வங்கிகளின் கடன் திருவிழாவில் ரூ.81,700 கோடி கடன் வழங்கப்பட்டது!
வங்கிகளிடம் போதிய பணப் புழக்கம் இருப்பதாகவும், பெரிய நிறுவனங்கள், சிறிய நிறுவனங்களுக்கான நிலுவைத்தொகையை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
அக்டோபர் 1ம் தேதி முதல் வங்கிகள் நடத்திய கடன் திருவிழா காலத்தில், ரூ.81,781 கோடி மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"ரூ. 81,781 கோடி மதிப்பிலான கடன் இந்த காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதில் புதிய கடன் ரூ.34,342 கோடி ஆகும்," என்று நிதிச்செயலாளர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
மேலும், வங்கிகளிடம் போதிய பணப் புழக்கம் (லிக்விடிட்டி) இருப்பதாகவும், குறு, சிறு மற்றும் நடுத்தர (எம்.எஸ்.எம்.இ) நிறுவனங்களுக்கு பெரிய நிறுவனங்கள் உரிய காலத்தில் பணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சிறு நிறுவனங்களுக்கான பணப் புழக்கத்தை உறுதி செய்ய பெரிய நிறுவனங்களிடம் இருந்து வரவேண்டிய தொகை மீது சிறு நிறுவனங்களுக்கு பில் டிஸ்கவுண்டிங் வசதி அளிக்குமாறு வங்கிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
வர்த்தக விவகார அமைச்சகத்திடம் பெரிய நிறுவனங்கள் சமர்பித்துள்ள தகவல்களின் படி, எம்.எஸ்.எம்.இ துறைக்கு ரூ.40,000 கோடி வழங்கப்பட வேண்டியிருப்பதாகவும், தீபாவளி பண்டிக்குக்கு முன் இந்த நிலுவைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த மாதத் துவக்கத்தில், பண்டிகை கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 250 மாவட்டங்களில் முதல் கட்டமாக கடன் திருவிழா நடத்தப்படும் என்று அரசு தெரிவித்தது. கடன் வழங்குதலை ஊக்குவிக்கும் வகையில், 400 மாவட்டங்களில் கடன் திருவிழாக்களை நடத்துமாறு செப்டம்பர் மாதம் பொத்துறை வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டன.
அக்டோபர் 3ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு, ரீடைல் விவசாயம், வாகனம், கல்வி, எம்.எஸ்.எம்.இ., உள்ளிட்ட துறைகளில் உடனடி கடன் வழங்கப்பட்டன.
ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பரோடா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி உள்ளிட்ட வங்கிகள் பண்டிகை காலத்தேவைக்கு ஈடு கொடுக்க தங்களை தயார் செய்து கொண்டுள்ளன. முதல் கட்ட கடன் திருவிழாவில், ஸ்டேட் வங்கி 48 மாவட்டங்களில் முன்னணி வங்கியாகவும், பரோடா வங்கி 17 மாவட்டங்களில் முன்னணி வங்கியாகவும் திகழ்ந்தன.
அதே நேரத்தில், பரோடா வங்கி தனது கிளைகள் மூலம் பரோடா கிசான் பக்வாடா திட்டத்தையும் செயல்படுத்தி வருவதாக பரோடா வங்கி தெரிவித்துள்ளது.
செய்தி: பிடிஐ | தமிழில் : சைபர்சிம்மன்