ.6,000. இந்தக் கணக்கீட்டில் ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் கூடுதலாகவும், சற்றே குறைவாகவும் வரும்.
எதிர்பாராத செலவுகள் ஏதேனும் வந்துவிட்டால், நண்பர்களிடம் கடன் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லாத நிலை. அப்படி வாங்கியக் கடன்களைத் திரும்பச் செலுத்தவும் படாதபாடுபடுவார். அதுபோன்ற தருணங்களில், நம் ஆரம்பப் பள்ளிக் காலத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட கணக்குப் பாடம்தான் அவருக்குக் கைகொடுக்கும். ஆம், 'கடன் வாங்கி கழித்தல்' என்ற பாடம்தான் அது.
ஒருமுறை அவருக்கு கடும் பணநெருக்கடி. அப்போது அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. "சார், உங்க பர்சனல் லோன் பேஸ் பண்ணி ரூ.2 லட்சம் டாப்-அப் அப்ரூவ் ஆயிருக்கு. வேணுமா? ப்ராசஸ் பண்ணட்டுமா?" என்று மனதுக்கு இதம் தரும் குரல் பேசியது.
அவர் கொஞ்சம் யோசிக்கவில்லை. "யெஸ், ப்ளீஸ்..." என்றார். அந்த அளவுக்குக் கடன் நெருக்கடி. வழக்கமான வேலைகளை செய்ய முடியாத அளவுக்கு மண்டை குடைச்சல். டென்ஷனும் கோபமும் பொத்துக்கொண்டு வரும் அளவுக்கு மன அழுத்தம்.
அடுத்த நாளே அவரது வங்கிக் கணக்கில் ரூ.2 லட்சம் வந்து விழுந்தது. மட்டற்ற மகிழ்ச்சி. உடனடியாக கிரெடிட் கார்டு கடனை செலுத்தினார். நண்பர்களிடம் இருந்து வாங்கிய கடன்களை கூட்டிப் பார்த்து அடைத்தார். மீதமிருந்த தொகையில் தன் அன்பு மகளுக்கு ஒரு சைக்கிளையும் வாங்கிப் பரிசளித்தார்.
பாழாய்ப்போன சம்பளத் தேதி அடுத்த மாதமும் வந்து தொலைத்தது...
ஏற்கெனவே கட்டிய இ.எம்.ஐ தொகை ரூ.15,000 உடன் கூடுதலாக ரூ.8,000 மாதத்தவணை செலுத்தினார். வழக்கம்போல் அனைத்து செலவும் போக மிச்சம் ஏதுமில்லை. மாறாக, அந்த மாதத்தைக் கடத்த ரூ.5,000 தேவைப்பட்டது. பாவம் என்ன செய்வார்? நண்பர்களின் உதவியை மீண்டும் நாடினார்... சமையல் பொருள்கள் வாங்குவதற்குக் கூட கிரெடிட் கார்டை தேய்த்தார்... இப்படியாகச் சுழலத் தொடங்கியது அவரது வாழ்க்கை.
அவர் யார்?
பொருளாதார நடுத்தரக் குடும்பத்தை நிர்வகிக்கும் எவர் வேண்டுமானாலும் அவராக இருக்கலாம்; இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களாகவும் இருக்கலாம்; இவ்வளவு ஏன்... இதை எழுதிக் கொண்டிருக்கும் நானாகவும் இருக்கலாம்.
ஆக, அவர் யார் என்பது இங்கே முக்கியமில்லை. குடும்ப பட்ஜெட்டையும், தனிநபர் நிதி நிர்வாகத்தையும் அவரால் சரியாகச் செய்ய முடியவில்லையே என்பதுதான் இங்கே முக்கியம்.
இந்த நிதி நிர்வாகச் சிக்கலுக்குத் தீர்வு உண்டு. அந்தத் தீர்வுக்குப் பெயர் '50/30/20 விதிமுறை'
மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர், சிறுதொழில் புரியும் நடுத்தர வர்க்கத்தினர் முதலானோரின் வீட்டு பட்ஜெட்டுக்கு இந்த விதிமுறை உறுதுணைபுரியும். அதாவது, கடன் நெருக்குதலைத் தவிர்த்து, சற்றே நிம்மதியுடன் வாழ்வதற்கு வழிவகை செய்யும் என்றும் சொல்லலாம்.
இங்கே 50/30/20 என்பது சதவீதத்தைக் குறிக்கும். ஒருவரின் மாத வருமானத்தில் 50 சதவீத தொகையை அடிப்படையான - அத்தியாவசியமானவற்றுக்குச் செலவிட வேண்டும். வீட்டுக் கடன் அல்லது வீட்டு வாடகை, தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டு மளிகைச் செலவு, கல்விக்கான செலவுகள், மருத்துவச் செலவுகள் முதலானவை இதில் அடங்கும்.
இந்த பட்ஜெட் விதிமுறையில் 30% தொகை என்பது நம் குடும்பத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டவை. அது இன்ஷூரன்ஸாகவும் இருக்கலாம்; வீட்டுக்குத் தேவையான டிவியாகவும் இருக்கலாம்; வார இறுதிகளில் மகிழ்ச்சிக்கு துணைபுரியும் செலவினமாகவும் இருக்கலாம்; நம் வேலைக்கு உதவக் கூடிய லேப்டாப் ஆகவும் இருக்கலாம்; புதிய மாடல் செல்ஃபோனாகவும் இருக்கலாம். இப்படி எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
அடுத்து, எஞ்சிய 20% தொகைதான் மிகவும் முக்கியமானது. இந்தத் தொகையை சேமிக்கவோ அல்லது முதலீடு செய்யவோ பயன்படுத்த வேண்டும். இதுதான் நம் எதிர்காலத்தில் ஆபத்தில் உதவும் உற்றத்தோழனாக இருக்கும்.
சட்டங்களே திருத்தப்படும்போது, இதுபோன்ற பட்ஜெட் விதிமுறைகளை காலத்துக்கு ஏற்றார்போல் திருத்திக் கொள்வதில் தவறில்லைதானே?!
ஆம், மிகவும் இக்கட்டான பணநெருக்கடிச் சூழல் கொண்டிருப்பவர்கள். இந்த விதிமுறைகளை சற்றே மாற்றியும் பின்பற்றலாம். அதாவது, 50% தொகையை மாதத்தவணைகளுக்கும், 30% தொகையை அத்தியாவசியத் தேவைகளுக்கும், 20% தொகையை சேமிப்பு / முதலீட்டுக்கும் பயன்படுத்தலாம்.
ஒருவேளை, நமது நிதி நிர்வாகத்தில் இந்த ஃபார்முலாவைப் பின்பற்ற முடியாத அளவுக்கு நெருக்குதலில் இருப்பதாக உணர்ந்தால், நிச்சயம் அது கடன் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். குறிப்பாக, கிரெடிட் கார்டு கடன்கள், நண்பர்களிடம் அவசரத்துக்கு வாங்கிய கடன்கள், நகைகளை அடமானம் வைத்து வாங்கிய கடன்கள், அதிஅவசரத் தேவைக்கு வாங்கிய கடன்கள் என பட்டியல் நீளலாம். அவற்றை திருப்பி செலுத்த முடியாத நிலையால், மீண்டும் மீண்டும் கடன் வாங்கிக் கழித்து கடன் தொல்லைகளில் நீந்திக்கொண்டே இருக்க வேண்டிய சூழல் வரலாம்.
இதுபோன்ற சூழல்களில், இரண்டு விஷயங்கள் நமக்குக் கைகொடுக்கும். ஒன்று, தேவைக்கும் விருப்பத்துக்கும் வித்தியாசம் அறிந்து செலவு செய்யத் தொடங்குவது. அதாவது, நம் அன்றாட வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும். ஆடம்பரம் என்னும் வார்த்தையையே மறந்துவிட வேண்டும். நாம் விரும்பும் அனைத்தையும் வாங்க வேண்டும்; செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும்.
இன்னொன்று, கழுத்தை நெறிக்கும் கடன்களை அடைத்தல். நம்மிடம் நகை முதலான சொத்துகள் இருப்பின், அவற்றின் ஒரு பகுதியை விற்றுவிட்டு, அந்தத் தொகையை வைத்து முக்கியக் கடன்களை அடைக்க வேண்டும். அந்தக் கடன்களை அடைப்பதன் மூலம் மாதத் தவணைகளையோ அல்லது வட்டியையோ மாதம்தோறும் அதிகளவில் மிச்சப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். பிற்காலத்தில் இயல்புநிலைத் திரும்பிய பிறகு, அந்தச் சொத்துகளை வாங்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
'இதலாம் சொல்வது எளிது, செய்வதுதான் கஷ்டம்' என்ற பலரது மைண்ட் வாய்ஸை எளிதில் கேட்க முடிகிறது.
ஆம், சில விதிமுறைகளையும், வழிமுறைகளையும் சொல்வது எளிதுதான். ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு செயலில் இறங்கினால் மட்டுமே உணரமுடியும், நமக்குக் கிடைக்கக் கூடிய மகத்தான பலன்களை!
மன உறுதியுடன் செயலில் இறங்குங்கள். அட்வான்ஸ் வாழ்த்துகள்!
- ப்ரியன்