25 நிமிடத்தில் 350கிமீ செல்லும் ஹைப்பர்லூப் வாகனம்: சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை!
மணிக்கு 1200 கிமீ வேகத்தில் செல்லும் Hyperloop தொழில்நுட்பம் சார்ந்த அதிநவீன வாகனத்தை உருவாக்கி அசத்தியுள்ளனர் சென்னை ஐஐடி மாணவர்கள்.
அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொழில்நுட்ப அடிப்படையிலான புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய போட்டியை தற்போது நடத்தி வருகிறது. இந்தப் போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 1,600க்கும் மேற்பட்ட குழுக்கள் கலந்து கொண்டன. அதில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இறுதிப்போட்டிக்கான தகுதி பட்டியலில், 21வது இடத்தைப் பெற்றுள்ளது சென்னை ஐஐடியைச் சேர்ந்த மாணவர்கள் குழு.
30 மாணவர்களைக் கொண்ட இந்த மாணவர்களின் குழுவிற்கு ’அவிஷ்கார்’ என்று பெயர். ஆசியாவிலேயே இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தேர்வான ஒரே குழு என்ற பெருமையை இதன் மூலம் அம்மாணவர்கள் பெற்றுள்ளனர். இந்த குழுவானது, அதிவேக வாகனத்தின் மாதிரியை இந்தப் போட்டியில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அவிஷ்கார் மாணவர் குழுவின் தலைவர் சுயாஷ்சிங் கூறுகையில்,
“எங்கள் குழுவில், மெக்கானிக்கல், சிவில், ஏரோஸ்பேஸ், எலெக்ட்ரிக்கல், என்ஜினியரிங் டிசைன் உள்பட பல்வேறு துறையைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளோம். நிறைய சோதனைகள், ஆய்வுகள், பாதுகாப்பு அம்சங்கள், சாத்தியக்கூறுகள் அடிப்படையில் இந்த வாகனத்தை உருவாக்கியுள்ளோம்,” என்றார்.
அவிஷ்கார் குழு உருவாக்கியுள்ள இந்த மாதிரி வாகனமானது 3 மீட்டர் நீளமும், 120 கிலோ எடையும் கொண்டது. மாதிரி வாகனம் தான் 3 மீட்டர் நீளம் கொண்டது. நிஜத்தில் அது 7 மீட்டர் நீளத்தில் இருக்குமாம். அடிப்பாகமானது அலுமினியத்தில் 14 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக மோனோ ரயிலில் பயன்படுத்தும் தண்டவாள அமைப்பையே மாணவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.
ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் மூலம் செயல்படும் இந்த வாகனமானது, மணிக்கு 1,200 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. அதாவது, அந்த வாகனத்தில் பயணம் செய்தால் 360 கிமீ தூரத்தை 25 நிமிடத்தில் கடந்து விடலாம். இன்னும் சுலபமாக புரியும்படி சொல்வதென்றால், சென்னையில் இருந்து 25 நிமிடத்தில் திருச்சியைத் தாண்டி சென்று விடலாம். கேட்பதற்கே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா. இப்படிப்பட்ட அதிவேக வாகனத்தைத் தான் சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
“இந்த அதிவேக வாகனத்தின் பாதுகாப்புக்கு உதவும் வகையில், பெரும் தேடல்களுக்கு இடையில், அதிவேக மோட்டர், சிறந்த பேட்டரி, பிராக்கிங் அமைப்பு, கன்ட்ரோல் அமைப்பு, அதிர்வு தாங்கிகள், தகவல் தொடர்பு அமைப்பு என அனைத்தையும், மிகச் சிறந்த தரத்துடன் தேடித் தேடி உருவாக்கியுள்ளோம். அதனால்தான் 1600 போட்டியாளர்கள் கலந்து கொண்ட போட்டியில், எங்கள் குழு 21 வது இடத்தை பெற முடிந்தது. இதற்காக பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் எங்களுக்கு உதவி உள்ளது. இதனை மேலும் அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் மேம்படுத்த முடியும்,” என்கிறார் சுயாஷ் சிங்.
இந்த குழுவானது அடுத்த மாதம் 20ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறது. பல்வேறு தரப்பினரும் இந்தக் குழுவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.
ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் :
அமெரிக்க தொழிலதிபரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலன் மஸ்க், செவ்வாய் கிரக ஆராய்ச்சி, டிரைவர் இல்லா கார் என பல்வேறு ஆராய்ச்சிகளில் வெற்றி பெற்றவர். இவர் புதிய அதி விரைவுப் போக்குவரத்துக்கு உதவும் வகையில் ஹைப்பர் லூப் என்ற தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
அதாவது, ஒரு காற்றில்லா குழாய்க்குள், டியூப் மாத்திரை போன்ற ஒரு போக்குவரத்து வாகனத்தை உருவாக்குவது தான் ஹைப்பர் லூப். கடந்த 2013ம் ஆண்டு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் இந்தth திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அப்போது அது ஹைப்பர்லூப் ஆல்பா என அழைக்கப்பட்டது.
இது அதிவேக பேருந்து போக்குவரத்து, ரயில், விமானம், புல்லட் ரயில் ஆகியவற்றின் அடுத்துகட்டமாக, மணிக்கு சுமார் 1200 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் விதமாக உருவாக்குவது இந்த திட்டத்தின் நோக்கம். இது தொடர்பான போட்டியைத் தான் தற்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது.
இந்த திட்டத்தை இன்னும் சில ஆண்டுகளில், அமெரிக்காவில் செயல்படுத்த SpaceX நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த போக்குவரத்து திட்டத்தை உலக அளவில் கொண்டு செல்லவும், இன்னும் மேம்படுத்தும் விதமாகவும், இளம் மாணவர்களிடம் உள்ள திறனை வெளிப்படுத்தும் விதமாகவும் தான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்தப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
“இந்தத் திட்டத்தில் வெற்றிபெற நாங்கள் மிகப்பெரிய முயற்சி மேற்கொண்டுள்ளோம். இது நாட்டின் அடுத்தகட்ட விரைவு பயணத்திற்கு உதவும் முக்கிய தொழில்நுட்பமாக இருக்கப் போகிறது. ஹைப்பர்லூப் எனும் காற்றில்லா குழாய் வாகனப் போக்குவரத்தானது, அதிவிரைவு போக்குவரத்தின் 5 வது நிலையாக இருக்கும்,” என்கிறார் அவிஷ்கார் குழுவிற்கு ஆலோசகராக இருக்கும் ஐஐடி பேராசிரியர் டாக்டர் எஸ்.ஆர்.சக்ரவர்த்தி.
ஹைப்பர் லூப் குழாய்க்குள் காற்று இருக்காது. அதனால் வாகனங்களின் வேகத்தைக் குறைக்கும் உராய்வுக்கும் வாய்ப்பிருக்காது. எனவே தான் அதில், 1200 கிலோ மீட்டர் வேகம் வரை செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளதால், தங்களது வாகனம் பற்றி விரிவாக ஊடகங்களில் பேச மறுத்து விட்டனர் அவிஷ்கார் குழுவினர். காரணம் தங்களது கண்டுபிடிப்பினை மற்றவர்கள் காப்பி அடித்து விடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வு தான். இறுதிப் போட்டி முடிவடைந்த பிறகு, தங்களது வாகனம் பற்றிய ரகசியங்களை வெளிப்படையாக பேசுவோம் என்கின்றனர் இந்த மாணவர்கள்.
எனிவே ஆல் தி பெஸ்ட் ஃபார் தி ஃபைனல்ஸ்...