இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 52 ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள்; அதானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அம்பானி!
2023ம் ஆண்டிற்கான நாட்டின் பணக்காரர்கள் பட்டியலை ஹுருன் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 52 ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் இடம் பிடித்துள்ளனர்.
2023ம் ஆண்டிற்கான நாட்டின் பணக்காரர்கள் பட்டியலை ஹுருன் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 52 ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் இடம் பிடித்துள்ளனர்.
ஹுருன் இந்தியா மற்றும் 360 ஒன் வெல்த் இணைந்து ஒரு கணக்கெடுப்பை நடத்தி, '360 ஒன் வெல்த் ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2023' -ஐ வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 30ம் தேதி வரை தனிநபர்கள் வைத்திருக்கும் சொத்துக்களின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. நாட்டின் 138 நகரங்களைச் சேர்ந்த 1,319 பணக்காரர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் உள்ளனர். 12வது ஆண்டாக இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதானியை பின்னுக்குத் தள்ளிய அம்பானி:
'360 One Wealth Hurun India Rich List 2023' பட்டியலில் அதானி குழுமத்தின் தலைவரான கெளதம் அதானியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
கடந்த பத்தாண்டுகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் $150 பில்லியனுக்கும் அதிகமான முதலீடு செய்துள்ளதாக ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2023 வெளிப்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் உள்ள மற்ற நிறுவனங்களை விட அதிகம்.
2014ம் ஆண்டில் ரூ.1,65,100 கோடியாக இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, ஆகஸ்ட் 2023க்குள் சுமார் ரூ.8,08,700 கோடி, அதாவது, நான்கு மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஓராண்டில் முகேஷ் அம்பானி நெட்வொர்த் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
![Rich](https://images.yourstory.com/cs/18/536edf40e52011e9bc420fad7003cf62/full-1697013362298.jpg?fm=png&auto=format&w=800)
அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 57% குறைந்துள்ளது. இதனால் அவர் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கௌதம் அதானி நெட்வொர்த் ரூ.4,74,800 கோடியாகும். ஹிண்டன்பர்க் ரிசர்ச்சின் அறிக்கையின் விளைவாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு சரிந்ததே இதற்குக் காரணம் எனக்கூறப்படுகிறது.
இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் நிறுவனர் சைரஸ் எஸ் பூனாவாலா, 2,78,500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்தியாவின் 3வது பணக்காரராக உள்ளார்.
முதல் 10 இடங்களில் வேறு யார் இருக்கிறார்கள்?
ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில், HCL ஷிவ் நாடார் ரூ.2,28,900 கோடி சொத்து மதிப்புடன் 4வது இடத்திலும், கோபிசந்த் ஹிந்துஜா மற்றும் குடும்பத்தினருக்கு ரூ. 1,76,500 கோடி சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் மற்றும் தலைவரான திலீப் ஷங்வி ரூ. 1,64,300 கோடி சொத்து மதிப்புடன் 6வது இடத்தில் உள்ளார்.
ரூ.1,62,300 கோடி சொத்துக்களுடன் LN மிட்டல் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. ராதாகிஷன் தமானி 1,43,900 கோடி சொத்துக்களுடன் 8வது இடத்தில் உள்ளார். கடந்த முறையை விட அவரது சொத்து மதிப்பு சுமார் 18சதவீதம் குறைந்துள்ளதால், மூன்று இடங்கள் சரிந்து 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
![Rich](https://images.yourstory.com/cs/18/536edf40e52011e9bc420fad7003cf62/hurunindiarichlist2023new4-1697013381000.jpg?fm=png&auto=format&w=800)
ரூ.1,25,600 கோடி சொத்துக்களுடன் 9வது இடத்தில் குமார் மங்கலம் பிர்லா & குடும்பமும், நீரஜ் பஜாஜ் & குடும்பத்தினர் 1,20,700 கோடி சொத்துக்களுடன் 10வது இடத்திலும் உள்ளனர்.
360 ஒன் நிறுவனத்தின் இணை நிறுவனரும், இணை தலைமை நிர்வாக அதிகாரியுமான யதின் ஷா கூறுகையில்,
“இந்த 1,319 பேரிடம் தலா ரூ.1,000 கோடி சொத்து உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் அவர்களின் சொத்து மதிப்பு 76 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில், ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் இரண்டு புதிய கோடீஸ்வரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது நாட்டில் 259 பில்லியனர்கள் உள்ளனர். இந்த வருடத்தில் 51 பேரின் சொத்து இரட்டிப்பாகியுள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
ரியல் எஸ்டேட் ஜாம்பவான்கள்:
3,000 கோடிக்கு மேல் சொத்து மதிபுள்ள 1,319 பெயர்களில் 52 பேர் ரியல் எஸ்டேட் துறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கடந்த ஓராண்டில் 11 புதிய பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. பட்டியலின்படி, ரியல் எஸ்டேட் துறையின் ஒருங்கிணைந்த மதிப்பு 27 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் பட்டியலைப் பொறுத்தவரை, DLF இன் ராஜீவ் சிங் மற்றும் குடும்பம் ரூ.78,900 கோடி சொத்துக்களுடன் ஹுருன் இந்தியா பணக்காரர்களின் பட்டியல் 2023 இல் முதலிடத்தைப் பிடித்த்துள்ளார், அதைத் தொடர்ந்து மங்கள் பிரபாத் லோதா மற்றும் மேக்ரோடெக் டெவலப்பர்களின் குடும்பம் ரூ.52,800 கோடி சொத்துக்களுடன் உள்ளன.
கே ரஹேஜா கார்ப் நிறுவனத்தைச் சேர்ந்த சந்துரு ரஹேஜா குடும்பம், 45,700 கோடி சொத்து மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளது.
பில்லியனர்கள் பட்டியலில் நிதித் தலைநகரான மும்பை முதலிடத்தில் உள்ளது, நகரில் 328 பில்லியனர்கள் வசிக்கின்றனர். டெல்லியில் 199 கோடீஸ்வரர்களும், பெங்களூருவில் 100 கோடீஸ்வரர்களும் வசித்து வருகின்றனர்.