சென்னை ஸ்டார்ட்-அப் ‘GoFloaters’ விதை நிதி திரட்டியது!
கனடா நிறுவனத்திடம் இருந்து திரட்டியுள்ள நிதியை நிறுவனம் தனது ஹைபிரிட் பணியிட சேவையை வலுப்படுத்த பயன்படுத்த உள்ளது.
இந்தியாவின் முன்னணி ஹைபிரிட் பணியிட சேவை மேடையான ‘கோ ப்ளோட்டர்ஸ்’ (
) விதை நிதி பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் 220க்கும் மேற்பட்ட முதலீடுகளைக் கொண்டுள்ள கனடாவைச் சேர்ந்த சர்வதேச வென்சர் நிதியான லாயல் விசி இந்த சுற்றுக்கு தலைமை வகித்துள்ளது.இந்த நிதியை தனது ஒருங்கிணைந்த ஹைபிரிட் தீர்வான WorqFlexi சேவையை மேம்படுத்த பயன்படுத்த இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. நிதியின் தொகையை நிறுவனம் வெளியிடவில்லை.
GoFloaters நிறுவனம், எங்கிருந்தாலும் இணைந்து செயல்பட வழி செய்யும் புதுமையான ஒருங்கினைந்த ஹைபிரிட் பணியிட மேடையை உருவாக்கியுள்ளது. சாஸ் யூனிகார்ன் சார்ஜ்பீ, விங்கிபை, நிதி நுட்ப நிறுவனமான பிரான்ச் இண்டர்நேஷனல், கல்வி நுட்ப நிறுவனம் கிராப்ட்ஷாலா, ஐடி சேவை நிறுவனம் Ignitho, Incubyte, NotionPress உள்ளிட்டவை இதன் வாடிக்கையாளர்களாக உள்ளன.
“லாயல் விசியின் இந்த நிதியை பெற உலகில் உள்ள மிகச்சிறந்த நிறுவனங்கள் பலவற்றை மிஞ்சும் வகையில் GoFloaters செயல்பட்டிருக்கிறது,” என லாயல் விசி நிர்வாக பங்குதாரர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.
“நிறுவனங்களுக்கு புதிய ரியல் எஸ்டேட் மாதிரியை அளிக்கும் வகையில் இந்தியா முழுவதும் கூட்டு ஏற்படுத்திக்கொள்வதில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இவர்களுடன் பணியாற்றுவதில் உற்சாகம் கொள்கிறோம் மற்றும் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நிறுவன வளர்ச்சிக்கு எங்கள் வலைப்பின்னல் மூலம் ஆதரவு தருகிறோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
2017ல் ஷ்யாம் சுந்தர் நாகராஜன், ஸ்ரீவத்சன் பத்மனாபன் ஆகியோரால் சென்னையில் துவங்கப்பட்ட GoFloaters பணியிட கபேவுடன் குறைந்த செலவிலான பணி டெஸ்க் மாதிரியை பிரபலமாக்கியது.
இந்நிறுவனம், இந்தியாவின் 40க்கும் மேற்பட்ட நகரங்களில் 2000க்கும் மேற்பட்ட கோவொர்கிங் இடங்கள், மீட்டிங் அறைகள் மற்றும் நீண்ட கால அலுவலக அறைகளை வழங்குகிறது. Wework, Cowrks, 91Springboard, AWFIS, Indiqube மற்றும் ஓயே உள்ளிட்ட கோவொர்கிங் சேவை நிறுவனங்களுடன் கூட்டு மூலம் இந்த சேவையை வழங்குகிறது.
“பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு அலுவலகப் பரப்பில் மாற்றம் தேவைப்படுகிறது. மாபெரும் பதவி விலகல் போக்கு ஆரோக்கியமான பணியிடத் தேவையை உணர்த்தியுள்ளது. ஊழியர்கள் அலுவலக பணிக்காக பயணம் செய்வதை விரும்பவில்லை. அவர்கள் சிறந்த மாற்றை எதிர்பார்க்கின்றனர். இவை எல்லாம் சேர்ந்து, தேவைக்கேற்ற வசதிகள் கொண்ட கோவொர்கிங் மற்றும் ஹைபிரிட் பணி கலாச்சாரத்தை பிரபலமாக்கியுள்ளது,” என GoFloater சி.இ.ஓ ஷ்யாம்சுந்தர் நாகராஜன் கூறியுள்ளார்.
இந்நிறுவனம், தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மெய்நிகர் அலுவலக சேவைகளையும் வழங்குகிறது. பெருந்தொற்றுக்கு பிறகு நிறுவன, மாதாந்திர அடிப்படையில் 100 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.
Edited by Induja Raghunathan