99 நாட்களில் 14 கோடி தடுப்பூசி: மற்ற நாடுகளை விஞ்சிய இந்தியா!
எட்டு மாநிலங்களில் அதிகபட்சம்!
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின், இரண்டு கோவிட் தடுப்பூசிகளைப் பயன்படுத்தி இந்தியா ஜனவரி மாதம் மக்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியது. தற்போது இரண்டாம் அலை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில்,
"தடுப்பூசி இயக்கம் ஆரம்பித்த ஜனவரி 16ல் இருந்து நேற்றுவரை, நாடு முழுவதும் நடந்த 20,19,263 அமர்வுகள் மூலம் 14,09,16,417 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய எட்டு மாநிலங்களில் இதுவரை 58.83 சதவீத தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன,” சொல்லப்பட்டுள்ளது.
இதில் சுகாதாரத் துறை பணியாளர்கள், 59.95 லட்சம் பேரும், முன்களப் பணியாளர்கள் 62.90 லட்சம் பேரும், இரண்டாம் டோஸ் தடுப்பூசி பெற்று விட்டனர். மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 4.96 கோடி பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், இதே வயது கொண்டவர்கள் 77.20 லட்சம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டுள்ளனர். 45 - 60 வயதினரில் 4.77 கோடி பேர் முதல் டோஸும், 23.30 லட்சம் பேர் இரண்டு டோஸும் பெற்றுள்ளனர்.
உலக அளவில், 14 கோடிக்கும் மேல் தடுப்பூசி செலுத்திய நாடாக மாறியிருக்கிறோம். மிக விரைவாக இதனை நடத்தி காட்டிய நாடாக இந்தியா மாறியிருக்கிறது. இந்த சாதனையை வெறும் 99 நாட்களில் இந்தியா அடைந்தது.
”தடுப்பூசி இயக்கத்தின் 99 ஆம் நாள் ஏப்ரல் 24 அன்று மட்டும் 25,36,612 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படுள்ளன," என்று குறிப்பிட்டுள்ளது.
ஜனவரி 16 ஆம் தேதி நாடு தழுவிய தடுப்பூசி இயக்கம் தொடங்கியது. முதல் கட்டத்தில், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்க்ளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது.
தற்போது மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மேலும், விரைவாக தடுப்பூசி அளவை அதிகரிக்க முடியும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.